கெடுவான் – சிறுகதை

திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் செங்குளம் கிராமத்தின் சந்திப்பு இருக்கிறது. சுமார் ஐநூறு குடும்பங்களை உள்ளடக்கிய கிராமம்.

சந்திப்பிற்கும் ஊருக்கும்மான இடைவெளி ஒரு மைல் தொலைவு இருக்கும். அந்த ஒரு மைல் தொலைவு சாலையின் குறுக்காக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் இரயில்வே இருப்புப் பாதை ஒன்று சென்றது.

உச்சி வெயில் அனலாய் காய்ந்துக் கொண்டிருந்தது. சாலையெங்கிலும் கானல் நீர் காட்சி தந்து கொண்டிருந்தது.

சாலையில் நடப்பவருக்கு முட்டி வரை எரிச்சல் கொடுக்கற அளவுக்கு இருந்தது வெயிலின் வேகம்.

அந்த வெயிலிலும் பூக்குழியில் நடப்பதை போல நடந்து செங்குளம் விலக்குக்கு சென்று, திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆறு மாத கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் அகிலா.

அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்து மூன்றடைப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருக்கும் தனது மனைவியை அழைத்து வருவதற்காக, பைக்கில் விலக்கு வழியாக மூன்றடைப்பிற்கு செல்வதற்காக வந்துக் கொண்டிருந்தான் சிவபாலன்.

செங்குளம் வில‌க்குக்கும் மூன்றடைப்பு பேருந்து நிறுத்தத்திற்கும் ஒரு மைல் இடைவெளி இருந்தது.

மூன்றடைப்பில் எல்லா பேருந்துகளும் நின்று செல்லும். செங்குளம் விலக்கில் டவுண் பஸ் மட்டுமே நின்று செல்லும்.

வழியில் அகிலாவை பார்த்ததும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு “மண்டைய பொளக்குற இந்த மத்தியான வெயிலுக்குள்ள பச்ச புள்ளய வெச்சுக்கிட்டு, எங்க போயிட்டு இருக்க?” என்றான்.

“அவசரமா திருநெல்வேலி வரைக்கும் போகணும். அதுதான் விலக்குக்கு போயி பஸ் பிடித்து போகலான்னு நடந்து போயிட்டு இருக்கேன்.” என்றாள்.

“சரி வா, வண்டியில ஏறு. அந்த வழியேதான் மூன்றடைப்புக்கு போறேன். அப்படியே உன்னையும் விலக்குல இறக்கி விட்டுருதேன்.” என்று அழைத்தான்.

முதலில் தயங்கிய பின் யோசித்த அகிலா தனக்காக இல்லாவிட்டாலும் தனது குழந்தைக்காக சிவபாலனின் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றாள்.

திருநெல்வேலிக்கு பக்கத்துல இருக்கற தாழையூத்து தான் அகிலாவின் சொந்த ஊர். அவளை திருமணம் செய்து கொடுத்திருந்த ஊர்தான்  செங்குளம்.

அவளது கணவன் மாரியப்பன் மும்பையில் வேலை செய்கிறான். ஏதாவது நல்லது, கெட்டது, விசேஷங்களுக்கு மட்டும் வந்து போவான். 

மாரியப்பனுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் தான். தனது தாயோட பாதுகாப்புல தான் அகிலாவை ஊரில் விட்டுட்டு சென்றிருந்தான்.

மோட்டார் சைக்கிள் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருகில் வர, எதிரே அகிலாவின் அண்ணன் முத்து மனோ பைக்கில் வந்தான்.

பைக்கில் செல்லும் அகிலாவை பார்த்துவிட்டு ஏதுவும் பேசாமல் சென்றான்.

மனைவியை அழைத்து வந்து வீட்டிலே கொண்டு விட்டுட்டு சிவபாலன் தனது மளிகை கடையில் அமர்ந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.

சிவபாலன் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தான். வியாபாரம் முழுமைக்கும் செங்குளம் மக்களையே நம்பி இருந்ததால் கடன் கேட்போருக்கு சிறிய அளவில் கடன் கொடுத்தும் வந்தான்.

அப்படிதான் அகிலாவின் அண்ணன் முத்து மனோவிற்கும் கடன் கொடுத்திருந்தான். 

அகிலாவிற்கு அண்ணன் என்றால் உடன் பிறந்த அண்ணன் இல்லை. மாரியப்பனின் அத்தை மகன். மாரியப்பனுக்கு மச்சான் முறை அதனால் அகிலா, முத்து மனோவை அண்ணன் என்று அழைத்து வந்தாள்.

மாரியப்பன் ஊருக்கு வந்துவிட்டு திரும்ப மும்பைக்கு செல்லும் போதெல்லாம் முத்துமனோவிடம் ‘தனது மனைவியையும் அம்மாவையும் பார்த்துக்க’ என்று சொல்லி விட்டு செல்வான்.

சிவபாலனுக்கு அகிலாவுடன் தனது ஊர்க்காரப் பெண், தனது கடைக்கு மளிகை சாமான் வாங்க வருகின்ற வாடிக்கையாளர் என்ற முறையில் தான் பழக்கம் இருந்தது.

சிவபாலனுக்கு பிறந்த ஊர் நாகர்கோவில் பக்கம் வெல்லமடை. ஊரில் அண்ணன், தம்பியோடு ஏற்பட்ட தகராறில் மனைவியின் ஊரான செங்குளத்தில் வந்து குடியேறி இருந்தான்.

முத்து மனோ கடனுக்கு மளிகைச் சாமான் வாங்கி வருட‌க் கணக்காகி விட்டது. கடனை திருப்பி தந்த பாடில்லை. அதனால் முத்து மனோவிற்கு கடன் கொடுப்பதை நிறுத்தி விட்டான் சிவபாலன்.

“கடனை திருப்பி கொடுத்துவிட்டு அப்பறமா கடன் கேளு தருகிறேன். அதுவரை காசு கொடுத்து சாமானை வாங்கிக் கொள்” என்று சொல்லி விட்டான்.

கடன் தர மறுத்து விட்டதால் கடை பக்கம் வருவதையே நிறுத்தி விட்டான் முத்து மனோ. மூன்றடைப்புக்கு, திருநெல்வேலிக்கு போகும் போது, வரும்போது மொத்தமாக காசு கொடுத்து சாமான்களை வாங்கி வந்து வைத்துக் கொண்டான் அவன்.

ஏதாவது தட்டுமுட்டு சாமான் தேவையென்றால் அவனோ, அவன் மனைவியோ கடைக்கு வராமல்  வேறு ஆட்களிடம் காசு கொடுத்து சிவபாலன் கடையிலேயே வாங்கி வரச் சொன்னார்கள். இதையெல்லாம் சிவபாலன் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

ஒருநாள் முத்து மனோவின் வீட்டுக்கே சென்று கடனை கண்டிப்புடன் கேட்டுவிட, இருவருக்கும் கை கலப்புவரை சென்று விட்டது.

அதன் பிறகு எப்படியோ பணத்தை ஏற்பாடு செய்து பாதியை கொடுத்து விட்டு மீதிக்கு கால அவகாசம் கேட்டிருந்தான். அவகாசம் முடிந்து மூன்று மாதம் ஆகியிருந்தது.

சிவபாலனோடு மோட்டார் சைக்கிளில் சென்ற அகிலாவை பார்த்துவிட்டு அமைதியான முறையில் சென்ற முத்து மனோ, அதன் பிறகு சிவபாலன் கடையில் இருப்பதை கவனித்துவிட்டு, உடன் ஒரு நான்கு பேரை அழைத்து வந்தான்.

“என் தங்கச்சியை கூட்டிட்டு எங்கடா போன?” என்று கேட்டு தகராறு செய்தான்.

சிவபாலன் நடந்த விபரத்தையெல்லாம் சொல்லியும் கேட்காமல், தனது ஆட்களோடு சேர்ந்து அடித்து உதைத்துவிட்டு அரிவாளால் வெட்டி விட்டான். அதற்குள் ஊர் கூடிவிட, விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டான். ஊரார் சேர்ந்து சிவபாலனை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்கள்.

சிவபாலன் மனைவி முத்து மனோவின் மீது, போலீசில் புகார் கொடுத்து விட்டாள். போலீஸ் முத்து மனோவை கைது செய்து சென்று விசாரணை செய்தது.

முத்து மனோ போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, அகிலாவிடம் சென்று சிவபாலன் ‘தன்னை செங்குளம் வில‌க்கில் வைத்து தனது கையை பிடித்து இழுத்ததாக’ சொல்ல சொல்லி கேட்டுக் கொண்டான்.

அவள் அதற்கு உடன்பட மறுத்து விட்டாள்.

முத்து மனோ போலீஸ் விசாரணையில் “சிவபாலன், எனது மச்சான் மாரியப்பனின் மனைவியோடு கள்ள தொடர்பு வைத்துக் கொண்டு இருந்தான்.

நான் பலமுறை சிவபாலனிடம் அந்தத் தொடர்பை விட்டுவிடும்படி அவனை எச்சரித்தேன்.

அதற்கு அவன் ஒத்துக் கொள்ளாததால் என் மச்சானின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக சிவபாலனை கொலை செய்ய முயற்சி செய்தேன்” என்று வாக்குமூலம் கொடுத்தான்.

மும்பையில் இருந்த மாரியப்பனுக்கு போன் செய்து “உன்னுடைய மனைவி மளிகைக் கடைக்காரன் சிவபாலனோடு கள்ளத்தொடர்பில் இருக்கிறாள்” என்று சொன்னான்.

அதோடு விடாமல் “அசலூருகார பயல, ஊருக்குள்ள விட்டதுக்கு என்ன காரியம் பண்ணிட்டான் பார்த்திங்களாய்யா” என்று ஊரைத் தூண்டி விட்டான். செங்குளம் ஊர் மக்களும் முத்து மனோவின் பேச்சை நம்பினர்.

முத்து மனோ வீசிய பொய் கணைகளால் அகிலாவின் குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது.

அகிலாவின் தரப்பு வாதங்கள் ஏதும் அவள் கணவரின் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறுதியில் அகிலாவிற்கும் மாரியப்பனுக்கும் மணமுறிவு ஏற்பட்டு, அவள் பிறந்த வீட்டிற்கு சென்றாள்.

சிவபாலன் குடும்பத்தினரும் அவமானத்தால் செங்குளத்தைக் காலி செய்தனர்.

முத்து மனோ தன்னுடைய எதிரியை, சூழ்நிலையின் துணை கொண்டு வீழ்த்தி விட்டதாக மகிழ்ச்சி அடைந்தான்.

சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் கெடுவான் சாதமாக்கி இரு குடும்பங்களையும் சிதைத்து விட்டான்.

ரக்சன் கிருத்திக்
8122404791

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.