கொள்ளு ரசம்

கொள்ளு ரசம் செய்வது எப்படி?

கொள்ளு ரசம் ஆரோக்கியமான உணவு ஆகும். கொள்ளு உடலுக்கு வலிமை தருவதோடு, கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை உடையது.

சிறுதானியங்களுள் ஒன்றான கொள்ளு, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். கொள்ளினைக் கொண்டு இட்லி, துவையல், பொடி, மசியல், சுண்டல் ஆகியவையும் செய்யலாம்.

கொள்ளு ரசத்தை சாதத்தோடு சேர்த்து உண்ணலாம் அல்லது அப்படியே பருகலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் இதனை செய்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, ஜலதோசம் ஆகியவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும்.

இனி எளிய முறையில் சுவையான கொள்ளு ரசம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு – 50 கிராம்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

தக்காளி – 1 எண்ணம் (பெரியது)

மல்லி இலை – ஒரு கொத்து

கறிவேப்பிலை – 2 கீற்று

வெள்ளைப் பூண்டு – 8 பல் (சிறியது)

மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (பெரியது)

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

பெருங்காயப் பொடி – சிறிதளவு

உப்பு – தேவைக்கு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 1/2 ஸ்பூன்

வெந்தயம் – 1/4 ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

கொள்ளு ரசம் செய்முறை

கொள்ளை கல் நீக்கி சுத்தம் செய்து அலசிக் கொள்ளவும்.

குக்கரில் கொள்ளுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, ஏழு விசில் வந்ததும் சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்கிக் கொள்ளவும்.

கொள்ளினை வேக வைக்கும் முன்பு
கொள்ளினை வேக வைக்கும் முன்பு

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து, கொள்ளை வடித்து தண்ணீரை தனியே எடுத்துக் கொள்ளவும்.

தண்ணீரை வடிக்கும் போது
தண்ணீரை வடிக்கும் போது
கொள்ளு தண்ணீர்
கொள்ளு தண்ணீர்

மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுடன் நசுக்கிக் கொள்ளவும்.

மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒடித்துக் கொள்ளவும்.

புளியை 1/2 டம்ளர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைக்கும் போது இதழ்களாக பிய்த்து தனித்தனியாக ஊற விடவும்.

புளி ஊறிய பின்பு கரைத்து வடித்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைக்கும் போது
புளியை ஊற வைக்கும் போது

தக்காளியை அலசி புளிக் கரைசலுடன் சேர்த்து நன்கு பிசைந்து விட்டுக் கொள்ளவும்.

புளி கரைசலுடன் தக்காளி சேர்த்ததும்
புளி கரைசலுடன் தக்காளி சேர்த்ததும்
தக்காளியைக் கரைத்ததும்
தக்காளியைக் கரைத்ததும்

கொள்ளுத் தண்ணீரை புளி, தக்காளிக் கரைசலுடன் சேர்த்துக் கொள்ளவும். புளிப்பினை சரி பார்த்துக் கொள்ளவும். புளிப்பு அதிகமாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். புளிப்பு குறைவாக இருந்தால் தக்காளி ஒன்றைச் சேர்த்துக் கொள்ளவும்.

கொள்ளுத் தண்ணீரைச் சேர்க்கும் போது
கொள்ளுத் தண்ணீரைச் சேர்க்கும் போது

புளிக் கரைசலுடன் கொத்த மல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து விடவும்.

மல்லி, கறிவேப்பிலையைச் சேர்த்ததும்
மல்லி, கறிவேப்பிலையைச் சேர்த்ததும்

நசக்கிய வெள்ளைப் பூண்டினை புளிக் கரைசலுடன் சேர்க்கவும்.

பூண்டினைச் சேர்க்கும் போது
பூண்டினைச் சேர்க்கும் போது

பின்னர் அதனுடன் பெருங்காயப் பொடி, மிளகு சீரகப் பொடி சேர்க்கவும்.

மிளகு, சீரகப் பொடி சேர்த்ததும்
மிளகு, சீரகப் பொடி சேர்த்ததும்

அதனுடன் ஒடித்த மிளகாய் வற்றல் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

வற்றல் சேர்த்ததும்
வற்றல் சேர்த்ததும்

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

கடுகு வெடித்ததும் புளிக் கரைசலை சேர்க்கவும்.

புளிக்கரைசலைச் சேர்க்கும் போது
புளிக்கரைசலைச் சேர்க்கும் போது

நுரைத்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

நுரைத்ததும்
நுரைத்ததும்

சுவையான கொள்ளு ரசம் தயார்.

இந்த ரசத்தை சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்து ரசம் தயார் செய்யலாம்.

நாட்டு தக்காளி சேர்த்து ரசம் தயார் செய்தால் சுவை மிகும்.

ரசத்தை கண்டிப்பாக கொதிக்க விடக் கூடாது. ரசம் கொதித்து விட்டால் சிறிதளவு தண்ணீரை ரசத்தில் சேர்க்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்