பெற்றோர்களே, இளைஞர்களே உஷார் …
படத்தில் காணப்படுவதுதான் கூல் லிப்.
கூல் லிப் இனிப்பு மற்றும் மின்ட் சுவையுடன் கூடிய புகையிலை; தலையணை போல பைகளில் கிடைக்கிறது.
உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும். இதனால் ஒரு சின்ன ஹாய் கிடைக்கிறது.
பள்ளி செல்லும் வளர் இளம் பருவத்தினர்… டீன் ஏஜ் பருவத்தினர் இந்த போதை வஸ்துவின் பழக்கத்திற்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்திற்கு உள்ளாகும் நிலை இருக்கிறது.
புகையிலையில் நிகோடின் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்த நிகோடின் ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை இதனைச் சுவைக்கும் போதும் கிடைக்கிறது.
அதனால் இதனைச் சுவைப்பவர்கள் நாளடைவில் சிகரெட், கணேஷ் பீடா போன்ற வேறு பல போதை வஸ்துகளின் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடும்.
தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் சமீபத்தில் மூன்று மாவட்டங்களில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையே கள ஆய்வு ஒன்றை நடத்தியது.
அவ்வாறு 3021 பேரிடம் ஆய்வு செய்ததில், 23% பேர் இந்த கூல் லிப் தலகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
நம் வீட்டில் கல்வி பயில செல்லும் செல்வங்களின் புத்தகப்பைகளில், கை சட்டை. கால் சட்டை பைகளில் இதுபோன்ற விஷயங்கள் இதுவரை கிடைத்திருந்தால் தாங்கள் சாக்லேட் என்று நினைத்து இருக்கக்கூடும்.
இனி இவற்றை பார்க்க நேர்ந்தால், கட்டாயம் நம் செல்வங்களுக்கு அன்பான அனுசரணையான கவுன்சிலிங் தேவை.
கண்டிப்பாக அடி உதை உதவாது. தாங்கள் தண்டிக்க நினைக்க வேண்டாம். அது நம் மீது ஒவ்வாமையை மட்டுமே உருவாக்கும்.
உங்களின் குடும்ப நல மருத்துவரிடம் அல்லது குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்து சென்று ஒரு சின்ன ஹெல்த் கவுன்சிலிங் கொடுங்கள். அன்பினால் ஆகாதது எதுவும் இல்லை.
நம்மை சுற்றி இருப்பதை, கிடைப்பதை நாம் முதலில் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இதை தடை செய்வது குறித்து அரசு ஆலோசிப்பது நல்லது.
பள்ளிகளில் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் மற்றும் நன்னடத்தை பற்றிய கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெறுவது நல்ல பலனை தரகூடும்.
திட்டச்சேரி மாஸ்டர் பாபு
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!