கு.ஞானசம்பந்தன் உரை 25.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவின் இலக்கிய அரங்கத்தில் ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டி ஆரம்பமானது. சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய சிறப்பான உரை தந்தார் பேராசிரியர்.
அவர் பேச்சில் என்னைக் கவர்ந்த விஷயங்களை இதில் தொகுக்க விளைகிறேன்.
பழகப் பழக வருவது நான்கு பழக்கங்கள்.
சித்திரம் கைப்பழக்கம்
செந்தமிழ் நாப்பழக்கம்
கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
‘நடை’ என்றால் ‘ஒழுக்கம்’
பிறவியில் மரபு வழியில் பாரம்பரியமாய் வருவது மூன்று.
நட்பு பாராட்டுதல், தயாள குணம் & கொடைத் தன்மை.
அவர் அவர் முதலில் கூறிய,
‘இலை தாண்டிய பயங்கரவாதம்’ ரொம்ப சுவாரசியம்.
அடுத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று, தான் ஒரு மணி நேரம் விவாதித்தக் கதைக்கு பெயர் வைத்தக் கதாசிரியருக்கு (1965 ம் வருடம்) உடனே தனது சட்டைப் பையில் இருந்து ரூபாய் 1001/- எடுத்து அதை அந்த கதாசிரியருக்கு கொடுத்த எம்ஜிஆர் அவர்களின் கொடைத்தன்மையினை சொன்னார்.
எம்ஜிஆர் அவர்களிடமிருந்து பணம் 1001/- பெற்றவுடன் கதாசிரியர் “இப்படி முதலிலேயே தெரிந்திருந்தால் நான் கதைக்கு ‘லட்சத்தில் ஒருவன்‘ அல்லது ‘கோடியில் ஒருவன்’ என்று பெயர் வைத்திருப்பேனே” என்று சொன்னாராம்.
உடனே எம் ஜி ஆர் அவர்கள் அந்தக் கதாசிரியரை கட்டி அரவணைத்துக் கொண்டாராம்.
அடுத்ததாக ‘கொடை’ குறித்து இன்னொரு சம்பவத்தையும் சுவைபடக் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு வறுமையால் வாடும் புலவர் ஒருவர் வந்தார். அங்கிருந்து ‘மிதிலைப்பட்டி’ என்ற ஊருக்கு செல்வதற்கு விசாரித்தார்.
அங்கே ஒரு மாட்டு வண்டிக்காரர் “நான் உங்களை வண்டியில் அழைத்துச் செல்கிறேன். அதற்கு வாடகையாக ஒரு பணம் (192 பைசாக்கள்) வேண்டும்.
மேலும் நாம் அந்த ஊருக்கு போய் சேர்வதற்குள் விடிந்து விடும். எனவே எனக்கு காலைச் சாப்பாடு; எனது மாடுகளுக்கு வைக்கோல் தர வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு புலவர் “தம்பி என்னிடம் இப்போது பணம் எதுவும் இல்லை. ஆனால் நான் காணப் போகும் செல்வந்தரிடம் வாங்கித் தருகிறேன்” என்று கூறி வண்டிக்காரரை அழைத்தார்.
அவரும் “சரி” என்று கூறி புலவரை மிதிலைப்பட்டி நோக்கி அழைத்துச் சென்றார்.
பயணம் தொடங்கியது.
அது இரவு நேரம். நல்ல நிலவு வெளிச்சத்தில் விடிய விடியப் பயணம். வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
வண்டிக்காரர் மெதுவாக புலவரிடம் பேச்சு கொடுத்தார்.
“நீங்கள் மிதிலைப்பட்டிக்கு யாரைப் பார்க்கச் செல்லுகிறீர்கள்? “என்ன விஷயம்? என்று வினாவினார்.
அதற்கு புலவர் “தம்பி ரொம்ப வறுமை வீட்டுல. எனக்கு இந்தப் பாட்டு மட்டும்தான் எழுதத் தெரியும்.
முன்னாடி யெல்லாம் எங்களப் பார்த்துக்கொள்ள இந்தப் பகுதியில் வெங்கலப்ப நாயக்கர் என்று ஒரு செல்வந்தர் இருந்தாரு.
அவரு இருக்குறவரை என் போன்றவர்களுக்கு நிறைய கொடுத்தாரு. இப்போ அந்த கொடை வள்ளல் இல்லை. அதுதான் என் போன்றவர்களை வறுமை வாட்டி எடுக்குது.
இப்போ இந்த மிதிலைப்பட்டி பண்ணையார் நல்லா கவனிக்கிறதா சொல்லுறாங்க.
அவரும் என்னை வரச் சொல்லி இருக்கிறார். அவரைப் பார்த்து வரத்தான் இந்தப் பயணம்” என்றார்.
பேசிக்கொண்டே வந்த புலவர் அப்படியே அசந்து தூங்கிப் போனார்.
‘பொல போல’வென்று விடியுற நேரம் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது.
வண்டிக்காரர் புலவரை எழுப்பினார்.
“அய்யா பண்ணையார் வீடு வந்திருச்சு” என்று கூறவும் புலவர் எழுந்து வண்டியில் இருந்து இறங்கினார்.
அவர் இறங்குவதைப் பார்த்ததும் அந்த செல்வந்தர் புலவரை வந்து நலம் விசாரித்த படியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
அவரிடம் புலவர் “இந்த வண்டிக்காரருக்கு ஒரு பணமும், காலை உணவும், மாட்டுக்கு வைகோலும் வாடகையாக கொடுத்து அனுப்ப வேண்டும்” என்றார்.
உடனே செல்வந்தர் தனது கணக்குப் பிள்ளையை அழைத்து வண்டிக்காரருக்கு ஆவன செய்யுமாறு சொல்லிவிட்டு புலவரை தனது மாளிகைக்குள் அழைத்துச் சென்றார்.
சிறிது நேரத்தில் கணக்குப் பிள்ளை உள்ளே வந்து, “அந்த வண்டிக்கார ஆளு வாங்க மாட்டேன்கிறாரு; இங்கே வந்து அதனை என்னவென்று கேளுங்கள்” என்றார்.
புலவருக்கு ‘ஐயையோ! இந்த ஆளு இன்னும் அதிகமா பணம் எதிர்பார்க்கிறான் போலத் தெரியுது’ என்று குழம்பியபடியே வண்டிகாரரை நோக்கி வந்தார்.
உடன் செல்வந்தர் மற்றும் கணக்கு பிள்ளையும் வந்தார்கள்.
வண்டிக்காரரிடம் வந்த புலவர் “வாங்கிக்கோ தம்பி. நீ பேசுன வாடகை அதுதானே” என்று கொஞ்சம் கெஞ்சலாகக் கேட்டார்.
உடனே வண்டிக்காரர் “அய்யா நேற்று இரவு வண்டியில் வரும் போது நீங்கள் கொடை வள்ளல் வெங்கலப்ப நாயக்கர் பற்றி சொன்னீர்கள் அல்லவா!
அவருடையவழியில் இருக்கும் கடைசி வாரிசு நான்தான். அவர் கொடுத்தக் கொடையினை நான் எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்வேன்?
உங்களை இங்கே அழைத்து வரும் இந்த உதவியினைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி” என்று கூறிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்து நிற்காமல் பசியுடன் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று விட்டார்.
கொடையுள்ளம் இப்படித்தான் மரபு வழியில் கடத்தப்பட்டிருக்கிறது.
தயாள குணமும் வள்ளல் தன்மையும் வாழையடி வாழையென பரம்பரியமாய் வருவது அல்லவா!
மேலும் பேராசிரியர் தனது சொந்த அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவரது வகுப்பறை அலப்பறை ஒன்று.
ஒருநாள் வகுப்பிற்குள் அவர் நுழைந்ததும் மாணவி ஒருவர் கேட்ட கேள்வி,
“ஐயா ஆடு மாடுகள் எல்லாம் கால்நடையாய் நடந்தே செல்வதானால் அவற்றை நாம் கால்நடைகள் என்று அழைக்கின்றோம்.
நாமும் கால்களால்தான் நடந்து செல்கின்றோம் ஆனால் நம்மை அவ்வாறு அழைப்பதில்லையே ஏன்?”
ஆடிப் போன ஐயா அந்த மாணவியின் கேள்வியினை தாம் படித்து ரசித்த கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கருத்தின் துணை கொண்டு
“கால் போன போக்கில் அவை செல்வதால் அவை கால்நடைகள்…. மனம் போன போக்கில் செல்வதனால் நாம் மனிதர்கள்” என்று சமாளித்த சுவாரசியமான சம்பவம் கூறி அசத்தினார்.
அடுத்ததாக வில்லி பாரதத்தில் இருந்து எடுத்தது.
13 ம் நாள் போர் சதுக்கத்தில் சக்கர வியூகம் அமைத்து கௌரவர் படைக்குள்ளே சென்று திரும்ப முடியாமல் மாண்டு போன அபிமன்யுவின் சடலம் போர்க்களத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சோகமே உருவான அந்த இறுக்கமான சூழலினைக் குறித்து ஸ்ரீ வில்லிபுத்தூரார் பாடிய ‘கவிக்கூற்று’ (பாத்திரங்கள் பேசாது படைப்பாளி பேசும் யுக்தி) செய்யுள் சொல்லி அதன் பொருளாக
‘தாய்மாமன் உலகைக் காக்கும் கிருஷ்ண பரமாத்மா!
தந்தை தன் வில்லால் உலகை வெல்லும் வலிமை கொண்ட அர்ஜுனன்!
பெரியப்பா ஆயிரம் யானை பலம் கொண்ட பீமன்!
தாத்தா இந்திரன்!
இத்தனை பேர் இருந்தும் இச் சிறுவனை காக்க முடியவில்லையே! எனவே ‘விதி வலியது’ எனக் கூறி,
கலக்கமான கனமான ஒரு சூழ்நிலையினை இந்தப் பாடல் எவ்வாறு கரைத்து எளிமையாக்கி தெளிய வைத்தது என்பதனை எடுத்துரைத்தார்.
இறுதியாக ஒரு நகைச்சுவைத் துணுக்கோடு கு.ஞானசம்பந்தன் உரை நிறைவு செய்தார்..
“இறப்பிற்குப் பின் தனக்கு சொர்க்கம்! அங்கே ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை போன்ற அழகு தேவதைகளுடன் வாசம். மனைவிக்கு குரங்குகளுடன் நரகத்தில் வாசம்” என மேதாவித் தனத்தோடு கணவன் கூற,
அதற்கு மனைவி அப்பாவித் தனத்தோடு, “மாமா உங்களுக்கு இங்கேயும் அழகி; அங்கேயும் அழகி. எனக்குத்தான் இங்கேயும் குரங்கு; அங்கேயும் குரங்கு” எனக் கூறி, வெடிசிரிப்பை அரங்கத்தில் கொளுத்திப் போட்டுவிட்டு தன்னுரையினை இனிதே முடித்தார் பேராசிரியர் கு ஞானசம்பந்தன் ஐயா அவர்கள்.
நகைச்சுவை உணர்வுடன் கூடிய தீந்தமிழ் சொற்பொழிவு கேட்ட மகிழ்ச்சி. நிகழ்ச்சி அமைத்துத் தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி.
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!