ஓம்நமசி வாயவென ஓதுவார் உள்ளத்தில்
நாமிருப்போம் என்றே நயந்துவரும் ஈசனை
ஆக்குதல் காத்தல் அழித்தல் பணிந்தார்நோய்
நீக்குதல் செய்யும் நிழலில்லா மெய்யானை
எங்கும் நிறைந்திருந்தி யார்யார்க்கும் தண்ணருளைப்
பொங்கும் புனல்போலப் போற்றிப் பொழிவானை
எல்லா உயிர்களும் ஏத்தித் தொழுகின்ற
வல்லான் அவனடி வாழ்த்த மகிழ்வானை
காமம் வெகுளி மயக்கம் அறுத்துயிர்க்கு
ஏமம் தருவானை ஏதம் இலானை
அடியார்க் கடியானை அன்பிலார்க்கும் தாய்போல்
தடமுலைப்பால் தந்து மகிழ்வானை இம்மை
மறுமை இலானை மருந்தெனவே அன்பர்
வறுமை களைவானை வாய்மணக்கும் பேரானை
கண்ணில்லா வாயில்லாக் காதில்லாப் பேர்களுக்கும்
தண்ணிலவாய்ப் பேரன்பைத் தந்து மகிழ்வானை
சித்தம் கலக்கும் சிறுநிலவைச் சூடினாலும்
பித்தம் பிடிக்காமல் புன்முறுவல் செய்வானை
பொங்குகடல் காய்ச்சிப் பொழிந்தருளி மன்னுயிரைத்
தங்குதடை இல்லாமல் தான்வாழச் செய்வானை
ஆலம் அருந்தி அமிழ்தம் பிறர்க்கீந்த
ஞால முதல்வனை நல்லோர்சூழ் நேயனை
கள்ளப் புலன்செலுத்தும் காமக் கலனெறிந்து
உள்ளப் புணைநெறியில் உய்விக்கும் பெம்மானை
காண்பவர்க்கு ஏற்றபடி காட்சி கொடுத்தருளி
மாண்புகழைக் கொண்டானை மாசில் ஒளியானை
முல்லையும் கோங்கும் முழுச்சாம்பற் தான்பூசும்
தில்லையுட் கூத்தனைத் தென்பாண்டி நாட்டனை
தொல்லை பெரும்பிறவி தோன்றாமல் காப்பாயே
எல்லையிலா ஈசனே எங்கோவே என்றழைக்கின்
அவ்வாறே தந்தருளும் அப்பன் அவன்பாதம்
கவ்விக்கொண் டார்க்குக் கவலைகள் கொன்றழித்துச்
செம்மை நலஞ்செய்யும் சேவடி பணிந்தார்க்கண்
மும்மை வினையடையும் முற்று

ஆதிகவி(எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
பேச 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!