நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 22

மனக்கலக்கத்தோடும் கவலையோடும் யோசனையாய் அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

‘உண்மையில் தனசேகர் நல்லவனா? கெட்டவனா? முந்தாநாளு அவன் நமக்கு கொடுத்தது பணக்காரார்கள் அருந்தும் சீமச்சரக்கா? அல்லது வெறும் சோடா கலரா? சோடா கலருன்னா நா ஏன் வாந்தியெடுத்து குப்புற விழுந்தேன்.

அவனுந்தானே கலரு குடிச்சான். ஆனா அவனுக்கு ஒன்னுமாகிலியே! கேட்டா ஒரு மாதிரியா கிண்டலா சிரிக்கிறான்.

இன்னைக்கு வரேன்னான். ஆனா வல்ல, பணக்காரங்க குடிக்கலாம். அது வெளியே தெரியாது. ரொம்ப ரொம்ப சாதாரணமானவங்க குடிக்கலாம். அது சாதாரண விஷயம்தான்.

ஆனா நம்மள மாதிரி நடுத்தர குடும்பத்தலைவன் குடிகாரன்னு பட்டம் வாங்கிட்டா அவன் குடும்பத்துல பொண்ணும் எடுக்க மாட்டாங்க. கொடுக்கவும் மாட்டாங்க.

இனிமே தனசேகருட்ட ஜாக்கிரதையா இருக்கனும். நம்மள குடிகாரனாக்கிட்டா? அப்பறம் நம்ம பொண்ண யாரு கட்டுவா?’ என்று எண்ணினார்.

யதார்த்தமான குணங்களைக் கொண்ட ரத்தினவேல் அஞ்சுவதற்கு அஞ்சுபவர். அதனால் பயந்து போனார்.

“அய்யா!”

கூப்பிடும் குரல் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டுத் தலை நிமிர்ந்தார் ரத்தினவேல்.

பெயின்ட்டர் கோபால்.

“அட! வாங்க கோவாலுண்ணே! என்ன இவ்வளவு தூரம்?”

“அய்யா! ஒங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்”

“தனியா பேசனுமா?”

எழுந்து வந்து திண்ணையில் அமர்ந்தார் ரத்தினவேல்.

“சொல்லுங்கண்ணே” என்றார்.

“அய்யா, நேத்து நானு கதிரேசனய்யா வூட்டுக்கு மாட்டுத் தொழுவத்துக்கு டிஸ்டம்பர் அடிக்கப் போயிருந்தேன். அங்க கொஞ்ச நாளா ஒங்க வீட்டுக்கு ஒரு பையன் வந்து போய்ட்டு இருக்குறாரே அவரப் பார்த்தேன். கதிரேசனாய்யா மவன் சின்னய்யா நாகராஜுவும் அந்தப் பையனும் பேசிக்கிட்ருந்தாங்க. அந்தப் பையம் பேரு தனசேகருங்களா? அப்பிடிதாங் கூப்டாரு சின்னய்யா நாகராஜு”

“என்னது நாகராஜும் தனசேகரும் பேசிக்கிட்டிருந்தாங்களா?”

“ஆமாங்கையா, சும்மா பேசல. சீமச்சாராயம் பாட்டில் பாட்டிலா எதிர வெச்சுக்கிட்டு குடிச்சிக்கிட்டே பேசிக்கிட்டிருந்தாங்க. அந்த பய தனசேகரு ஒரு குடிகாரன். ஒருபிராடுங்க. ஒங்கள பழிவாங்கதான் தனசேகர, நாகராஜு அனுப்பிருக்காருன்னு சொல்லி ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க. அந்த தனசேகருகிட்ட ஜாக்கிரதையா இருங்க கணக்குப்பிள்ளை அய்யா. நான் எதுவும் சொன்னாதா யாருட்டையும் காட்டிக்காதிங்கய்யா. கவனமா ஜாக்ரதையா இருங்க” சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார் கோவாலு.

பிரமை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார் ரத்தினவேல். நெஞ்சுக்குள் பயம் பற்றிக் கொண்டது.

நான்கு நாட்கள் அடிவயிற்றில் பயம் கவ்விக் கலக்க, கடந்து போனது.

ஐந்தாம் நாள் எப்போதும்போல் “மாமா!” என்று அழைத்தபடி உள்ளே வந்த தனசேகரை வழக்கம்போல் வரவேற்க முடியவில்லை ரத்தினவேலால்.

“என்ன மாமா? வான்னுகூட கூப்புடாம அமைதியா இருக்கீங்க. எதாவது பிரச்சனையா?” கேட்டான் தனசேகர்.

“நீதான் பிரச்சனை” என்று சொல்லத் தோன்றியது ரத்தினவேலுக்கு.

திடீரென, “மாமா! என்னப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க மாமா?” என்று கேட்ட தனசேகரை எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகப் பார்த்தார் ரத்தினவேலு.

“மாமா, நானும் பல மாசமா இங்க வர்றேன். அத்த கூட, அத்தமாமி கூட, ஒங்க கூட பழகுறேன். ஒங்க எல்லார் மனசுக்கும் ஏத்தபடி நல்ல பையனாதானே தெரியுறேன்.

நீங்களா பேசுவீங்கன்னு எதிர் பாத்தேன். பேசல. நா பெத்தவங்க உத்தவங்க இல்லாதவன். என்சார்புல வந்து பேச யாருமில்ல. அதுனால நானே கேக்குறேன் மாமா!”

“என்ன கேட்கப் போகிறானோ?” என்ற அச்சத்தில் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

“மாமா ஒங்க பொண்ணு இந்துவ, இந்துமதிய எனக்குக் கட்டித் தருவீங்களா மாமா?” என்று கேட்டடான் தனசேகர்.

அப்படியே அதிர்ந்து போனார் ரத்தினவேல். தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. நெஞ்சு படபடத்தது. இதயம் நின்று விடும் போல் இருந்தது.

‘இந்த குடிகாரனுக்கா? நாகராஜோடு சேர்ந்து என் குடியைக் கெடுக்க வந்தவனுக்கா? இந்த வேலை வெட்டி இல்லாத ஃபிராடு பயலுக்கா? என் குடும்பத்த நடித்தே ஏமாற்ற நினைத்தவனுக்கா? நாகராஜோட எடுபிடிக்கா? எம்பொண்ண இந்த பரதேசிக்கு கட்டிக் குடுக்கறதா?’

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமைதியாய்ப் பேசினார் ரத்தினவேல்.

“இல்ல தனசேகர் சார். ஒங்களப்பத்தி எல்லா உண்மையும் எனக்குத் தெரிஞ்சு போச்சு. மரியாதயா எழுந்து போயிடுங்க”

அதிர்ந்தான் தனசேகர்.

“என்னது என்னது.. என்னைப்பத்தி உண்மையா? என்ன உளர்றீங்க? என்ன உண்ம?”

“நீ ஒருஃபிராடு. ஒரு மொடாக் குடிகாரன். வேல வெட்டி இல்லாதவன். நாகராஜோட கையாள். மொத்தத்துல கேவலம் புடிச்சவன். ஏமாத்துக்காரன். நல்லவன் போல் நடிப்பவன். குடியைக் கெடுப்பவன். ஒனக்கு
எம்பொண்ணக் குடுப்பதா? வெளியே போய்டு” அமைதியாய், ஆனால்
மிகக்கண்டிப்பாய்ச் சொன்னார் ரத்தினவேல்.

நேரடித் தாக்குதலால் அரண்டு போனான் தனசேகர். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வில்லத்தனமாகச் சிரித்தான்.

“ஓ! எல்லாம் தெரிஞ்சு போச்சா? பரவால்ல, நல்லவன் மாரி நடிச்சு இனிமே கஷ்டப்பட வேண்டாம். கடைசியா கேக்குறேன் இந்துவ எனக்குக் கட்டி வைப்பீங்களா மாட்டீங்களா?”

“அடச்சீ! போடா வெளிய, ராஸ்கல்”

“அப்ப என் வேலய காட்டவேண்டியதுதான்” பையிலிருந்து ஒரு கவரை எடுத்து அதற்குள்ளிருந்து ஒரு ஃபோட்டோவை உருவி, ரத்தினவேலின் கண்களுக்கு நேராய்க் காட்டினான் தனசேகர்.

இந்துவும் ராகவும் அருகருகே நின்றபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்தபடி நிற்கும் புகைப்படம்.

பார்த்த மாத்திரத்தில் அப்படியே நிலைகுலைந்து போனார் ரத்தினவேல். தலை தட்டாமாலை சுற்றியது. உடலில் மொத்த ரத்தமும் வடிந்து விட்டது போலிருந்தது. வியர்த்துக் கொட்டியது. வயிற்றைப் பிசைந்தது.

“இ..இ..இ..” பேச முடியாமல் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.

“என்ன ரத்தினவேல் பேச்சு வல்லியா? இது ஒங்க பொண்ணு இந்துவேதான். பாரு பாரு எவங்கூடயோ பக்கத்துல நின்னுக்கிட்டு சிரிக்கிறத. ஒம்பொண்ணு படிக்கப்போய் பாடம் கத்துக்கிட்டாளோ இல்லியோ நல்லா காதல் பாடம் கத்துக்கிட்டு இருப்பா போல” சிரித்தான் தனசேகர்.

‘மாமா’ என்று வாய்க்கு வாய் அழைத்தவன் இப்போது ரத்தினவேல் என்று கூப்பிட ஆரம்பித்தான்.

“தோ! இந்துகூட இளிச்சிகிட்டு நிக்கிற பய யாரு தெரியுமா? பேரு ராகவ். பாப்பார பையன். கவுரு மென்ட்டு வேல. ஆனா நீ என்ன சாதி.

ஒனக்கு புடிக்கிதோ இல்லையோ, ஒம்மவளுக்குப் புடிச்சிருக்கு. நீ இந்தப்பயலுக்கு கட்டித் தரமாட்டேனு சொன்னேன்னு வையி ஒம்மவ இவங்கூட ஓடிப் போயிடுவா. அப்றம் ஒங்குடும்ப மானம் கப்பலேறிடும்.

அதுக்குப்பறம் மானமுள்ள மனுஷனால உசிரோட இருக்க முடியும்கிற? அப்றம் மூணுமொழம் கயிறுன்னா தேவப்படும் தூக்குல தொங்க. ஒனக்கு ஒங்கம்மாக்கு ஒம்பொஞ்சாதிக்கு” அட்டகாசமாய்ச் சிரித்தான் தனசேகர்.

கூசிக் குறுகி அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

“ரத்னவேலு என்ன அழுவுறியா? இப்பவே மொத்தமா அழுதுடாத. இன்னும் அழுவ நெறையா இருக்குல்ல.

எனக்கும் ஒன்னப் பாத்தா பாவமாதா இருக்கு. ரொம்ப இரக்கபடுற மனசல்ல வெச்சு என்னைய படச்சுட்டாரு ஆண்டவ.

ஒன்னோட கெட்ட காலத்துல கொஞ்சம் நல்லகாலமா, எனக்கு அணில் கடிச்ச பழம்னா ரொம்ப இஷ்டம். என்ன சொல்ல வரேன்னு புரியுதா வேலு? அந்தப் பய அதான் ஒம்பொண்ணோட நிக்கிறானே அந்தப் பய ஒம்பொண்ணோட எப்பிடிப் பழகிருந்தாலும் சரி. நாங்கட்டிக்கிறேன் ஒம்பொண்ண. ஒனக்கு ஒதவனும்னு எம்மனசு துடிக்கிது வேலு”

“டேய்!” கத்திக் கொண்டே எழுந்த ரத்தினவேலுவை பிடித்துத் தள்ளினான் தனசேகர். தரையில் வீழ்ந்தார் ரத்தினவேல்.

“ஒருகுடிகார அப்பனுக்கு இவ்வளவு ரோசம் கூடாது. இப்பிடீல்லாம் கத்தி சத்தம் போடக் கூடாது. நாங்கூடதான் குடிகாரன். அதுவும் மொடாக் குடியன். நா எங்கியாவது சத்தம் போடுறேனா? கூலா இல்ல?”

“டேய்! யார்டா குடிகாரன்? கேடு கெட்டவனே! நீதாண்டா குடிகாரன்” தரையிலிருந்து எழுந்திருக்க முயன்று தோற்றுப் போனார்.

“ஹக்..” சிரித்தான் தனசேகர்.

“ஓ! குடிகாரன்னு சொன்னா ரோசம் வருதோ? நாஞ் சொன்னா கோவம் வரதான் செய்யும். ஆனா இந்த ஃபோட்டோ சொல்லுதே, நீ குடிகாரன்னு. அதுவும் பொய் சொல்லுதா?” மோட்டார் ரூமில் தனசேகர் சோடாக்கலர் எனச்சொல்லி ஏமாற்றித் தந்த சீமைச்சரக்கைக் குடித்துவிட்டு வாந்தியெடுத்து அதன் மீதே விழுந்து கிடந்த தன் ஃபோட்டோவைப் பார்த்து அதிர்ந்து, அரண்டு மிரண்டு போனார் ரத்தினவேல்.

“அடப்பாவி! நீ நல்லாருப்பியா? நீ சோடாகலர்னுதானே சொல்லிக் குடுத்த. சாராயத்த சோடாகலர்னு சொல்லி ஏமாத்துனையா?” அழஆரம்பித்தார் ரத்தினவேல்.

“வேலு, நடந்த விஷயம் ஒனக்கும் எனக்கும் மட்டும்தா தெரியும். யார்ட்ட இந்த
ஃபோட்டோவ காட்டினாலும் நீ குடிச்சிட்டு விழுந்து கெடுக்குறதாதா சொல்லு வாங்க. விஷயம் நாலு பேத்துக்குத் தெரிஞ்சா போதுமே. குடிகாரன் பொண்ணக் கட்ட யாரு வருவா? அதோடு நீ இப்ப பாப்பரு. புரீல! சொத்துபத்து ஏதுமில்லாத பிச்சக்காரனு. ஒரம் வாங்கித் தரதா சொல்லி ஒங்கிட்டக் கையெழுத்து வாங்கினேனே எதுக்குன்ற, ஒரம் வாங்க இல்ல. ஒஞ்சொத்தையெல்லாம் எம்பேர்ல எழுதி வாங்க. வாங்கிட்டேன்ல” வெடிச் சிரிப்புச் சிரித்தான் தனசேகர்.

கிட்டத்தட்ட பைத்தியமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ரத்தினவேல். நெஞ்சு ஏகத்தும் வலித்தது.

“வேலு, சொத்தெல்லாம் யாருக்கோ போயிடுச்சேனு கவலப்பட்டு அழுவாத. நா யாரு ஒவ்வருங்கால மருமகன் வந்தானே. ஒம் பொண்ணுக்குப் புருஷனாகப் போவுற, ஒம்மாப்ளயாகப் போவுற, எனக்குதானே வந்துருக்குது”

கைகளில் முகம் புதைத்து அழுதார் ரத்தினவேல்.

“அழுதுக்கிட்டே இருந்தா ஆச்சா? சீக்கிரமே எனக்கும் இந்துவுக்கும் கல்யாணத் தேதிய குறிச்சிட்டு மேற்கொண்டு ஆக வேண்டியதப் பாரு வேலு. இனிமே ஒன்னால ஒன்னும் பண்ண முடியாது.

அப்பிடி எதாவது செய்யப் போனேன்னு வெய்யி. இந்த ரெண்டு ஃபோட்டோவயும் போஸ்டரா அடிச்சி ஊர்பூரா மரத்துக்கு மரம் கட்டித் தொங்கவிட்டு தெருவுக்குத் தெரு நட்டு வெச்சு சொவத்துக்கு சொவரு ஒட்டி வெச்சி ஒட்டு மொத்தமா ஒம்மானத்த வாங்குவேன்.

தற்கொல பண்ணிக்கிலாமுன்னு நெனச்சீன்னு வையி அப்பவும் போஸ்டர ஒட்டி நாரடிப்பேன். ஊரும் ஒறவும் ஒங்குடும்பத்தப்பாத்து காரித் துப்பும். அவுமானம் தாங்காம ஒம்பொண்டாட்டி, பொண்ணு, ஒன்னப் பெத்தவ மூணுபேரும் தற்கொல பண்ணிக்கிட்டு சாவாங்க”

பொறியில் மாட்டிய எலிபோல் செய்வதறியாது தவித்தார் ரத்தினவேல்.

கடைசியாய் தனசேகரின் மிரட்டலுக்கும் பயமுறுத்தலுக்கும் பணிவதைத் தவிர வேறு வழியின்றிப் போனது ரத்தினவேலுக்கு.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்



தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.