அரும்பு மடல் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

“வணக்கம் டீச்சர்”

மைதிலி டீச்சர் கிளாஸ் ரூமில் நுழைந்தார்.

“வணக்கம்! வணக்கம்! எல்லாரும் உட்காருங்க. என்ன எல்லாரும் நேற்றைய வீட்டுப் பாடம் செய்துட்டு வந்து இருக்கீங்க தானே?”

“ஆமாம் டீச்சர்”

“சரி எல்லாரும் அவங்க அவங்க வீட்டுப்பாட நோட்டை டேபிளின் மீது கொண்டு வந்து வையுங்க”

அனைவரும் கொண்டு வந்து வைத்துவிட்டு தம் இருக்கைகளில் அமர்ந்தனர்.

“அட்டெண்டர்ஸ் எடுத்துடலாமா?” என்று கேட்ட மைதிலி டீச்சர் வாசிக்கத் தொடங்கினார்.

“யாழ் இசை”

“உள்ளேன் டீச்சர்”

“தனலட்சுமி”

“உள்ளேன் டீச்சர்”

“சௌந்தர்யா”

“உள்ளேன் டீச்சர்”

“காவியா”

“உள்ளேன் டீச்சர்”

“இளவரசி”

“உள்ளேன் டீச்சர்”

“சுந்தரி … சுந்தரி”

“சுந்தரி வரலைங்க டீச்சர்” என்றனர் குழந்தைகள்.

“ஏன் என்ன ஆச்சு? சுந்தரி ரெண்டு நாளாவே வரலயே”

“ஆமாம் டீச்சர்”

“சுந்தரிக்கு உடம்பு சரியில்லையா?”

“இல்லை டீச்சர்”

“சரி அவங்க அப்பாவை நாளைக்கு வந்து பாக்க சொல்லுங்க”

“சுந்தரிக்கு அப்பா இல்லை டீச்சர்”

“அவங்க அம்மா இருக்காங்கல்ல வந்து பார்க்க சொல்லுங்க”

“அவங்களால வர முடியாது டீச்சர். அவங்களுக்கு உடம்பு சரியில்லை. அவங்களால நடக்க முடியாது டீச்சர்”

“சரி சரி ஸ்கூல் முடிஞ்சதும் நானே போய் அவங்க வீட்டில பார்த்துட்டு வரேன். நீங்க எல்லாம் உட்காருங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுப்பாட நோட்டுகளை எடுத்து திருத்தத் தொடங்கினார் மைதிலி டீச்சர்.

சாயங்காலம் நாலரை மணி.

பள்ளிக்கூடம் முடிந்ததும் சுந்தரியின் வீட்டை விசாரித்து கொண்டு சென்றார் மைதிலி டீச்சர்.

சுந்தரியின் வீட்டை அடைந்ததும் “சுந்தரி… சுந்தரி…” என்று அழைத்தார் டீச்சர்.

“யாரது? யாருங்க?” வீட்டின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

“சுந்தரியின் வீடு தானே?”

“ஆமாம் உள்ளே வாங்க”

டீச்சர் உள்ளே சென்றதும் எதிரே கட்டிலில் காலில் மாவுக்கட்டுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்.

“வாங்க. யார் நீங்க?”

“நான் சுந்தரியின் ஸ்கூல் டீச்சர்”

“நான் சுந்தரியின் அம்மா.”

“சுந்தரி இரண்டு நாளா பள்ளிக்கூடம் வரல. நல்லா படிக்கிற புள்ள.ஏன்னு தெரிஞ்சுகிட்டு போகலாம்னு தான் வந்தேன்.”

“அது வந்து..ங்க… டீச்சர்”

“அவளுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையில. நல்லா தானே இருக்கா?”

“அவளுக்கு ஒன்னும் இல்ல. எனக்குத்தான் கொஞ்சம் உடம்புக்கு முடியல. வீட்டுல வேற யாரும் இல்ல. நான் மட்டும் தான் இருக்கேன். அவ எனக்கு உதவியா இருக்கா. அதனால தான் அவள் பள்ளிக்கூடம் வரல டீச்சர்”

“உங்களுக்கு எப்படி கால்ல அடிபட்டுச்சு?”

“நான் கட்டிட வேலை பார்த்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். நான் பட்ட கஷ்டம் சுந்தரியும் படக்கூடாது என்பதற்காக தான் சுந்தரியை நல்லா படிக்க வைத்து ஆளாக்கணும் என்று முடிவெடுத்தேன்.

சுந்தரியை பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு நான் வேலைக்கு செல்வேன். என் போராத காலமோ என்னமோ தெரியல கட்டிடத்தில் வேலை பார்த்துட்டு இருக்கும்பொழுது கால் தவறி விழுந்துட்டேன். கொஞ்சம் பொறுத்துக்கிடுங்க டீச்சர். கால் சரியானதும் அனுப்பி வச்சுடறேன்.”

“சுந்தரியின் படிப்பு பாழாயிட கூடாதுங்களே. அதுக்காகத்தான் யோசனையா இருக்குது. ஆமாம் நீங்கள் சாப்பாட்டுக்கெல்லாம் இப்போ என்ன பண்ணுறீங்க?”

“எனக்கு கால் தான் உடைந்து போச்சே தவிர கைகளுக்கு ஒன்னும் ஆகவில்லை. எணக்கு பூ கட்ட தெரியும். சரம் கொஞ்சம் தொடுத்து அனுப்பி இருக்கிறேன்.”

“அவ சின்ன புள்ளையாச்சே. எங்கே செல்வாள்? நல்ல திறமையான பிள்ளையை தான் பெத்து இருக்கீங்க. இருந்தாலும் இதெல்லாம் பாவம் இல்லையா!”

“என்னங்க செய்றது? உயிர் வாழணுமே. சுந்தரித்தான் எல்லாமாக இருக்கிறாள். என் உடல் சுகமான தானே அவளை வைத்து நான் காப்பாற்ற முடியும். அதுவரை கஷ்டப்பட்டு தானே ஆகணும். இப்படி ஒரு பாவப்பட்ட ஜென்மத்தின் வயிற்றில் வந்து பிறந்து இருப்பாளா அவள்? அவளை நானே படுகுழியில் பிடித்து தள்ளும் நிலை எனக்குத்தான் ஏற்பட்டிருச்சே?”

“நம்மளுடைய சூழ்நிலைக்காக அவளுடைய படிப்பு கெட்டுடக் கூடாது. அதனால நானும் என்னால முடிந்த உதவியை அவளுக்கு செய்கிறேன். ஸ்கூல் முடிஞ்சதும் தினமும் அவளுக்காக ஒரு மணி நேரம் இங்கே வந்து அன்று நடந்த பாடத்தை சொல்லித் தரேன். படிச்சுக்கட்டும். உங்கள் உடல் சரியானதும் ஸ்கூலுக்கு அனுப்பி வையுங்க சரியா? ஆமாம் இப்போ சுந்தரி எங்க இருப்பா?”

“பீச்சுக்கு. இல்லையென்றால் பெரிய கோயிலுக்கு தான் சென்றிருப்பாள்.”

“சரி. நான் அவளைப் பார்த்து விட்டு செல்கிறேன். சுந்தரிகிட்ட சொல்லிடுங்க ‘மைதிலி டீச்சர் உனக்காக வீட்டுக்கே வர போறாங்கன்னு’ என்று சிரித்துக் கொண்ட நகர்ந்தார்.

சுந்தரியின் தாய் கலங்கிய கண்களுடன் டீச்சரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடற்கரையில் சுந்தரி பூ விற்றுக் கொண்டிருக்கும்போது, கடற்கரையில் தன் வயதை ஒட்டிய சிறுவர்கள் தத்தம் தாய் தந்தையருடன் கடல் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

பூ விற்றபடி சுந்தரியும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. அவளின் இதயத்தில் ஏதோ ஒரு ஏக்கம். அவள் அந்த சிறுவர்களையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

வாய் முணுமுணுத்தது. உதடுகள் அசை போட்டன. இருந்தாலும் வார்த்தைகள் எழவில்லை. கண்களில் நீர் வழிந்தோட கனத்த இதயத்துடன் கடற்கரை மணலில் அப்படியே உட்கார்ந்து விட்டாள். சிந்தனைகள் ஒன்று கூடின.

சுந்தரியின் தாயும் தந்தையும் காதலித்து மணம் முடித்துக் கொண்டவர்கள். சுந்தரின் தந்தை வேலைக்கு சென்று சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிவதும், பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதுமாக இருக்க, இருவருக்கும் இடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகளும் நடப்பது வழக்கமாகி போனது.

இந்நிலையில் சுந்தரியும் பெண் குழந்தையாக வந்து பிறந்துவிட, மேலும் வெறுப்புற்ற தந்தையால் இருவருமே கைவிடப்பட்டனர்.

சுந்தரியின் தாய் தான் கட்டிட வேலைகளுக்கு சித்தாளாக கூலி வேலைக்கு சென்று தலையில் கல் மண் சுமந்து அரும்பாடு பட்டு வளர்த்து வந்தாள்.

ஆனால் இன்று சுந்தரி தன் தாயை வளர்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. கட்டிட வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது கால் தவற கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து கால் உடைந்து நடக்க முடியாமல் போனது. காலம் சுந்தரின் தலையில் குடும்ப சுமையை சுமத்தியது.

சுந்தரி தன் தாய்க்காக சின்னத்தாயாகவே மாறும் நிலை. சுந்தரி காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலை முதல் சமையல் வரை சகலமும் செய்ய வேண்டியதாயிற்று.

தன் தாய்க்கு செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து வைத்துவிட்டு, தாய் தொடுத்து வைத்திருக்கும் பூக்களை எடுத்துக் கொண்டு விற்று, அதனால் வரும் காசை வைத்து தாயின் தேவைகளையும் வீட்டின் செலவுகளையும் சமாளித்து வந்தாள்.

இன்று அவள் கண்ட காட்சி சிறுவர்கள் மீது அவர்களின் தாய் தந்தையர் வைத்திருந்த பாசமும் அன்பும் சுந்தரியை ஒரு கணம் கலங்கடிக்க செய்திருந்தது.

அவளின் எண் ண ஓட்டத்தில் ‘இவர்களை போல் தனக்கும் தந்தை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? எனக்கு மட்டும் ஏன் இன்று இந்த நிலை? எண்னக்கு வந்த நிலை இனி எந்த ஒரு குழந்தையும் வரக்கூடாது. எந்த ஒரு தந்தையும் இனி ஊரை விட்டு ஓடாமல் இருக்க வேண்டும் கடவுளே’ என்று நினைத்தவாறு கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நடக்க முற்பட்டபோது அவளுக்கு பின்னால் ஒரு கை தோளைத் தொட்டது.

திரும்பியவளின் முகம் பயத்துடனும் ஆச்சரியத்துடனும் சுருங்க, மைதிலி டீச்சரின் கைகள் அவளை அப்படியே அணைத்துக் கொண்டதும் சுந்தரியின் வாழ்க்கை மலரத் தொடங்கியது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.