நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 21

“சரி! நேரமாயிடுச்சு ராகவ் கிளம்புவமா?” என்று பார்க்கிலிருந்த. நீண்ட சிமெண்ட் சேரிலிருந்து எழுந்து கொண்டாள் இந்து.

பார்க்கின் எதிரில் இருந்த ஈஸ்வர் ஃபோட்டோ ஸ்டுடியோவிலிருந்து கழுத்தில் மாட்டியிருந்த கேமராவோடு வெளியே வந்தான் தனசேகர்.

ராகவும் இந்துவும் பேசிச் சிரித்தபடி பார்க்கிலிருந்து வெளியே வந்தார்கள்.

ராகவ் எதாவது ஜோக் அடித்தானோ என்னவோ ‘பக்’கென்று அவன் முகம் பார்த்து சிரித்தாள் இந்து.

அருகருகே சிரித்தபடி வெளியே வரும் அவர்கள் இருவரும், தனது என்ஃபீல்டு வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஓர் உதை உதைத்து ஸ்டார்ட் செய்த தனசேகரின் கண்களில் பட, அப்படியே அதிர்ந்து போனான் தனசேகர்.

‘ஐயோ! இப்பிடியா போகுது கதை’ என்று நினைத்தவன் சட்டென கழுத்தில் தொங்கும் கேமராவில் அருகருகே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரிக்கும் ராகவையும் இந்துவையும் அவர்கள் அறியாதவாறு ஃபோட்டோ
எடுத்து பதிய வைத்துக் கொண்டான்.

மீண்டும் ஸ்டூடியோவுக்குள் சென்று ராகவ் இந்துவின் ஃபோட்டோவோடு வெளியே வந்தான்.

“கண்டுபுடிக்கிறேன்! கண்டுபுடிக்கிறேன்! அந்த திமிர் புடிச்சவன் ராத்தினவேலோட மக பக்கத்துல நிக்கிறவன் யாருன்னு கண்டுபுடிக்கிறேன். எம்பொண்ணு ஊர்பட்ட படிப்பு படிக்கிறா. பெரிய்ய்ய்ய படிப்பு படிக்கிறான்னு மார்தட்டிக்கிட்டான்ல ரத்தினவேலு. இவம் பொண்ணு கண்டவனோட சுத்துறத இந்த ஃபோட்டோவ வெச்சு போஸ்டரடிச்சு ஊர்பூரா ஒட்டுறேன். திமிராண்டி ரத்தினவேலும் அவ குடும்பமு அவமானப்பட்டு நாண்டுக்கிட்டு சாவணும்” கையிலிருந்த ஃபோட்டோவைப் பார்த்துப் பார்த்துக் கோபத்தோடு கத்தினான் நாகராஜு.

அடுத்த ஒருமணி நேரத்தில் நாகராஜு வகுத்துக் கொடுத்த திட்டத்தைச் செயல்படுத்த ரத்தினவேல் வீடு நோக்கி நடந்தான் தனசேகர்.

“மாமா!”

“சொல்லுங்க தனசேகர்!”

“வயல உழுது போடனும். உளுந்து வெதைக்கணும்னு சொன்னீங்கள்ல மாமா”

“ஆமா! ஆனா, டிராக்டர் பழுதாயிட்டு. சரி பண்ணனும்.”

“ஆமா! நேத்தே சொன்னீங்க. அதுனால நானே தெரிஞ்சவங்ககிட்டேந்து டிராக்டர வாடகைக்கு எடுத்து வந்ருக்கேன் மாமா”

“அட! என்ன தனசேகர். எதுக்கு இதெல்லாம்? டிரைவரையுமா அழைச்சிகிட்டு வந்துருக்கீங்க”

“நா இருக்கும்போது எதுக்கு மாமா டிரைவரு?”

“அப்டீன்னா?”

“நா நல்லா டிராக்டர் ஓட்டுவே மாமா. நானே இன்னிக்கு டிராக்டரால வயல உழப்போறேன். அதுக்காக ஆபீஸ் லீவு போட்டுட்டு வந்ருக்கேன். வந்து பாருங்களேன்! நா எப்டி டிராக்டர் ஓட்டுறேன்னு?” என்றான்.

குடிப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லாத தனசேகர் ஆபீஸென்றும், லீவு என்றும் பொய்யாய்ப் பீற்றிக் கொண்டதை நம்பிய ரத்தினவேல் தனசேகர் டிராக்டரும் ஓட்டுவான் என்பதைக் கேட்டு அவனை ‘ஆஹா! ஓஹோ!’ என்று பாராட்டினார்.

காலை பத்து மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை வயலை டிராக்டர் ஓட்டி உழுதான் தனசேகர். அவன் டிராக்டர் ஓட்டும் லாவகத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார் ரத்தினவேல்.

மோட்டார் இருக்கும் அறை.

“மாமா எனக்கு சாப்பாடு வேண்டாம் மாமா. சும்மா..கூல்டிரிங்ஸ் மட்டும் குடிச்சிக்கிறேன். நீங்கன்னா சாப்பிடுங்க மாமா”

“அய்ய, சேகர் எனக்கும் சாப்பாடு வேண்டாம். ஜில்லுனு சோடாகலர் போதும் சேகர். அதும் புதுஸா நீங்க கொண்டு வர்ர கலரு ரொம்ப நல்லா இருக்கு.”

மனதுக்குள் சிரித்துக் கொண்டான் தனசேகர்.

வழக்கம் போலில்லாமல் அதிகமாய் சீமைச் சரக்கும் குறைந்த அளவில் சோடாகலரும் கலந்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை பையிலிருந்த சின்ன சைஸ் ஐஸ் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்தான் தனசேகர்.

பாட்டில்களைப் பார்க்கும் போதே நாக்கும் தொண்டையும் பரபரத்தன ரத்தினவேலுக்கு..

“இந்தாங்க மாமா!” ஒரு பாட்டிலைத் திறந்து ரத்தினவேலிடம் நீட்ட, அவசரமாய் வாங்கி பேராவலுடன் வாயில் சரித்துக் கொண்டார் ரத்தினவேல். ருசி வித்யாசமாக இருந்தது.

“என்ன சேகர்! கலரு ஒருமாதிரி வித்யாசமா இருக்கு”

“ஐயோ! என்ன மாமா? சரக்க கிரக்கக் கலந்து குடுத்துருப்பேன்னு நெனைக்கிறீங்களா மாமா. நா அப்பிடிப்பட்டவனா?”

“ஐயோ! ஐயோ! நீங்க தங்கம்னா தங்கம். நா அப்டீல்லாம் நெனைப்பேனா?” நாக்கு குளற ஆரம்பித்தது ரத்தினவேலுக்கு..

“க்குக்” லேசாய்ச் சிரித்தான் தனசேகர்.

“மாமா!”

“சொல்லுங்க சேகர்” தடுமாறினார் ரத்தினவேல்.

“மாமா, சொல்ல மறந்துட்டேன் மாமா”

“என்னாது?” வாய் கோணியது.

“மாமா, ஒரம் வேணும்னு கேட்டீங்கள்ள?”

“ஆமா, அதுக்கு?” உளற ஆரம்பித்தார்..

“நிறைய ஒரக்கடைக்காரங்க இன்னிக்கு சாயந்திரம் தரோம். உங்க மாமாட்ட தேவைக்கு எழுதி கையெழுத்து வாங்கிக்கிட்டு வாங்கன்னு சொல்லிருக்காங்க”

“நானே எழுதிக்கிட்டு வந்துட்டேன் மாமா. கையெழுத்து மட்டும் நீங்க போட்டா போதும். கையெழுத்து போடுறீங்களா?”

“ஓ! அதுக்கென்ன சேகரு? கையெழுத்து தானே போழறே, பொழறே”

தனசேகர் நீட்டிய காகிதங்களில் படித்துக்கூடப் பார்க்காமல் கையெழுத்திட்டார் ரத்தினவேல். அவரின் அத்தனைச் சொத்துக்களும் தனசேகர் பெயரில் ரத்தினவேல் எழுதித் தந்ததாக எழுதப்பட்டிருந்தது, அந்த ஸ்டாம்ப் ஒடப்பட்டிருந்த காகிதங்களில்.

‘டேய் ரத்தினவேலு! எதுக்கு ஒன்னத் தேடி வந்தேனோ அதுல முக்காவாசி வேல முடிஞ்சிடுத்து. இன்னும் ஒம்பொண்ண ஒங்கிட்டேந்து பறிச்சிட்டேன்னா முழுசும் முடிஞ்சிடும். செய்யிறேண்டா அதையும் செய்யிறேன்’ மனதுக்குள் அகங்காரமாய் சிரித்தான் தனசேகர்.

“மாமா! இந்தாங்க” இன்னொரு பாட்டிலை எடுத்து வைத்தான்.

“ம்கூம்… ம்கூம்… வேண்டா… வேண்டா… நீங்க கலரு குடிக்கில…” நாக்கு குளறியது அதிகமாய்.

“தோ, மாமா” வெறும் கலரைக் குடித்து ரத்தினவேலை நம்ப வைத்தான்.

“இந்தாங்க மாமா, இந்த கலரு ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்” வற்புறுத்திக் குடிக்க வைத்தான்.

“கபக்..” வாந்தி எடுத்த ரத்தினவேல், வாந்தி மீதே குப்புற விழுந்து மட்டையானார்.

“ஹா! ஹா! ஹா! ஹா!” பி.எஸ்.வீரப்பா போல் வாய்விட்டு வில்லத்தனாமாய்ச் சிரித்தான் தனசேகர்.

“டேய் ரத்னவேலு! ஒங்குடும்பத்துக்குள்ள நொழஞ்சு நல்லவம்மாரி வேஷம் போட்டு நம்ப வெச்சு .சோடா கலர் குடுத்துக் குடுத்துப் பழக்கப்படுத்தி, ஒனக்கே தெரியாம சாராயத்தக் குடிக்க வெச்சு, ஒஞ்சொத்தையெல்லாம் எழுதி வாங்கிட்டேன்.. தோ, மட்டையாகிக் கெடக்குற ஒன்ன அடுத்து எந்த நெலைக்கு ஆளாக்கப் போறேன் தெரியுமா? ஒம்பொண்ணு இந்துவ எனக்குக் கட்டி வைக்கிறேன்னு நீ எங்கிட்ட கெஞ்சனும். நாகராஜுவ நா ஜெயிக்க வைக்கணும். ஒம்பொண்ணு எந்தப் பயலோடயோ சுத்துறா. அவுன்டேந்து ஒம்மவளப் பிரிப்பேன் நாகராஜு நெனைக்குறா மாதிரி. பாரு பாரு” என்றபடி மட்டையாகிக் கிடக்கும் ரத்தினவேலை பல கோணங்களில் கேவலமாகக் கேமராவில் படமெடுத்துக் கொண்டான் தனசேகர்.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்




தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.