கொத்தமல்லி விதை சட்னி வித்தியாசமான அசத்தல் சுவையுடன் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். எங்கள் ஊரில் பித்தம் அதிகம் உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து உண்பார்கள்.
காய்ச்சல் உள்ளிட்ட சுரநோய்களிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கும் இதனை செய்து கொடுப்பர். இனி சுவையான கொத்தமல்லி விதை சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்த மல்லி விதை – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 3 எண்ணம் (நடுத்தரமானது)
புளி – நெல்லிக்காய் அளவு
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – ஒரு எண்ணம்
கடுகு – ¼ ஸ்பூன்
வெந்தயம் – 10 எண்ணம்
கொத்தமல்லி விதை சட்னி செய்முறை
முதலில் கொத்த மல்லி விதை, மிளகாய் வற்றலை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கொத்த மல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
கொத்த மல்லி விதையானது வாசனை வந்து வெடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
புளியை பிய்த்துப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வறுத்த கொத்த மல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பின் அதனுடன் ஊற வைத்த புளி, தேவையான அளவு கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும். அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, அலசிய கறிவேப்பிலை, வெந்தயம், காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.
உளுந்தம் பருப்பு சிவந்து கடுகு வெடித்தவுடன் தாளிதப் பொருட்களை அரைத்த கொத்த மல்லி விதைக் கலவையுடன் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லி விதை சட்னி தயார்.
இதனை இட்லி, தோசை, ஆப்பம், சாத வகைகள் ஆகியவற்றுடன் இணைத்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் வறுத்த கொத்த மல்லி விதையுடன் தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து சட்னி தயார் செய்யலாம்.
மறுமொழி இடவும்