மழை மேகங்கள் கண்டால்
மயிலுக்குக் கொண்டாட்டம்
அந்திச் சந்திரனைக் கண்டால்
அல்லி மலர்களுக்குக்
கொண்டாட்டம்…
கரை தொட்டோடும்
நதியைக் கண்டால்
நாணல்களுக்குக்
கொண்டாட்டம்…
மணம் வீசும்
மலர்களைக் கண்டால்
மயங்கி நிற்கும்
வண்டுகளுக்குக் கொண்டாட்டம்..
இயற்கையின்
கொண்டாட்டத்தில்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை…
வானிலவு கண்டால்
கவிஞர்களுக்கு கொண்டாட்டம்…
தேனிலவு என்றால்
புதுத் தம்பதிகளுக்குக்
கொண்டாட்டம்…
தேர்தல் வந்தால்
அரசியல்வாதிகளுக்குக்
கொண்டாட்டம்…
திருவிழாக்கள் வந்தால்
சாமிகளுக்குக்
கொண்டாட்டம்…
பட்டாடைகள் உடுத்தி
பலகாரங்கள் ருசிபார்த்து
பட்டாசுகள் வெடித்து
தீபஒளி ஏற்றும்
தீபாவளிக் கொண்டாட்டங்கள்
வலிந்தோர்க்கு மட்டுமேயன்றி
வறுமைக்கு ஏது
வாழ்வின் கொண்டாட்டங்கள்?
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!