சிவகாசி

சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விருதுநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்றைய அளவில் தொழிலில் சிறந்து விளங்கும் சிவகாசி பல ஊர்களுடனும் பேருந்து வழித்தடத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

சிவகாசி பெயர்க்காரணம் பற்றிச் செவிவழிக் கதையொன்று வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டு வருகின்றது. அது அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்ற தென்காசிப் பாண்டியன் தென்காசியில் கோயில் ஒன்றை எழுப்பி அதில் எழுந்தருளச் செய்யவேண்டி இலிங்கம் ஒன்றை வாங்குவதற்காக காசி சென்றான். இலிங்கம் ஒன்றை வாங்கித் திரும்பும் வழியில் சிவகாசியில் தங்க நேரிட்டது. அப்போது காடாகக் காட்சியளித்த இவ்வூரில் தங்கிய போது இலிங்கம் எழுந்தருளக் குறித்த நல்ல நேரம் நெருங்கிவிட்டபடியால் தான் கொண்டு வந்த இலிங்கத்தை இங்கேயே எழுந்தருளச் செய்தான். அதன் பின்னர் இங்கு ஒரு கோயிலும் கட்டினான் என்று கூறுகின்றனர்.

இதுபோன்று மற்றொரு கதையும் கூறப்பட்டு வருகின்றது. அது காசி கண்ட பராக்கிரமரிஷி என்பவர் காசி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு சென்று வருகின்ற போது ஒரு நாள் இவ்வூரில் தங்க நேரிட்டது. அப்போது அவர் தியானம் மேற்கொண்டார், அத்தியானத்தில் ‘காசி சிவன்’ காட்சி தந்தார். சிவன் காட்சி கொடுத்ததினால் ‘சிவன் காட்சி’ எனப் பெயர் பெற்று நாளடைவில் இப்பெயரே ‘சிவகாசி’ என மாறிற்று என்பர்.

சிவகாசி விசுவநாத சுவாமி கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், பத்ரகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில் என்று பல கோயில்கள் உள்ளன. இவற்றுள் காலத்தால் பழமையானது விசுவநாதர் கோயில் எனும் சிவன் கோயிலே ஆகும். சிவகாசி விசுவநாத சுவாமி கோயில் தென்காசி கண்ட அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது என்று கூறினாலும் அதனை உறுதி செய்யும் வகையில் கல்வெட்டு ஏதும் கிடைக்கவில்லை.

சிவகாசி சிவன் கோயில் அமைப்பு சாதாரணமாகக் காணப்படுகின்றது. சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன. சுவாமி கோயில் நிலையிலுள்ள கல்வெட்டொன்று இக்கோயில் திருப்பணிக்காக விவசாயிகளும், வணிகர்களும் வழங்கிய பொருட்களைப் பற்றித் தெரிவிக்கின்றது. வணிகர்கள் நெல், பாக்கு, உப்பு, புளி, கடுகு, போன்றவற்றைக் கொண்டு வந்து அதனை விற்கும் போது, விற்கும் தொகையில் ஒரு பகுதியைக் கோயில் திருப்பணிக்காகத் தரவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறுகின்றது.

நாயக்கர்களுடைய ஆளுகையின்போது சிவகாசி ஒரு ஆட்சிப் பீடமாக விளங்கியது. திருமலை நாயக்கருடைய சகோதரர் குமார முத்து வீரப்ப நாயக்கர் என்பவர் கி.பி.1659-ல் சிவகாசியின் ஆளுராக நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இவ்வூரில் கிடைத்த ஒரு ஓலைச்சுவடியில் உள்ள செய்தி, இக்கோயில் குருக்களின் முன்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தைத் தெரிவிக்கின்றது. பூக்கட்டும் தொழிலைச் செய்யும் பண்டார இனத்தவர்கள் மாதத்திற்கு மூன்று பணம் தங்களின் தாயின் உணவு மற்றும் உடைத் தேவைக்கு வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. இத்தீர்மானம் அன்றைய சிவகாசி சமுதாயச் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் இவ்வூரில் தோட்டனம் சத்திரம், திருநெல்வேலி வெங்கடேசுவர சோதிடர் சத்திரம் என இரண்டு சத்திரங்கள் உள்ளன. சோதிட சத்திரத்தில் பாத யாத்திரை செல்வோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. சிவகாசி சிறந்த தொழில் நகராக விளங்கி வருகின்றது. அச்சு மற்றும் தீப்பெட்டித் தொழில் சிறந்து விளங்குகின்ற சிவகாசியின் வான வெடிப்பொருட்கள் உலகச் சிறப்புடையவை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.