சுரைக்காய் சட்னி தொட்டுக் கொள்வதற்கு ஏற்ற அருமையான சட்னி ஆகும்.
சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நார்ச்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இதனை பயன்படுத்தி கூட்டு, சாம்பார் உள்ளிட்ட உணவுகள் செய்யப்படுகின்றன.
இன்றைக்கு சுரைக்காயைக் கொண்டு சட்னி எவ்வாறு தயார் செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 20 கிராம்
தக்காளி – 2 எண்ணம் (பெரியது)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
வெள்ளை பூண்டு – ஒரு பல் (பெரியது)
சீரகம் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 எண்ணம்
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
செய்முறை
முதலில் சுரைக்காயை தோல், விதைகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் அதனை சிறு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
தக்காளியை அலசி சிறு துண்டுகளாக வெட்டவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
வெள்ளை பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
குக்கரில் சுரைக்காய் துண்டுகள், சின்ன வெங்காயத் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு, சீரகம், மஞ்சள் பொடி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடவும்.
2 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து கலவையை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கலவையை வேறு பாத்திரத்திற்கு மாற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு சேர கிளறவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்து சுரைக்காய் கலவையில் கொட்டவும்.
சுவையான சுரைக்காய் சட்னி தயார்.
இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு
சட்னி செய்வதற்கு பிஞ்சு சுரைக்காயைத் தேர்வு செய்யவும்.