கோதுமை வெஜ் பப்ஸ் அருமையான சிற்றுண்டி ஆகும். பொதுவாக ‘பப்ஸ்’ மைதா மாவில் செய்யப்படும் உணவுப் பொருள்.
மேலும் பப்ஸ் செய்வதற்கு மைதா மாவினை மெல்லிய வட்டவடிமாக சப்பாத்தி போல் விரித்து ஸீட்ஸ் தயார் செய்து பிரிட்ஜில் ஆறு மணி நேரம் வைத்து பின்னர் பயன்படுத்துவர்.
ஆனால் கோதுமை பப்ஸ் செய்யும் போது கோதுமை ஸீட்ஸ்களை பிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை.
இனி சுவையான கோதுமை வெஜ் பப்ஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ஸீட்ஸ் தயார் செய்ய
கோதுமை மாவு – 1 கப் (200 கிராம்)
நல்லெண்ணெய் – 6 ஸ்பூன்
நெய் – 5 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஸ்டப்பிங் தயார் செய்ய
உருளைக்கிழங்கு – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
நல்லெண்ணெய் – 1&1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
தக்காளி – 1 எண்ணம் (பெரியது)
மசாலா பொடி – 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொரித்து எடுக்க
கடலை எண்ணெய் – 5 ஸ்பூன்
செய்முறை
உருளைக்கிழங்கினை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்;டிக் கொள்ளவும்.
கோதுமை மாவில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒருசேரக் கலந்து அதனுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து அதில் சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அதனுடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த உருளைக் கிழங்கினை மசித்துச் சேர்த்து ஒருசேரக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவினை சிறுஉருண்டைகளாக உருட்டவும். அவ்வுருண்டைகளை மெல்லிய சப்பாத்திகளாக விரிக்கவும்.
5 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் 5 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
முதலில் மெல்லிதாக விரித்த ஒருசப்பாத்தியின் மேல்பரப்பு முழுவதும் நல்லெண்ணெய் மற்றும் நெய் கலவையை தடவிக் கொள்ளவும்.
பின்னர் மேற்பரப்பு மீது கோதுமை மாவினை லேசாக தூவிக் கொள்ளவும்.
பின்னர் அதன் மீது மெல்லிதாக விரித்த அடுத்த சப்பாத்தியை விரிக்கவும்.
அந்த சப்பாத்தியின் மேற்பரப்பு மீதும் நல்லெண்ணெய் மற்றும்நெய் கலவை பூசி, கோதுமை மாவினைத் தூவி மற்றொரு சப்பாத்தியை அதன்மீது விரிக்கவும்.
இவ்வாறு மேற்கூறிய முறையில் மூன்று அல்லது நான்கு சப்பாத்திகளை அடுக்கி ஒரு செட் தயார் செய்யவும்.
அந்த செட் சப்பாத்திகளை நான்கு பகுதிகளாகப் கத்தியால் கீறி பிரித்துக் கொள்ளவும்.
பிரித்த ஒரு பகுதியின் மத்தியில் வதக்கி வைத்துள்ள ஸ்டப்பிங் கலவை வைத்து படத்தில் காட்டியபடியே அல்லது முக்கோண வடிவிலோ மடித்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.
ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் கடலை எண்ணெய் ஊறற்றி அடுப்பினை சிம்மிற்கும் சற்று அதிகமாக வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் இரண்டு அல்லது மூன்று மடக்கி வைத்துள்ளவைகளைச் சேர்த்தும் குக்கரை தட்டு வைத்து மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து தட்டினைத் திறந்து உள்ளே உள்ளவற்றை திருப்பிப் போட்டு தட்டு போட்டு மூடி ஐந்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
பப்ஸ் இருபுறமும் வெந்து பிய்த்து பார்க்கும்போது லேயர் லேயராக இருக்கும். சுவையான வெஜ் பப்ஸ் தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து ஸ்டப்பிங் மசாலா தயார் செய்யலாம்.
நெய்க்குப் பதில் வெண்ணெய் பயன்படுத்தினால் பப்ஸ் லேயர் லேயராக அழகாக வரும்.
மசாலா பொடிக்குப் பதில் மல்லிப் பொடி, மிளகாய் பொடி மற்றும் சீரகப்பொடி சேர்த்து ஸ்டப்பிங் மசாலா தயார் செய்யலாம்.