கோச்செங்கட் சோழ நாயனார் ‍- எழுபது சிவ மாடக் கோவில்களை அமைத்தவர்

கோச்செங்கட் சோழ நாயனார்

கோச்செங்கட் சோழ நாயனார் யானை ஏற முடியாத எழுபது சிவ மாடக் கோவில்களை அமைத்த சோழ மன்னர்.

கையிலாயத்தில் புட்பதந்தன், மாலியவான் என இருவர் சிவகணங்களாக இருந்து இறைவருக்கு தொண்டுகள் புரிந்து வந்தனர்.

அவர்கள் இருவரும் தாமே மற்றவரைவிட சிவபக்தியில் சிறந்தவர் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஒருநாள் அவ்விருவருக்கும் சிவபக்தியில் சிறந்தவர் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.

அப்போது புட்பதந்தன் மாலியவானை சிலந்தியாக பிறக்கும்படி சபித்தான். உடனே மாலியவான் புட்தந்தனை யானையாகப் பிறக்கும்படி சபித்தான்.

மாலியவான் மற்றும் புட்பதந்தன் இருவரும் சிலந்தி மற்றும் யானையாக சோழ நாட்டில் காவிரிக் கரையில் இருந்த சந்திர தீர்த்தில் பிறந்தனர்.

இருவரும் சிவகணத்தவர்களாதலால் சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்தபோதும் அவர்களுக்கு இயற்கையாகவே சிவபக்தி உண்டானது.

அச்சந்திர தீர்த்தத்தில் வெண் நாவல் மரத்தடியில் எழுந்தருளிந்த சிவனாரை யானை தினந்தோறும் காவிரி நீரினைக் கொண்டு அபிசேகித்து மலர் சாத்தி வழிபடும்.

சிலந்தியானது மரத்திலிருந்து விழும் இலை மற்றும் சருகு இறைவார் மீது விழாத வண்ணமும், வெயிலினால் உண்டாகும் வெப்பத்தைக் குறைக்கும் வண்ணமும் இறைவனாரின் மேற்பகுதியில் வலை பின்னி வழிபட்டது.

சிலந்தி வலையைக் கண்டதும் ‘சிலந்தி வலை இறைவனாரை அசுத்தப்படுத்தியதாக’ நினைத்து வலையை தன்னுடைய துதிக்கையால் அகற்றியது.

யானையால் வலை அகற்றப்பட்டதை அறிந்ததும் சிலந்திக்கு யானை மேல் கோபம் ஏற்பட்டது.

சிலந்தி வலை பின்னுவதும், யானை அதனை அகற்றுவதும் தொடர்ந்தது. ஒருநாள் கோபம் மிகுதியால் யானையைக் கொல்ல எண்ணி சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது.

வலியால் துடித்த யானை துதிக்கையை ஓங்கி தரையில் அறைந்தது. சிலந்தி இறந்தது. சிலந்தியின் விசத்தால் யானையும் இறந்தது.

இறைவனார் யானைக்கு முக்தியும், சிலந்தி யானையைக் கொல்ல நினைத்ததால் சிலந்திக்கு மறுபிறவியும் அருளினார்.

சோழ அரசனான சுபதேவர் தன்னுடைய மனைவியான கமலாவதியுடன் குழந்தைச் செல்வம் வேண்டி தில்லை ஆடலரசனை வணங்கி வந்தார்.

இறைவனாரின் திருவருளால் கமலாவதி வயிற்றில் சிலந்தி குழந்தையாக உருவெடுத்தது.

கமலாவதிக்கு பிரசவம் நேரம் நெருங்கியபோது ‘இன்னும் ஒருநாழிகை கழித்து குழந்தை பிறந்தால் அவன் மூவுலகையும் வெல்லும் பேரரசன் ஆவான்’ என்று அரண்மனை சோதிடர் கூறினார்.

ஆதலால் அரசியாரும் குழந்தை பிறப்பை ஒருநாழிகை தள்ளிப்போட தன்னுடைய கால்களை கயிற்றால் பிணைத்து தலைகீழாகத் தொங்கவிடமாறு செய்தார்.

ஒருநாழிகை கழித்து அரசியின் கால்கள் விடுவிக்கப்பட்டு பிரசவம் ஆனது. பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்து காணப்பட்டன. அதனைக் கண்டதும் அரசியார் ‘கோசெங் கண்ணனோ?’ என்று அழைத்து மகிழ்ந்தார்.

பிரசவத்தை காலந்தாழ்த்தியதால் அரசியாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார்.

பின்னர் சுபதேவர் கோசெங்கட் சோழனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வீரத்தில் சிறந்தவராக்கினார். கோசெங்கட் சோழன் வீரத்தில் மட்டுமல்லாது சிவபக்தியிலும் சிறந்து விளங்கினான்.

சிவாலயங்களை அமைத்தும், சிவனடியார்களுக்கு வேண்டியதைச் செய்தும் வந்தான்.

தன்னுடைய முற்பிறவியினை அறிந்த சோழ அரசன் திருவானைக்காவில் யானை புகாதபடி சிறிய நுழைவாயிலை உடைய மாடக் கோவிலை அமைத்தான்.

இவ்வாறு தம்முடைய அரசாட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 70 சிவ மாடக்கோவில்களையும், மூன்று திருமால் கோவில்களையும் கட்டுவித்தான்.

தில்லையில் தங்கிய சோழ அரசன் அம்பலவாணரை வழிபட்டு இறுதியில் நீங்கா இன்பமான சிவப்பேறு பெற்றான்.

இறைஅருளால் முற்பிறவியை அறிந்து சிவபக்தியால் எழுபது யானை புகா மாடக்கோவில்களை அமைத்த கோச்செங்கட் சோழ நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராகும் நற்பேறு பெற்றார்.

கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை மாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

கோச்செங்கட் சோழ நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘உலகாண்ட செங்கணார்க்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.