சுய மரியாதை என்பது தனக்கு, தன்னைச் சார்ந்தவர்களுக்கு எவ்வித இழுக்கும் வராதபடி நடந்து கொள்ளுதல் ஆகும். இதனையே வள்ளுவரும்,
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
என்கிறார். தம் குடிப்பிறப்பு தாழ வரும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது.
ஒருவன் தன்னிடம் செல்வம் சுருங்கிய காலத்தும் உயர்வான செயல்களையே செய்ய வேண்டும். தன் மரியாதை கெடும்படியான, கீழான செயல்களைச் செய்யவே கூடாது. போர்க்களத்தில் அம்பு பட்டு இறக்கும் நிலையில் இருந்த போதும் கர்ணன் கிருஷ்ணபகவான் அவன் செய்த தர்மத்தின் புண்ணிய பலன்களைக் கேட்ட போது தன் சுயமரியாதை கெட்டு விடாதபடி தன் குருதியையே தாரை வார்த்துக் கொடுத்தான், அந்த நிலையிலும் தன் நிலை தாழாது தன் சுய கௌரவத்தை, சுய மரியாதைக் காத்துக் கொண்டான்.
ஒட்டார்பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
என்கிறார் வள்ளுவர். தன்னை மதியாது இகழ்வார் பின் சென்று வாழ்தலை விட அவன் அழிதலே சிறந்தது என்கிறார். அத்தகைய சுயமரியாதை காத்த மன்னர்களும், வீரர்களும், புலவர்களும் நம் பாரத நாட்டில் வாழ்ந்தனர், வாழ்கின்றனர், இன்னும் தோன்றுவர் என்பது உறுதி.
சுயமரியாதை, சுயகௌரவம் என்னும் பெயரில் மற்றவர்களுக்கு இடையூறு செய்தல் கூடாது. அன்பு, பண்பு, அறிவு, அடக்கம், தியாகம் முதலிய நற்பண்புகளைக் கொண்டவர்களாய் பிறருக்குத் தொண்டு செய்யும் தூய உள்ளம் படைத்தவர்களாய் நாம் திகழ வேண்டும். அப்போது தான் நாம் கட்டுப்பாடு உடையவர்களாய் வாழ்வோம். சுயகௌரவத்தைக் காப்பாற்றுவோம்.
சுயகட்டுப்பாடும் சுய மரியாதையும் நாம் பெறுவோம், பிறருக்கு நலனே புரிவோம்!