கொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா? கேள்விக்கான பதில் தெரிய வேண்டும் எனில் தொடர்ந்து படியுங்கள்.
மழையும், குளிரும் தொடங்கியாச்சு. கொசுக் கடிக்கும் இனி பஞ்சம் இருக்காது. குறிப்பிட்ட சிலரை மட்டும் கொசு அதிகமாக கடிக்கும்.
பெண் கொசுவே நம்மைக் கடிக்கிறது.
ஏனெனில் அதற்கு முட்டையிட பாலூட்டியின் இரத்தப் புரதம் மிகவும் அவசியமானது. இந்த உலகத்தில் தன்னினத்தை நிலைநிறுத்தவே அது நம்மை கடிக்கிறது. ஆனால் போகட்டும் விடுங்கள் என்று நாம் விட்டுவிட முடியாது.
ஏனெனில் கொசுக் கடியினால் உண்டாகும் நோய்களான டெங்கு, மலேரியா உள்ளிட்டவைகளால்தான் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். ஆதலால் கொசுக்கள் உலகின் மிகவும் ஆபத்தான உயிரினமாகக் கருதப்படுகிறது.
கொசுக்களுக்கு பார்க்கும் திறனும், முகரும் திறனும் மிகவும் அதிகம். 30 மீட்டர் தொலைவில் இருந்தே அவைகளால் கடிக்கும் நபரை அடையாளம் காண இயலும்.
பெரும்பாலும் கொசுக்கள் காலை மற்றும் மாலை வேளைகளிலேயே அதிகம் கடிக்கின்றன.
உடலின் தலை மற்றும் கால் பகுதியிலேயே அதிகமாகக் கடிக்கின்றன.
கொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா? என்பதற்கு பல காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவை நம்முடைய ஆடைகள், இரத்த வகை, வெளியிடப்படும் வாயு, உடல் வெப்பம் மற்றும் வியர்வை, வளர்ச்சிதை மாற்றம், மதுபானம் மற்றும் உடலின் நுண்ணுயிர்கள் ஆகியவை ஆகும்.
ஆடைகள்
உணவு தேடும் வேட்டையில் கண் பார்வையை முதல் ஆயுதமாக கொசு பயன்படுத்துகின்றது. போதிய வெளிச்சத்தில் கொசுக்கள் தங்களுடைய விருந்தினர்களை கண்டறிய பார்வையையே பயன்படுத்துகின்றன.
ஆதலால் வெளிச்சத்தில் அடர்நிறங்களான கறுப்பு, பச்சை, சிவப்பு போன்ற ஆடைகளை அணிந்திருப்பவர்களை அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரத்த வகை
முட்டையிடுவதற்காக பெண் கொசுக்கள் நம்முடைய இரத்தத்தை உறிஞ்சி அதில் உள்ள புரதங்களைப் பயன்படுத்துகின்றன. இதற்கு சில குறிப்பிட்ட இரத்த வகையையே அதிகமாக கொசுக்கள் விரும்புகின்றன.
ஓ வகை இரத்தப் பிரிவினர் ஏ வகையைச் சார்ந்தவர்களை விட இரண்டு மடங்கு கொசுக்கடிக்கு ஆளாகின்றனர். கொசுக்கடிக்கு ஆளாவதில் பி வகை இரத்த பிரிவினர் ஏ மற்றும் ஓ வகையினருக்கு இடையில் உள்ளனர்.
மேலும் மனிதர்களில் 87 சதவீதத்தினர் தாங்கள் எந்த வகை இரத்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என அறியக் கூடிய ஹார்மோன் சுரப்புகளைக் கொண்டுள்ளனர்.
இந்த ஹார்மோன்களை கொசுக்கள் முகர்ந்து எளிதில் இனம் கண்டு கொண்டு அவர்களைக் கடிக்கின்றன.
வெளியிடப்படும் வாயு
கொசுக்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவினை குறிப்பிட்ட தூரத்தில் முகர்ந்து எளிதில் இனம் கண்டு கொள்கின்றன. மேலும் 5-15 மீட்டர் தொலைவில் உள்ள மனிதர்களையும் பார்த்தறியும் திறனும் கொசுக்களுக்கு உண்டு.
இவ்விரண்டையும் பயன்படுத்தி தங்களுடைய ஓம்புயிரிகளை இவைகள் எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றன.
அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடினை வெளியிடுவோர் கொசுக்களின் அழையா விருந்தாளி ஆவர். உடலின் மூக்கு மற்றும் வாய்ப் பகுதியே கார்பன்-டை-ஆக்ஸைடை அதிகம் வெளியிடும் பகுதியாதலால் தலைப் பகுதியே கொசுக்களை அதிகம் கவர்ந்திழுக்கிறது.
ஆதலால்தான் தலைப்பகுதியை நோக்கிய கொசுக்களின் பயணம் மற்றும் அதனுடைய ரீங்காரம் உறக்கத்தில் நமக்கு தொந்தரவாகிறது.
வியர்வை மற்றும் உடல்வெப்பம்
லாக்டிக் அமிலம், யூரிக் அமிலம், அம்மோனியா உள்ளிட்ட வேதிப்பொருட்கள் நமது வியர்வையின் மூலம் வெளியிடப்படுகின்றன. கொசுவானது தனது நுகரும் திறன் மூலமாக வியர்வையின் வேதிப்பொருட்களை எளிதில் அடையாளம் காணுகிறது.
உடற்பயிற்சியின் போது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதோடு வியர்வையும் அதிகரிக்கிறது. மேலும் ஒரு சிலரின் மரபணுக் காரணிகள் யூரிக் அமிலம் வெளிப்படுத்துவதை அதிகரிக்கிறது.
இதனால் அதிகமாக வியர்ப்பவர்கள் கொசுக்களைக் கவரும் காந்தமாகச் செயல்படுகின்றனர். வியர்வை மற்றும் உடல்வெப்பம் கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
வளர்ச்சிதை மாற்றம்
வளர்ச்சிதை மாற்றம் கொசுக்கடிக்கு முக்கிய காரணியாகும். உடல் பருமனாவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் சாதாரணமானவர்களை விட அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனால் அவர்களின் அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவதோடு அதிகப்படியான உடல் வெப்பத்தையும் கொண்டுள்ளனர். இதனால் இவர்களை கொசுக்கள் அதிகமாகக் கடிக்கின்றன.
ஆப்பிரிக்காவில் கர்ப்பிணிப் பெண்கள் சாதாரண பெண்களைவிட கொசுக்கடியால் மலேரியா நோய்த் தாக்கத்திற்கு ஆளாவாதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மதுபானம்
மதுபானம் குடித்தவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதுபானம் அருந்தும்போது உடலில் வெப்பநிலை அதிகரிப்பதோடு, வியர்வைச் சுரப்பிகளின் செயல்பாடும் அதிகரிக்கிறது. இதனால் கொசுக்களின் விருந்தினர்களாக மது அருந்தியவர்கள் மாறி விடுகின்றனர்.
உடலின் நுண்ணுயிரிகள்
பொதுவாக நமது தோலில் நுண்ணுயிரிகள் வசிக்கின்றன. அவைகள் கொசுக்களை கவர்ந்திழுக்கின்றன. தோலில் அதிகப்படியான நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளோர் அதிகப்படியான கொசுக்கடிக்கு ஆளாகின்றனர்.
ஆதலால்தான் உடலின் அதிகப்படிப்பான பாக்டீரியாக்கள் வசிக்கும் கால் மற்றும் அக்குள் பகுதிகளை கொசுக்கள் அதிகமாக விரும்பிக் கடிக்கின்றன.
கொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா? என்ற கேள்விக்கான பதில்களை தெரிந்து கொண்டு, கொடிக்கடியிலிருந்து உங்களைப் பாதுக்காத்து வளமான வாழ்க்கையை வாழுங்கள்.
கொசுக்கடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்களா? ஏன் அதிகமாக நம்மை கொசு கடிக்கிறது என்று பல நேரம் சிந்தித்து இருக்கிறேன். இதில் காரணம் விளங்குகிறது. இதையும் அறிந்து கொள்வது அறிவு தானே? அறிவு எல்லாரும் கற்றுக் கொள்வதாக அமைவது. சிறப்பான தகவல்கள்.