நம்முடைய முன்னோர்கள் வகுத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவற்றை இன்று வரை நாம் பின்பற்றி வருகிறோம்.
இருந்தாலும் அவற்றில் உள்ள உளவியல் உண்மைகளை நாம் புரிந்து கொண்டோமா?
அதற்கேற்றாற்போல் நடந்து கொள்கிறோமா? என்பது சந்தேகம்தான் .
விவாகம் முதல் இறப்பு வரையுள்ள வாழ்வியல் சுக, துக்க நிகழ்வுகள் அனைத்திற்கும் உளவியல் ரீதியான வடிவமைப்பைதான் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று வகுத்து தந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
திருமணம்
இருமனம் இணைவதுதான் திருமணம் என்றாலும் கூட, இருவீட்டினர் அவர்தம் உறவுமுறை அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் சம்பிரதாயந்தான் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை உள்ள அத்தனை சுப நிகழ்வுகளும்.
முன்பின் அறிமுகம் இல்லா இரு குடும்பங்கள், திருமணம் என்கிற பந்தத்தில் இணையும் போது, அவர்களைச் சார்ந்த அத்தனை உறவுகளும், ஒருவரோடு ஒருவர் அறிமுகம் கொண்டு, புரிதலோடு கூடிய ஒரு புதிய பந்தத்தில் மகிழ்வோடு ஒன்றவே பல நிகழ்வுகளும் உள்ளன.
இயற்கையின் சக்தியை அறிந்ததால் தான், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பஞ்சபூங்களில் ஒன்றான அக்னியை சாட்சியாக வைத்து, திருமணம் நடைபெறுகின்றது.
துக்க நிகழ்வு
அதேபோல் துக்க நிகழ்வு வீடுகளிலும், இறப்பு முதல் கிரியை வரை நடக்கும் அனைத்திலும் சடங்கு, சம்பிரதாயங்கள் என சில உளவியல் கூறுகள் பொதிந்துள்ளன,
இறந்தவரை கிடத்தி சில சடங்குகள் செய்யும்போது அது மூடநம்பிக்கையாக தோன்றும். நுணுக்கமாக அச்சடங்குகளை நோக்கும்போது நாம் அதன் நுட்பங்களை நன்கு புரிந்து கொள்ளலாம்.
இறந்தவரின் துணையோ, உடன்பிறந்தாரோ, பெற்ற பிள்ளைகளோ, எந்த உறவுமுறையாயினும் துக்கத்தை உள்ளே வைத்து அடக்கிக் கொள்ளாமல், முழுவதுமாக வெளியே கொட்டித் தீர்த்துவிட வடிகாலாக அமைவதுதான் அந்த நேரத்தில் நடைபெறும் சடங்குகள்.
உறவுகள் புடைசூழ அந்த துக்கம் வெளிப்பட, வெளிப்பட மனம் சற்று தெளிவு பெறும்.
இறந்தவரது இல்லத்தில் கிரியை வரை தினமும் அவருக்கு பிடித்த பண்டங்களை வைத்து வழிபடுவர்.
இது எதற்கு?
அவர் வந்து சாப்பிடுவாரா என்ன?
மேம்போக்காக பார்த்தால் இது சுத்த மூடநம்பிக்கையாகத்தான் தோன்றும். ஆனால் இதிலும் ஒரு உளவியல் உண்மை உள்ளது.
இறந்தவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார் ஊன், உறக்கம் இல்லாமல் பித்து பிடித்தாற்போல்தான் இருப்பர்.
எதுவும் சமைக்காமல், சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக் கொள்வர்.
இறந்தவருக்கு படையல் வைத்து அவற்றை மீதம் வைக்காமல் சாப்பிட்டால்தான் அன்னாரது ஆத்மா சாந்தி அடையும் என்கிற நம்பிக்கையை சம்பிரதாயமாக வைக்கப்படும் போது மனிதன் அதற்கு கட்டுப்படுவான்,
ஏற்கனவே மனதளவில் சோர்ந்து போயிருக்கும் போது உண்ணாமல் உடலும் சோர்வடைந்தால் அவனது ஆரோக்கியம் பாதிப்புள்ளாகி விடும், என்பதை உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் வகுத்த ‘இறந்தோர்க்கு படைத்தல்’ என்பதை சம்பிரதாயமாக வகுத்து இருக்க வேண்டும்,
முன்னோர் வகுத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் பல மனிதனை சாந்தப்படுத்தி, அவனது மனதை சமநிலைப் படுத்தவேதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதிக துக்கமோ அதிக மகிழ்ச்சியோ, அவற்றை கட்டுக்குள் வைக்கவும், மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவும் வேண்டித்தான்.
மனித நலனுக்காக வகுத்த சடங்கு, சம்பிரதாயங்களை,’ சடங்கு சம்பிரதாயத்துக்காக மனிதன்’ என்கிற தவறான புரிதலில்தான் நாம் இன்று உள்ளோம்.
‘இந்த சம்பிரதாய முறையை செய்தே தீரணும்; இது எங்க குடும்ப வழக்கம். எங்களோட வீட்டு முறைப்படிதான் செய்யணும்,’ இது போன்ற அதிகார தோரணையால், எத்தனை கல்யாண வீடுகளில் சண்டை சச்சரவுகளாகி உறவுகளுக்கிடையே மோதலாகிப் போகின்றன.
இன்னும் சொல்லபோனால் சில இடங்களில் கல்யாணமே நின்றுபோய்விடக் கூடிய அவலங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சம்பிரதாயம் வகுத்தது எதனால் என்கிற அடிப்படை மறைந்து, தேய்ந்து, இப்போது அவை உறவுகளிடையே பிரிவினையும், வேதனையையும் ஏற்படுத்தி விட்டன.
அறிவியல் தொழில்நுட்பமும், மின்னணு தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் ‘மனித மனதை மட்டுமே நுட்பமாக’ ஆராய்ந்து, மனித நலனுக்கான ஆயுதமாக நமது முன்னோர் வகுத்த சடங்கு, சம்பிரதாயங்கள் யாவும் இன்று ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் ஆயுதமாகிப் போனதுதான் அவலம்.
இன்றைய அறிவியலாளர்கள் கூட ‘மூடநம்பிக்கை’ என்று நாம் ஒதுக்கிவிட்ட சில விஷயங்களில் அறிவியல் உண்மை உள்ளது என உலகிற்கே உரைத்துக் காட்டியுள்ளனர்.
ஆகையால் நமது முன்னோர் வகுத்த சடங்கு சம்பிரதாயங்களை மனித மனங்களை சீராக்கவும், நல்லனவற்றிற்கு கட்டுப்படவும், எவர் மனதையும் புண்படுத்தாத நெறிமுறைகளாகவும் மாற்றுவதுதான் நம்முடைய மரபிற்கு நாம் செய்யும் மாண்பாகும்.
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
மறுமொழி இடவும்