முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

ஒரு காட்டில் ஒரு முயல் குட்டி தன் தாயுடன் சேர்ந்து இரை தேடிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த வனத்துறை ஊழியர்களின் ஜீப்பிலிருந்து ஏதோ ஒன்று தவறி விழுவதைக் கண்டது முயல் குட்டி.

‘அது என்ன?’வென்று காண ஆர்வத்துடன் ஓட முயன்ற முயல் குட்டியை தடுத்து நிறுத்தியது தாய் முயல்.

“வேண்டாம் மகளே! வேண்டாம். நீ அதன் அருகே செல்ல வேண்டாம். அது உனக்கு ஆபத்தாக அமைந்து விட்டால் உன்னை பிரிந்து என்னால் இருக்க இயலாது.”

“ஏன் அம்மா அப்படி சொல்கிறீர்கள்?”

“இந்தக் காட்டில் நமக்கு எதிரிகள் அதிகம். அவர்கள் நம்மை விட பலசாலிகளாகவே இருக்கிறார்கள். ஏற்கனவே நம் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது.

காட்டில் மழை இல்லை. உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பட்டினியால் பாதிப் பேர் மடிந்து விட்டனர். அதில் எஞ்சியவர்கள் தன்னை விட பலம் வாய்ந்த எதிரிகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னம் ஆகி விடுகிறார்கள்.

இதில் மனிதர்கள் வேறு வேட்டையாட சில புதிய யுத்திகளை கையாளுகிறார்கள். நம் சந்ததியினர்களை காக்க வேண்டும். அதற்கு நீ புத்திசாலியாக வளர வேண்டும்” என்றது தாய் முயல்.

அதன்பின் இரண்டும் பேசிக்கொண்டே மேய்ச்சலில் கவனத்தை செலுத்த தொடங்கின.

மேய்ச்சலில் இருந்த மற்ற விலங்குகள் அனைத்தையும் மறந்து மேய்ந்து கொண்டிருந்தன.

அந்த மர்ம பொருள் ஒரு விதமான ‘பீப் பீப்’ சவுண்ட் எழுப்பிக் கொண்டிருந்தது. குட்டி முயலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள, தன் தாய் தன்னை கவனிக்காத வண்ணம் அந்த பொருளை நெருங்கி கையில் எடுத்தது.

அப்போது திடீரென்று காட்டிலிருந்து பலத்த ஒரு உறுமல் சத்தம் கேட்க, மேய்ந்து கொண்டிருந்த விலங்குகள் ஆளுக்கு ஒரு திசையை நோக்கிப் பறந்தன.

இந்த குழப்பத்தில் தாய் முயல் ஒரு பக்கமும் குட்டி முயல் ஒரு பக்கமாக பிரிந்தன.

எங்கு தேடியும் தாயைக் காணாத குட்டி முயல் செய்வதறியாது ஒரு குகைக்குள் அழுது கொண்டு சென்றது.

குகைக்குள் வயது முதிர்ந்த சிங்கம் ஒன்று பசியால் உறுமிக் கொண்டு இருந்தது.

குட்டி முயலை கண்ட சிங்கம் “எவ்வளவு தைரியம் உனக்கு? எனக்கு ஏற்கனவே பசியாக இருக்கிறது” என்று ஒரே பாய்ச்சலில் குட்டி முயலைப் பிடித்து தன் முன்னங்காலால் அமுக்கியது.

“எனக்கு இன்று நல்ல பசி. என் பசிக்கு நீ மட்டும் போத மாட்டாயே” என்றது.

அதுவரை பயத்தில் இருந்த குட்டி முயல் சுதாரித்துக் கொண்டு “சற்று பொறுங்கள் சிங்க ராஜா! என்னை விட தாங்கள் பல மடங்கு பலத்திலும் உருவத்திலும் பெருந்தன்மையிலும் உயர்ந்தவர்.

இந்த காட்டுக்கு ராஜாவாகிய உங்களது பசியை ஆற்றுவது என் கடமை. என் உருவமோ சின்னது. ஆனால் என்னால் உங்கள் பசியைப் போக்க முடியும். தாங்கள் என்னை நம்பி விடுவித்தால் உங்கள் பசியைப் போக்கி காட்டுகிறேன்” என்றது.

“நீ என்னை ஏமாற்ற மாட்டாய் என்று நான் எப்படி நம்புவது?”

“இந்தக் காட்டில் தங்களைப் போல் பலசாலிகள் வாழும் இடத்தில் தான் நாங்களும் வாழ்கிறோம். நம்பிக்கை தான் வாழ்க்கை” என்று குட்டி முயல் சொன்னது.

குட்டி முயலின் பேச்சில் நம்பிக்கை வர “சரி” என்றது சிங்கம்.

உயிர் தப்பிய குட்டி முயல் குகையை விட்டு வெளியே வந்தது. குட்டி முயலுக்கு ‘என்ன செய்வது?’ என்றே தெரியவில்லை. குகையின் வாசலில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தது.

அப்போது முயலின் கையில் இருந்து ‘பீப்..பீப்..பீப்..’ என்று சத்தம் வர, சுய உணர்வுக்கு வந்த முயல் குட்டி அதனை இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தது.

முயலின் விரல் அந்த பட்டனில் படபட அதிலிருந்து ‘பீப்’ சவுண்ட் வந்தது.

அப்போது அந்த வழியாக போய்க் கொண்டிருந்த நரி குட்டி முயலை பார்த்து “என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது.

“தெரியாதா உனக்கு? இந்தக் காட்டைப் பற்றின எனது ஆய்வு படிப்பு முடிந்து விட்டது. அதனால் தான் தீசிஸ் டைப் பண்ணி கொண்டு இருக்கிறேன்.” என்றது குட்டி முயல்.

“அப்படியா நல்ல விஷயம் தானே! தீசிஸ் டாபிக் டைட்டில் என்ன?”

“நரிகளை எப்படி முயல்கள் வேட்டையாடி தமது வாழ்வாதாரங்களை காப்பாற்றுகின்றன? என்பது தான் எனது தீசிஸ் டைட்டில்” என்றது.

“முயலே உனக்கு மூளை இருக்கா? முயல் தாவர உண்ணி. தாவரங்களைத் தான் உண்ணும். அதுமட்டுமில்லாமல் அவை எப்படி நரியை வேட்டையாட வலிமை உடையதாக இருக்கும்?” என்று நரி கேலி செய்தது.

குட்டி முயல் சாதுரியமாக “அப்போ நீ என்னை சந்தேகப்படுறியா?” என்று கேட்டது.

நரியும் அப்பாவித்தனமாக “ஆமாம் நீதான் எனக்கு புரியும்படி சொல்லேன்” என்றது.

முயல் தந்திரமாக “உள்ளே வா எப்படின்னு உனக்கு டெமான்ஸ்ட்ரேஷன் காட்டுகிறேன்.” என்றதும், இரண்டும் குகையின் உள்ளே சென்றன.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த குட்டி முயல், நரியின் எலும்புகளை வெளியே கொண்டு வந்து ஓரமாக போட்டுவிட்டு, சிங்க ராஜாவுக்கு நன்றி சொல்லி தன்னுடைய தாயைத் தேடி காட்டுக்குள் ஓடி மறைந்தது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.