பேரணி – சிறுகதை

ஆரியபாதம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.

அவருக்கு தேசப்பற்று அதிகம். சமூகநலத் தொண்டு என்றால் எப்போதும் முன்னாடி நிற்பவர்.

காலையில் பொழுது விடிந்தது. ஆரியபாதம் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.

அவருடைய மனைவி பார்வதி கையில் காபியுடன் வந்தார்.

“என்னங்க, காப்பிய குடிச்சிட்டு கடைக்கு போயிட்டு வந்துடுங்க.” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

ஆரியபாதம் காபி குடித்து முடிக்க, உள்ளிருந்து தவசுராமன் வெளியே வந்தான்.

“அப்பா ஆபிசுக்கு போயிட்டு வரேன்பா.”

“கிளம்பிட்டியா? பாத்து பத்திரமா போயிட்டு வாப்பா”

“சரிப்பா” என்று கூறி தவசுராமன் ஸ்கூட்டரை உதைத்தான்.

ஆரியபாதம் “பார்வதி! பார்வதி!” என்று சத்தம் போட, பார்வதி வெளியே வந்தார்.

” என்னங்க இங்க நின்னுகிட்டு ஏலம் போடுறீங்க?”

“ஒன்னும் இல்ல; கடைக்கு போய் வர சொன்னல்ல. என்னென்ன சாமான் வாங்கணும்னு எழுதி கொடுத்துடு. நான் மறந்துடுவேன்” என்றார் ஆரியபாதம்.

“சரி, சரி. இங்கேயே நின்னுகிட்டு ஏலம் போடாதீங்க. உள்ள வாங்க” பார்வதி சொன்னதும் இருவரும் உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்தில் ஆடியபாதம் கையில் மஞ்சப்பையுடன் வெளியே வந்தார் .

“என்னங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. எங்கேயும் நின்னு ‘வளவள’ன்னு பேசிக்கிட்டு நிக்காதீங்க. சொன்ன சாமான் எல்லாம் மறந்துடாம வாங்கிட்டு சீக்கிரமா வாங்க. நான் சமைக்கணும்” என்று சொல்லி வழி அனுப்பி வைத்துவிட்டு உள்ளே சென்றார் பார்வதி.

கடைத்தெருவில் ‘நெகிழிப் பைகள் (பிளாஸ்டிக்) பயன்படுத்தக் கூடாது‘ என்று விழிப்புணர்வு பேரணி நடந்து கொண்டிருந்தது .

கடைக்கு சென்ற ஆரியபாதமும் பேரணியில் கலந்து கொண்டார் .

பேரணி வீதி வீதியாக வலம் வந்தது.

ஆரியபாதமும் கோஷங்களை எழுப்பி கொண்டு உற்சாகத்துடன் நடை போட்டுக் கொண்டு இருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. பேரணி ஓரிடத்தில் முடிவுற்றது.

மதியம் ஒரு மணி. அப்போதுதான் அவருக்கு தன் மனைவி பார்வதி கடையில் சாமான் வாங்கி வர சொன்னது நினைவு வந்தது.

அவசரம் அவசரமாக அங்கிருந்து கிளம்பி கடைக்குச் சென்று காய்கறிகள் மளிகை சாமான்கள் எல்லாம் லிஸ்ட்டை பார்த்து வாங்கிக் கொண்டு விறுவிறுவென்று நடந்தார்.

சிறிது நேரத்தில் ஆரியபாதம் வீட்டை அடைய, எதிர்பார்த்து காத்திருந்த பார்வதி, பையை வாங்கிக் கொள்ள இருவரும் உள்ளே சென்றனர்.

பார்வதி பையை கொண்டு டேபிளின் மீது வைத்துவிட்டு
“ஏன் இவ்வளவு நேரம்? என்று நான் கேட்க மாட்டேன்.

கடைத்தெருவில் நெகிழிப் பைகள் (பிளாஸ்டிக்) விழிப்புணர்வு பேரணி நடக்குதுன்னு பக்கத்து வீட்ல சொன்னாங்க.

நான் அப்பவே புரிஞ்சுக்கிட்டேன். சாமான் வாங்கிட்டு இப்போதைக்கு நீங்க வர மாட்டீங்கன்னு.

அதனால இருந்ததை வச்சு சமைச்சு வச்சு இருக்கேன். கை, கால், முகம் கழுவிட்டு வாங்க; சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு ஃபேன் சுவிட்சை போட்டார்.

ஆரியபாதம் சட்டையைக் கழற்றிவிட்டு போய் கை, கால், முகம் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தார்.

அப்போது டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த மஞ்சப்பை ஃபேன் காற்றில் சாய, உள்ளேயிருந்து நெகிழிப் பைகளுடன் சாமான்கள் சரிந்து விழுந்தன பல் இளித்துக் கொண்டு …

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.