சாக்சி மாலிக் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். இவர் கட்டற்ற மற்போர் விளையாட்டு வீராங்கனை ஆவார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மற்போர் வீராங்கனை என்ற சாதனையை சாக்சி மாலிக் செய்துள்ளார். இவர் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற நான்காவது இந்திய பெண் விளையாட்டு வீரர் ஆவார்.
இவர் 2013 காமன்வெல்த் போட்டியில் வெண்கலமும், 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும், 2015 ஆசிய மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.
இவர் இந்திய அரசின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வென்றுள்ளார். இவரைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பிறப்பு மற்றும் இளமைக்காலம்
இவர் அரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள மோக்ரா கிராமத்தில் 03.09.1992-ல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சுக்பீர் மற்றும் சுதீஷ் மாலிக் ஆவர்.
இவருடைய தந்தையார் டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்பரேசனில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவருடைய தாயார் அங்கன்வாடியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.
மல்யுத்த வீராங்கனையாக
சாக்சியின் தாத்தா பாட்லு ராம் மல்யுத்த வீரர். இவருடைய அப்பாவின் உற்சாகப்படுத்தலின் காரணமாக இவரும் மல்யுத்த வீராக விருப்பம் கொண்டார்.
இவர் தனது 12 வயதில் ஈசுவர் தாகியா என்பவரிடம் ரோத்தக் சோட்டு ராம் மைதானத்தில் மல்யுத்தம் கற்க ஆரம்பித்தார். இவர் பெரும்பாலும் ஆண்களை எதிர்த்தே பயிற்சி மேற்கொண்டார்.
இதனால் இவரும் இவருடைய பயிற்சியாளரும் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார்கள். இருந்தபோதிலும் மல்யுத்தத்தின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக மல்யுத்தத்தை தொடர்ந்து கற்றார்.
சாதனைகள்
சாக்சி 2010-ல் உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் 58 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதுவே இவரது முதல் சர்வதேசப் போட்டியாகும். இதில் இவர் வெண்கலம் வென்றார்.
2013-ல் ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம் 63 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார்.
2014-ல் டேவ்ஹீல்ட்ஸ் சர்வதேச போட்டியில் 60 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.
2014-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம் 58 கிலோ பிரிவில் வெள்ளியைக் கைபற்றினார்.
2014-ல் தாஷ்கண்டில் நடைபெற்ற உலக மற்போர் போட்டியில் பங்கேற்றார்.
2015-ல் தோகாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்சிப் போட்டியில் மல்யுத்தம் 60 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார்.
2016-ல் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் முன்னாள் உலக சேம்பியனைத் தோற்கடித்து ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானார்.
2016 ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் 58 கிலோ பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார்.
சொந்த வாழ்க்கை
சாக்சி இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன் மூலம் முதல் நிலை அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் மகிரிஷி தயானந்தர் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 2016 இறுதியில் மல்யுத்த வீரரை மணக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விருதுகள் மற்றும் பெருமைகள்
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான இந்திய அரசின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்றுள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் இந்திய மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தது சாக்சியின் மாபெரும் சாதனையாகும்.
மனஉறுதி, இறுதி வரை போராடும் குணம், கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே ரியோவில் இவரால் பதக்கம் வெல்ல முடிந்தது.
சாதாரண நிலையில் உள்ளவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சாக்சி மாலிக் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
நாமும் நாம் சார்ந்த துறைகளில் சாக்சியைப் போல மனஉறுதியோடு இறுதிவரை போராடி வெற்றியை நம் வசப்படுத்துவோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!