கோழி சிலம்ப சிலம்பும் குருகு எங்கும்

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் எட்டாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை தென்பாண்டி நாட்டைச் சார்ந்த திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்களின் அறியாமை இருளினை நீக்கும் இறைவனான சிவபெருமானின் மீது பாடப்பட்டது.

திருவெம்பாவை மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது பாடப்பட்டது.

9-ம் நூற்றாண்டைச் சார்ந்த மாணிவாசகர் பாடிய இப்பாடல் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின்போது பாடப்படும் பெருமை உடையது.

பொழுது விடிந்ததை உலக உயிர்கள் அறிவித்தும், சிவாலயத்தின் இசைக்கருவிகள் தெரிவித்தும், நோன்பிற்கு வராமல் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை, சிவபெருமானைப் பாட அழைப்பதாக திருவெம்பாவையின் எட்டாம் பாடல் அமைந்துள்ளது.

“கோழிகளும், பறவைகளும் பொழுது விடிந்ததால் ஆரவாரம் செய்கின்றன. சிவாலயத்தில் திருப்பள்ளி எழுச்சிக்காக இசைகருவிகளும் வெண்சங்குகளும் இசைக்கப்படுகின்றன.

நாங்கள் ஒப்பில்லாத இறைவரான சிவபெருமானைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீயோ, எதனையும் பொருட்படுத்தாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.

உன்னுடைய உறக்கத்திலிருந்து எழுந்து, ஊழிக்காலத்தை தாண்டி நிற்கும் இறைவனைப் பாட வருவாயாக” என்று பெண்கள் தோழியை அழைக்கின்றனர்.

கடமையைச் செய்ய வேண்டும்; உயிர்களின் அறியாமையை என்ற இருளினைப் போக்கும் இறைவரான சிவபெருமானை வழிபாடு செய்யும் கடமையை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

இனி திருவெம்பாவை எட்டாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 8

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

விளக்கம்

பாவை நோன்பிற்காக பெண்கள் இறைவனின் புகழினைப் பாடியபடி செல்கின்றனர். நோன்பிற்குத் தயார் ஆகாமல் தோழி வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

அத்தோழியிடம் பெண்கள் “பொழுது விடிந்ததை அறிவிக்க சேவல் கூவி விட்டது; புறவைகளும் சத்தம் இடுகின்றன.

சிவாலயத்தில் திருபள்ளியெழுச்சி நடைபெறும் நேரத்தை அறிவிக்க ஏழு துளைகளை உடைய இசைக்கருவியும் வெண்மையான சங்கும் ஒலிக்கப்படுகிறது.

இந்த விடியல் காலையில் சூரியனானது எப்படி இருளை விலக்குகின்றதோ, அதே போல் உலக உயிர்களின் அறியாமை என்னும் இருளை இறைவனார் தன்னுடைய ஈடுஇணையற்ற பேரொளியால் நீக்குகின்றார்.

அவருடைய ஒப்பற்ற பெருங் கருணையை எண்ணி வியந்து இறைவனாரின் நிகரில்லாத பெருமையினைப் புகழும் அருட்பாடல்களையே பாடுகின்றோம்.

இவற்றையெல்லாம் நீ கேட்கவில்லையா?

பொழுது புலர்ந்ததை அறியவில்லையா?

அப்படி என்ன ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளாய்?

வாயைத் திறந்து பேசலாம் அல்லவா?

தொடர்ந்து தூக்கத்தில் இருந்து வாழ்வாயாக.

நமக்கு அரசனாக விளங்கும் இறைவருக்கு அன்பு செலுத்தும் முறை இவ்வகைதானா?

ஊழிக்காலத்தைக் கடந்து உலகிற்கு முதல்வராகவும், ஒப்பற்றவராகவும் உமையொரு பாகமுமாக விளங்கும் இறைவரான சிவபெருமானைப் பாட வருவாயாக.” என்று கூறுகிறார்கள்.

சிற்றுயிர்கள் இயல்பில் மாறாமல் தங்களுடைய கடமையைச் செய்கின்றன. பேருயிரான மனிதனோ அறியாமை என்னும் இருளில் மூழ்கி இறைவனை வழிபடவேண்டும் என்ற கடமையில் இருந்து தவறுகிறான்.

வினையே (கடமை) உயிராகக் கருத வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.