எங்கெங்கும் சக்தியை தந்திட என்றே
சித்திரையும் வந்தாள் – அவள்
என்னென்று ஏதென்று கேட்டிடும் முன்னே
அத்தனையும் தந்தாள் – செல்வம்
அத்தனையும் தந்தாள்
பொங்கும் நுரையுடன் வானில் தவழும்
மேகமென வருவாள் – அவள்
பெய்யும் மழையென பூமியைத் தினம்
துளிர்த்திடச் செய்வாள் – பசுமை
துளிர்த்திடச் செய்வாள்
கங்கையும் காவிரியும் சேர்த்திட என்றே
யுக்தியொன்று தருவாள் – அவள்
கன்னடர் தமிழர் பேதம் மறந்து
மலர்திடச் செய்வாள் – நேசம்
மலர்திடச் செய்வாள்
தென்கடல் சேர்ந்திடும் ஆறுகளெல்லாம்
தேய்வதையும் தடுப்பாள் – தமிழ்
தேசம் முழுவதும் மேன்மை அடைந்திட
நித்தம் வரம் கொடுப்பாள் – சித்திரை
நித்தம் வரம் கொடுப்பாள்
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)