அன்றைக்கு பயணம் செய்யும் பயணியர்கள் இரவு நேரத்தில் தங்கி செல்வதற்கு வசதியாக ஆங்காங்கே சத்திரங்கள் கட்டி வைத்தனர்.
இன்றும் சென்னைக்கு அருகில் சத்திரங்கள் பெயரில் அந்த ஊர்கள் அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக பாப்பான்சத்திரம், சுங்குவார்சத்திரம், பிள்ளை சத்திரம், பாலுசெட்டி சத்திரம், நாச்சியார் சத்திரம், புதுச்சத்திரம், குப்பம்மா சத்திரம், கனகம்ம சத்திரம், ஜனப்பன் சத்திரம், வாணியன் சத்திரம் மற்றும் போலிவாக்கம் சத்திரம் என்று இருந்தன. இன்று பெயர்மட்டும் உள்ளன.
சில இடங்களில் எமக்கு தெரிந்திருந்த சத்திரங்கள் இன்று காணாமல் போய்விட்டன. (திருநின்றவூர் சத்திரம், செவ்வாய்பேட்டை சத்திரம்)
சென்னையில் டாக் சத்திரம் மற்றும் தாண்டவராயப் பிள்ளை சத்திரம் என்று இருந்துள்ளன. இன்று இருக்கின்றதா தெரியவில்லை.
நெடுந்தூரச் சாலைகளில் சாவடிகளும் (நடந்து செல்பவர்கள் தங்குமிடம்) இருந்தன.
உதாரணமாக சென்னைக்கு அருகே வேலப்பன் சாவடி, கரையான் சாவடி, குமணன் சாவடி, கந்தன் சாவடி, முட்டக்காரன் சாவடி மற்றும் எடையன் சாவடி என்று இருந்தன. இன்று அப்பெயர்கள்தான் உள்ளன. சாவடிகள் இருக்கின்றதா தெரியவில்லை.
சென்னை திருவள்ளுர் சாலைக்கு ‘அமாவாசை பாட்டை’ என்று பெயர். காரணம் அமாவாசைக்கு திருவள்ளுரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு பெரும்பாலான மக்கள் செல்வார்கள். அதனால் அப்பெயரே இருந்தது.
அவ்வழியே நடந்து செல்பவர்களுக்கு இளைப்பார சமீப காலம் வரை திருநின்றவூரில் பெரிய குளமும் குளக்கரையில் ஆலமரமும் இருந்தன. (இன்று இல்லை) மற்றும் காக்களுரில் இருந்த பெரிய குளம் இன்றளவும் இருக்கிறது. வேப்பம்பட்டு சத்திரம் கிராமத்தில் இன்றளவும் பெரிய குளம் இருக்கின்றது. சத்திரம் இல்லை.
அன்றைய தண்ணீர்த் தேவைக்கு கிணறுகள் அமைத்திருந்தனர். அக்கிணறுகள் சாலைக் கிணறுகள் என்று அழைக்கப்பட்டன.
சுமைகள் சுமந்து செல்பவர்களுக்கு அச்சாலைகள் பக்கத்தில் சுமைகள் எளிதில் இறக்கி வைப்பதற்காக சுமைதாங்கி கற்கள் நட்டு வைக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் சுமைதாங்கிகளை இன்றும் காணலாம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் – 602024
கைபேசி: 9444410450