உடலில் அதிக சர்க்கரையுடன் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தம் தான் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதிகமான சர்க்கரை இரத்தக் குழாயில் படிந்து, அது அடைபடுவதால் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் தடுக்க, இரத்தத்தில் சர்க்கரை அதிகமாவதற்கான காரணங்களை நாம் கண்டறிய வேண்டும்.
உணவு முறை மட்டுமல்லாது வேறு பல காரணங்களும் இதில் இருக்கின்றன. இதை நீங்கள் புரிந்து கொள்ள, எங்கிருந்தெல்லாம் சர்க்கரை உற்பத்தியாகிறது, எங்கிருந்தெல்லாம் சர்க்கரை வருகிறது என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
சர்க்கரை நோய் உறுப்புகள்
1. இரைப்பை
இங்கு வரும் உணவானது செரிக்கப்பட்டு சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள குடல் உறிஞ்சிகளால் சர்க்கரை உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது.
2. கணையம்
நாம் உண்ணும் உணவிற்கேற்ப இன்சுலின் இங்கிருந்து தான் சுரக்கிறது. இன்சுலின் சரிவர சுரந்தால் தான் அது ரத்தத்திலுள்ள சர்க்கரையை உடல் உறுப்புகளுக்குள் செலுத்தி, எரித்து, சக்தியாக மாற்றி நமக்குக் கொடுக்கிறது. இந்த இன்சுலினால்தான், அதிகப்படியாக உள்ள சர்க்கரை சதைப் பகுதிகளுக்குள்ளும் சதை நார்களுக்குள்ளும் தள்ளப்பட்டு கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கப்படுகிறது.
3. கல்லீரல்
இங்கு மிக முக்கியமான வேதியியல் மாற்றங்கள் உண்டாகின்றன. குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படும் சர்க்கரையும், கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினும் கல்லீரலுக்கு செல்கின்றன. ஏறக்குறைய 60-70% சர்க்கரை இங்கு வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
இன்சுலின் இருந்தால் தான் இந்த மாற்றங்கள் நிகழும். இங்கு சர்க்கரையானது கிளைக்கோஜன் என்னும் பொருளாக மாற்றப் படுகிறது. இதற்கும் அதிகமாக உள்ள சர்க்கரை இன்சுலினுடன் சேர்ந்து மற்ற பகுதிகளுக்குச் சென்று தசைகள் கொழுப்புப் படிவங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று சக்தியாக மாற்றப்படுகிறது.
4. தசை, சதை நார்கள், கொழுப்புப் படிவங்கள்
நம் உடலில் 60ம% முதல் 70% சக்தியை செலவழிப்பவை தசை நார்கள் தான். நடக்கும் போதும், பல பணிகளை செய்யும் போதும் இரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரை இங்கு தான் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
மேலே சொன்ன நான்கு உறுப்புகளைச் சுற்றித்தான் சர்க்கரை அதிகமாவதும் குறைவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக,
1. நாம் அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை இயல்பாகவே அதிகமாகும்.
2. இன்சுலின் சுரப்பு குறைந்தாலோ அல்லது வேலை செய்யாமல் இருந்தாலோ இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும். உண்ணும் உணவிற்கேற்ப இன்சுலின் சுரக்க வேண்டும். அப்படியில்லாமல் இன்சுலின் குறைவாகவும் சர்க்கரை அதிகமாகவும் இருந்தால் இவை வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாமல் போகிறது. எனவே இரத்தக் குழாய்களில் அதிக சர்க்கரை ஓடிக் கொண்டிருக்கும்.
3. கல்லீரல் பிரச்சனைகள் இருக்கலாம். நாம் உண்ணும் சர்க்கரை கிளைக் கோஜன்னாக சேமிக்கப்படுகிறது. நாம் சாப்பிட்ட பின் அடுத்த வேளை உணவை கிட்டதட்ட 4 முதல் 6 மணி நேரம் கழித்து தான் சாப்பிடுகிறோம்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் நம் உடலுக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது? அதிகமாக இருக்கும் சர்க்கரை கிளைக்கோஜென்னாக சேமிக்கப்பட்டு இது கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தில் கலந்து நமக்கு சக்தியை தருகிறது. எனவே இந்த கிளைக்கோஜென் உற்பத்தியிலும் அது சம்பந்தப்பட்ட நொதிப்பொருட்களிலும், பிரச்சனைகள் வரலாம்.
4. தசை, சதை நார்கள், கொழுப்பு படிவங்களில் தான் சர்க்கரை மிக அதிக அளவில் எரிபொருளாக, சக்தியாக மாற்றப்படுகிறது. ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் சதை நார்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் இன்சுலின் இருந்தால் தான் அவை உள்ளே செல்ல முடியும். அவை உள்ளே சென்றாலும் இன்சுலின் இருந்தால் தான் வேதியியல் மாற்றங்கள் நிகழ முடியும்.
இங்குதான் மிக முக்கியமான குறைபாடு பலருக்கும் உண்டாவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இதைத்தான் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் (Insulin Resistance) என்று சொல்கிறோம்.
இன்சுலின் குறைந்தாலும் அல்லது வேலை செய்யாமல் போனாலும், நீண்ட நாட்களாக நம் உடலில் உடற்பயிற்சியும் தசைநார்கள் உபயோகப்படுத்தப்படாமலும் இருந்தால் இந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்று சொல்லக்கூடிய இன்சுலின் எதிர்ப்பு சக்தி அந்த தசை நார்களில் உருவாகிறது. இதிலும் பல நொதிப் பொருட்களும், ரிசப்டார், போஸ்ட் ரிசப்டார் டிபெக்டஸ் என்று சொல்லக் கூடிய பல விசயங்கள் இதில் அடங்கியுள்ளன.
மேற்சொன்ன நான்கு முக்கிய குறைபாடுகள் தான் நமது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கின்றன. இக்குறைபாடுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படலாம்.
இன்சுலின் என்னும் ஒரேயொரு ஹார்மோன் தான் நமது உடலில் இரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கக்கூடிய சக்தி படைத்தது. மற்ற அனைத்து ஹார்மோன்களும் இரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தக் கூடியவை. ஆகவே இவ்விரண்டிற்கும் சீரான சமநிலை இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் போகும் போது இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகலாம். இதை 5வது குறைபாடு என்றே சொல்லலாம். பல காரணங்களுக்காக நாம் உணர்ச்சிவசப் படுகிறோம், கோபப்படுகிறோம் அப்படி நிகழும் போது அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கிறது. இதை Counter Hormone for Insulin என்று சொல்வார்கள். அதாவது இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யக்கூடியவை என்று பொருள்.
எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் சிகச்சை செய்தால் தான் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.
Comments are closed.