பூவிருந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் செல்லும் பஸ்ஸில் திருவள்ளூருக்கு பயணச்சீட்டு கேட்டான் ராஜா.
நடத்துனர் முப்பத்தி இரண்டு ரூபாய் பயணச்சீட்டு கொடுத்த போது, இருபது ரூபாய் நோட்டுக்கள் இரண்டை நீட்டினான் ராஜா.
“ரெண்டு ரூபா சில்லறை இருந்தா குடுங்க! பத்து ரூபா தர்ரேன்.” கேட்டார் நடத்துநர்.
“இல்லைங்க” அசடு வழிந்தான் ராஜா.
“ஏய்யா வரும்போது சில்லறை கொண்டு வரக் கூடாதா? எல்லாரும் நோட்டை நீட்டினா, சில்லறைக்கு நான் எங்க தான் போறது? இந்தா பத்து ரூபா. ரெண்டு ரூபா எனக்கு நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. இனிமே பஸ்ல ஏறுனா சில்லறையோட ஏறு” கடுப்பாய் பேசினார் நடத்துநர்.
“அப்படி ஒன்னும் நீங்க நஷ்டப்பட வேண்டாம். ரெண்டு ரூபா எடுத்துட்டு, மீதியை கொடுங்க.”
இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு சண்டை மூண்டது.
“இந்தாங்க சார் ரெண்டு ரூபா சில்லறை. பஸ்ல சண்டை போடாதீங்க” ராஜாவுக்கு பக்கத்தில் இருந்தவர் சமாதானம் பேசி சில்லறையை நீட்டினார்.
சண்டை ஓய்ந்தது.
ராஜாவும் நடத்துனரும் அவரை பெருந்தன்மையோடு பார்க்க, அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார் சில்லறை கொடுத்து உதவியவர்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. கால் மணி நேரம் கழிந்த போது, தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்ட ராஜா அதிர்ந்தான். அவனது பர்ஸ் பாக்கெட்டில் இல்லை.
‘நினைச்சேன்; அவன் சில்லறை கொடுத்து பெருசா ஆட்டைய போட்டுட்டு இறங்கிட்டான். பஸ்ஸில் ஏறும்போது சரியான சில்லறை கொடுத்து இருந்தா, என் கவனம் சிதறி இருக்காது. பர்சும் பறி போயிருக்காது.’ தன்னைத்தானே நொந்து கொண்டான் ராஜா.
எம்.மனோஜ் குமார்