சில ஆண்டுகளுக்கு முன் காலம் தவறாமை பற்றி ஓர் ஆங்கிலேயர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். கட்டுரையின் இறுதி வாக்கியமாக ‘இந்தியர்கள் தங்கள் கைகளில் கடிகாரம் கட்டியுள்ளனர்’ என்று இருந்தது. நாம் கைக்கடிகாரத்தை ஒரு அணிகலனாகக் கருதி, கவர்ச்சியைக் காட்டியிருக்கிறோம்; கடிகாரம் பார்த்து, எதையும் காலம் தவறாமல் செய்வதில்லை என்பது கட்டுரையாளரின் கருத்து; உண்மையும் அதுதான்.
நம்மில் பலர் சரியான நேரத்தைக் கடைப் பிடிப்பதில்லை. மேலை நாட்டார் கண்ணும் கருத்துமாகக் காலம் தவறாமையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். நேர நிர்வாகம் என்பதே, வாழ்க்கை நிர்வாகம் ஆகும். ‘In time’ என்பது வேறு; ‘On time’ என்பது வேறு. மேலை நாட்டார் மிகச் சரியான On time மைப் பின்பற்றுவார்கள். இந்தியர்கள் சுமாராக In time மைப் பின்பற்றுவார்கள்.
நம்மில் சிலர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள கடிகாரம் நேரத்தை ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் முன்னதாக வைத்து ஏமாற்றுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் மிகச்சரியாக தொடர்ந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அலுவலகத்திற்குத் தாமதமாக செல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பஸ்ஸையும் இரயிலையும் கோட்டை விடுவார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் ‘தோற்றவருக்குத் தான் தெரியும் நொடியின் மகத்துவம். பி.டி.உஷாவைக் கேட்டுப் பாருங்கள்? ஒருமனிதன் 100 மீட்டர் ஓட்டத்தை முடிக்கும் நேரம் இம்மியளவு குறைந்தால் கூட இரண்டாம் இடம், மூன்றாம் இடம் எனத் தரவரிசை மாறிவிடுகிறது. அது என்ன இம்மியளவு? ஒரு செகண்டில் ஆயிரத்தில் ஒரு பாகம் தான் ‘இம்மி’.
இவ்வளவு நுணுக்கமான நேரத்தை அளக்க, வினாடிக்கு ஆயிரம் தடவை துடிக்கும் ஒளி இழைகளையும், ஃபோட்டோசென்ஸர் என்கிற ஒளி உணரும் கருவியையும் வைத்துக் கொண்டுதான் வெற்றித் தோல்வி நிச்சயிக்கப்படுகின்றன. ஒலிம்பிக் தரத்துப் போட்டிகளில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே மயிரிழைதான் இடைவெளி. ‘இம்மி’ அளவு கூட முக்கியம்.
மனிதன்தான் நேரத்தை நிர்வகிக்கவேண்டும்; நேரம் மனிதனை நிர்வகிக்கக்கூடாது. இன்று தொலைக்காட்சியால் இரவுத் தூக்கம் தாமதமாகிறது. சனிக்கிழமை இரவு 12.15 மணிக்குத் தூங்கினால், அது ஞாயிற்றுக்கிழமை. அன்றைய இரவுத் தூக்கம் அன்றே இருக்க வேண்டும். இரவு 9.30 மணிக்குள் தூங்கி; காலை ஐந்து மணிக்கு முன்னதாக எழுந்தால், காலம் தவறாமை கைகூடும்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை நேசிக்கப் பழக வேண்டும். இப்பொழுது சொல்லுங்கள், நாம் ஏன் கையில் கடிகாரம் கட்டியுள்ளோம்?
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!