வெயிலடிக்கும் கோடைகாலம் விளையாட ஏற்ற காலம்
வீதியெல்லாம் எங்களுக்கே சொந்தமாக மாறும் காலம்
குயிலுக்கூட்டம் கூவாது மயிலின்கூட்டம் ஆடாது
ஆட்டம் பாட்டம் எங்களுக்கே என்று சொல்லும் காலம்
வயல்வெளிகள் காஞ்சிருக்கும் வரவேற்க காத்திருக்கும்
வட்டமிட்டு ஓடிவாங்க என்று நம்மை அழைக்கும் காலம்
வியர்வையிலே குளிச்சாலும் வீசிவிட காத்தடிக்கும்
வேகமாக செல்லாது பகற்பொழுதும் காத்திருக்கும்
வயிறு நிரம்ப கூழிருக்கும் வத்தலதுக்கு துணையிருக்கும்
தயிரெல்லாம் மோராகி தாகம் தீர்க்க காத்திருக்கும்
தெருமறிச்சு பொங்கல் வச்சா மாரியம்மன் வருங்காலம்
தென்பொதிகை தென்றலுக்கு முந்திவரும் கோடைகாலம்
உயர்ந்த பனை மரம்கூட பதனீரைக் கொண்டிருக்கும்
ஓடில்லா பனங்காயில் நுங்கெல்லாம் நிறைஞ்சிருக்கும்
ஊருக்குள்ள வெள்ளரிக்கா இளநீரைப் போல் இனிக்கும்
உண்மையில எங்களுக்கு தோழனாக வந்த காலம்
காயமில்லை கவலையில்லை கால்வயிற்றில் பசியுமில்லை
காற்றைப்போல ஊற்றைப்போல நாங்கள் மாற ஏற்றகாலம்
நேயமிக்க பெரியோரே கோடைஇதை வாழ்த்துங்களேன்
நிறைவான அமைதியினை கோடையிலே காணுங்களேன்
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!