கோலிக் கொழுக்கட்டை

கோலிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

கோலிக் கொழுக்கட்டை அருமையான சிற்றுண்டி ஆகும். இதனைச் செய்வதும் மிகவும் எளிது. இட்லி, தோசைக்கு மாற்றாக இதனைச் செய்து கொடுக்கலாம்.

மாலை நேரங்களில் பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கும் இதனை சூடாகச் செய்து கொடுக்கலாம்.

மிகவும் சாப்டாக இருக்கும் இதனுடன் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

இனி சுவையான கோலிக் கொழுக்கட்டை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 1 கப்

தண்ணீர் – 1 கப்புக்கும் சற்று குறைவு

உப்பு – தேவையான அளவு

நெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்

இஞ்சி – 2 இன்ச் கனஅளவு

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

கறிவேப்பிலை – 2 கீற்று

மல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் நெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நெய் உப்பு சேர்த்து கொதிக்கும்போது
நெய் உப்பு சேர்த்து கொதிக்கும்போது

தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அதில் அரிசி மாவினைக் கொட்டி ஒருசேரக் கட்டியில்லாமல் கிளறவும். பின்னர் மூடியைக் கொண்டு மூடி வைத்து அடுப்பில் மூன்று நிமிடங்கள் வைக்கவும்.

அரிசி மாவினைச் சேர்க்கும்போது
அரிசி மாவினைச் சேர்க்கும்போது
மாவினை நன்கு கிளறியதும்
மாவினை நன்கு கிளறியதும்

பின்னர் அடுப்பிலிருந்து அதனை இறக்கி கையை ஈரப்படுத்திக் கொண்டு மாவினை நன்கு ஒருசேரப் பிசையவும்.

மாவினைத் திரட்டியதும்
மாவினைத் திரட்டியதும்

பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாகத் திரட்டிக் கொள்ளவும். இவ்வாறு எல்லா மாவினையும் உருண்டைகளாகத் திரட்டவும்.

உருண்டைகளாகத் திரட்டியதும்
உருண்டைகளாகத் திரட்டியதும்

பின்னர் இதனை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கொழுக்கட்டைகளை வேக வைக்கும் முன்பு
கொழுக்கட்டைகளை வேக வைக்கும் முன்பு
கொழுக்கட்டைகளை வேக வைத்த பின்
கொழுக்கட்டைகளை வேக வைத்த பின்

இஞ்சியை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி பொடியாக வெட்டவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

இஞ்சி,  மிளகாய் சேர்த்ததும்
இஞ்சி, மிளகாய் சேர்த்ததும்

பச்சை வாசனை நீங்கியதும் அதில் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை போட்டு ஒரே சீராக மெதுவாக கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

கொழுக்கட்டை சேர்க்கும் போது
கொழுக்கட்டை சேர்க்கும் போது

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து கிளறி இறக்கவும்.

கொத்த மல்லி இலையைச் சேர்த்ததும்
கொத்த மல்லி இலையைச் சேர்த்ததும்

சுவையான கோலி கொழுக்கட்டை தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் எலுமிச்சை சாறினை அவித்த கொழுக்கட்டைகளுடன் சேர்த்து பரிமாறலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்