சடைய நாயனார் – சுந்தரரின் தந்தை

சடைய நாயனார் தேவார‌ மூவருள் ஒருவரான சுந்தரரின் தந்தை ஆவார். சிவபக்தி மிகுந்த இவரைப் போலவே சுந்தரரும் சிவன்பால் அன்பு கொண்டவராக விளங்கினார்.

அவர் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவர் குலத்தில் தோன்றினார்.

அவரின் முன்னோர்கள் அனைவரும் சிவனாருக்கு தொண்டு செய்து சைவத்தை போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தனர். சிவனடியார்களின் மேல் அன்பு கொண்டு அவர்களைச் சிறப்புறச் செய்தனர்.

சடையனாரும் தம்முடைய முன்னோர்களைப் போலவே வேதம் ஓதி முறையாக வழிபாடு நடத்தி சிவனாரை போற்றி தொழுது வந்தார்.

இவருடைய சிவபக்தி மற்றும் நல்வினைகள் பயனாக சுந்தரரை மகனாக இறையருளால் பெற்றார்.

திருநாவலூரில் உள்ள இறைவனின் நாமம் ஆரூரார் என்பதாகும். ஆதலால் சடைய நாயனார் சுந்தரருக்கு ஆரூரார் என்று பெயரிட்டார்.

திருநாவலூர் இறைவனாரை வழிபட வந்த நரசிங்கமுனைய நாயனார் திருநாவலூர் வீதியில் தேர்ருட்டி விளையாடிய ஆரூராரைக் கண்டு அழகில் மயங்கினார்.

ஆரூரார் பற்றிய விவரம் அறிந்த நரசிங்க முனையனார், சடைய நாயனாரிடம் சென்று ஆரூராரை வளர்க்கும் பணியை தம்மிடம் ஒப்படைக்குமாறு வேண்டினார்.

சடைய நாயனாரும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆரூராரை நரசிங்க முனைய நாயனாரிடம் ஒப்படைத்தார்.

இறைவன்பால் அன்பு செலுத்திய அவர் இறுதியில் இறைவனின் திருபாதம் அடைந்து வீடுபேற்றினைப் பெற்றார்.

சுந்தரர் சடைய நாயனாரை, ‘ஊரன் சடையன்றன் காதலன்’, ‘சடையன்றன் சிறுவன் வன்றொண்டன்’, ‘சடையன் திருவாரூரன்’ ‘நண்புடைய நன்சடையன் சிறுவன்’ ‘சடையன் காதலன்’ என தம்முடைய பாடல்களில் பல இடங்களில் பாடி சிறப்பித்துள்ளார்.

இயற்கையிலேயே சிவனார்பால் அன்பு கொண்டுதாலும், சுந்தரரை மைந்தனாகப் பெற்றதாலும் சடைய நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார்.

சடைய நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சடைய நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்’ என்று போற்றுகிறார்.

One Reply to “சடைய நாயனார் – சுந்தரரின் தந்தை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.