கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா என்றதும் ஏதோ என்று நினைகிறீர்களா?. அது ஒன்றும் இல்லை. நாம் அன்றாடம் மசாலா தயாரிக்க பயன்படுத்தப்படும் மல்லிவிதை ஆகும்.

இது மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால்தான் இது மூலிகை மசாலா என்றழைக்கப்படுகிறது.

மல்லிவிதை இல்லாத இந்திய சமையலை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏனெனில் இது நம்நாட்டில் அந்தளவுக்கு சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.

எங்கள் வீட்டில் யாருக்காவது சளிப் பிடித்து விட்டால் எங்கள் அம்மா சுக்கு மல்லிக் காப்பி தயாரித்துக் கொடுப்பார். ஏனெனில் அதற்கு சளி தொந்தரவு குறைவதோடு அதனால் உண்டாகும் உடல்வலியும் நீங்கும்.

கொத்தமல்லியில் சிறப்பு என்னெவென்றால் இதனுடைய இலை மற்றும் விதைகள் நம்மால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையில் கொத்தமல்லி விதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கொத்தமல்லியின் அமைப்பு மற்றும் வளரியல்பு

மல்லிவிதையானது கொத்தமல்லி எனப்படும் இரண்டு அடிஉயரம் வரை வளரும் குற்றுச்செடியிலிருந்து கிடைக்கிறது.

 

மல்லிச்செடி
மல்லிச்செடி

 

இதனுடைய தண்டுகள் கிளைத்தும் பச்சைநிற மென்மையான தனிப்பட்ட வாசத்தை உடைய இலைகளையும் கொண்டுள்ளது.

 

மல்லித் தோட்டம்
மல்லித் தோட்டம்

 

இச்செடியிலிருந்து சிறிய வெள்ளை கலந்த இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் தோன்றுகின்றன.

 

கொத்தமல்லிப் பூ
கொத்தமல்லிப் பூ

 

மல்லிப் பூ
மல்லிப் பூ

 

இப்பூக்களிலிருந்து உருண்டையான அல்லது நீள்வட்ட விதைகள் தோன்றுகின்றன.

 

இளம் கொத்தமல்லி விதைகள்
இளம் கொத்தமல்லி விதைகள்

 

இளமையாக இருக்கும்போது இவ்விதைகள் பச்சை நிறத்திலும், முதிர்ந்ததும் பழுப்பு நிறத்திற்கு மாறிவிடுகின்றன. இவ்விதைகள் 4-6 மிமீ விட்டத்தில் உட்புறத்தில் வெற்றுக் குழியைக் கொண்டுள்ளது.

 

கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதை

 

மல்லிவிதைகள் விதைத்து மூன்று முதல் நான்கு வாரங்களில் இலைகள் அறுவடை செய்யப்படுகின்றன.

 

கொத்தமல்லி இலை
கொத்தமல்லி இலை

 

விதைகள் முளைத்து 45 நாட்களில் அறுவடை செய்யப்படுகின்றன. இது ஈரப்பதமான மண்ணில் செழித்து வளரும்.

மல்லிச்செடியின் இலைகள் முதிர்ந்து விழுந்து தாவரம் முழுவதும் பழுப்பாக மாறியதும் விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன.

மல்லிவிதையின் அறுவடையின்போது முழுத்தாவரமும் பிடுங்கப்பட்டு சிறுகட்டுகளாக கட்டப்பட்டு அடித்து பிரித்தெடுக்கப்பட்டு வெயிலில் உலரவைக்கப்படுகிறது.

இதனுடைய அறிவியல் பெயர் கோரியண்டம் சட்டிவம் என்பதாகும்.

கொத்தமல்லி விதையின் வரலாறு

கொத்தமல்லி விதையானது செரிமானத்திற்கு உதவும் பொருளாக சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே பழக்கத்தில் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இதனை சமஸ்கிருத நூல்ளிலும், பண்டைய எகிப்திய பாப்பிரரி மற்றும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிராட்டின் எழுத்துகளிலும் காணலாம்.

ரோமானிய படையினர் இதனை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். ஐரோப்பாவில் இறைச்சியைப் பதப்படுத்தவும், சீனாவில் உணவு நச்சினை தடுக்கும் பொருளாகவும் இது பயன்படுத்தப்பட்டது.

கொத்தமல்லியானது மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவிலும் காடுகளில் தானாக வளர்ந்துள்ளது. எகிப்தில் இது பயிர் செய்யப்பட்டதற்கான ஓவியங்கள் காணப்படுகின்றன.

கிமு இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் இது பயிர் செய்யப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் வடஅமெரிக்காவில் ஆங்கிலேயர்களால் இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இந்தியா, சீனா, துருக்கி, ஐரோப்பா ஆகிய இடங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

கொத்தமல்லி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கொத்தமல்லி விதையில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), குறைந்தளவு ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன.

இதில் இரும்புச்சத்து, செம்புச்சத்து மிகஅதிகளவும், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு அதிகளவும் உள்ளன. மேலும் இதில் பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய தாதுஉப்புகளும் உள்ளன.

இதில் கார்போஹைட்ரேட், அதிகளவு நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.

மேலும் இதில் பதினோரு வகையான முக்கிய எண்ணெய்களும், ஆறு வகையான அமிலங்களும் காணப்படுகின்றன.

கொத்தமல்லி விதை – மருத்துவ பண்புகள்

சரும ஆரோக்கியத்திற்கு

மல்லிவிதையின் நோய்எதிர்க்கும் பண்பானது சரும அரிப்பு, எக்ஸிமா, சரும அழற்சி, சருமதடிப்பு போன்றவை ஏற்படாமல் தடை செய்கிறது.

இது வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணையும் தடுக்கிறது. இதில் உள்ள லினீலியிக் அமிலம் வலி நிவாரணியாகச் செயல்பட்டு சருமஎரிச்சலுக்கு தீர்வளிக்கிறது.

நல்ல செரிமானத்திற்கு

இதில் உள்ள எண்ணெய் செரிமானத்திற்குத் தேவையான நொதிகளைச் சுரந்து உணவினை நன்கு செரிக்க ஊக்கம் அளிக்கிறது. பசியற்ற தன்மையையும் இது நீக்குகிறது.

இதனுடைய தனிப்பட்ட மணத்தினை நாம் நுகரும் போது செரித்தலுக்குத் தேவையான நொதிகள் சுரப்பதால் செரிமானமின்மை, பசியின்மை ஆகியவை நீக்கப்படுகின்றன. ஆதலால்தான் நம்முடைய மசாலாவில் மல்லிவிதை கட்டாயம் இடம் பெறும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க

இதில் உள்ள லினீலியிக் அமிலம், ஒலிக் அமிலம், பாமிமிடிக் அமிலம், ஸ்டீரியிக் அமிலம் மற்றும் அஸ்காரிபிக் அமிலம் போன்றவை இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவை இரத்தநாளங்களில் படிந்து அடைப்பினை உண்டாக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து இதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

மேலும் இது கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கிறது.

வயிற்றுப்போக்கிற்கு

இதில் காணப்படும் எண்ணெய்களான போர்னியோல் மற்றும் லினுலூல் போன்றவை கல்லீரலை நன்கு சுரக்கச் செய்து செரிமானத்திற்கு உதவுகின்றன.

இதில் காணப்படும் எண்ணெய்ப் பொருட்களான சினைல், ஹார்னையல், லிமோனைன், ஆல்பா-பினைன் மற்றும் பீட்டா பில்லாண்ட்ரீன் போன்றவை பாக்டீரிய எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுபோக்கிற்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது.

மல்லிவிதையினை வாந்தி, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு வீட்டில் கைமருந்தாக கொடுக்கும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

உயர்இரத்த அழுத்தத்தைச் சீராக்க

உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை உண்ணும்போது இரத்த அழுத்தம் சீராவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் உள்ள கால்சியம் அயனிகள் மற்றும் அசிட்டைல்சொலைன் இரத்த நாளங்களில் உண்டாகும் அழுத்தத்தைக் குறைத்து இதயநோய்களை தடைசெய்கிறது.

எலும்புகளை பலப்படுத்த

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் மற்றும் ஏனைய தாதுப்பொருட்கள் மல்லிவிதையில் காணப்படுகின்றன.

இதனால் மல்லிவிதையை உண்டு ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்களைத் தடுக்கலாம்.

மல்லிச்செடியின் மத்திய இலைகளில் கால்சியம் அதிகளவு காணப்படுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் இச்செடியின் மத்திய இலைகளை உண்ணலாம்.

அனீமியாவைத் தடுக்க

இதில் இரும்புச்சத்து மற்றும் செம்புச்சத்து அதிகளவு காணப்படுகிறது. எனவே இதனை உண்ணும்போது இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த சோகை எனப்படும் அமீனியா தடுக்கப்படுகிறது.

மல்லிவிதையை வாங்கும் முறை

மல்லிவிதையை வாங்கும்போது கைகளில் வைத்து அழுத்தும்போது மல்லிவாசனை நன்கு வருவதை வாங்க வேண்டும். ஒரே சீரான நிறத்துடன், ஓட்டை இல்லாதவைகளைத் தேர்வு செய்யவும்.

தேவைக்கு தகுந்த மல்லிவிதைப் பொடியை வீட்டிலேயே தயார் செய்யவும். இதனால் கலப்படம் தவிர்க்கப்படுவதோடு வாசனை இழப்பும் தடுக்கப்படுகிறது.

 

மல்லிப்பொடி
மல்லிப்பொடி

 

மல்லிவிதையை காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து தண்ணீர் பட்டுவிடாமல் உபயோகிக்க வேண்டும்.

மல்லிவிதையானது ஊறுகாய், சட்னி, குழம்பு, சாஸ்கள், ரொட்டிகள், கேக்குகள, சாலட், சூப் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

உலகெங்கும் பரவலாக சமையலில் உபயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் மல்லிவிதையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயானது மல்லிவிதைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மூலிகை மசாலாப் பொருளான மல்லிவிதையை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

Comments

“கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா” மீது ஒரு மறுமொழி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.