நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 20

விவசாயத் தொழிலாளர்கள் அறுப்பறுப்பதை வரப்பில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்த ரத்தினவேல், அடிக்கும் வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் தவித்தார்.

துண்டை எடுத்து கழுத்தையும் முகத்தைத்தையும் துடைத்துக் கொண்டார்.

“உஸ்! மணி கால ஒம்போதுதான் ஆகுது. வெயில் என்னமா அடிக்கிது!” தனக்குத் தானே புலம்பினார்.

“இன்னிக்குனு பாத்து கொடகூட கொண்டுவல்ல. ப்ச்!” என்றார்.

“மாமா! இந்தாங்க மாமா குட” பத்தடி தாண்டி வரப்பில் நின்றிருந்த தனசேகர் ரத்தினவேல் அருகில் வந்து ஜிப் போட்ட தோளில் மாட்டும் பையிலிருந்து சின்ன சைஸ் பச்சை வண்ணக் குடையொன்றை எடுத்து பட்டனை அழுத்தித் திறந்து நீட்டினான்.

“அட! இதுமாரில்லாம்கூட கொட இருக்கா!” அதிசயப்பட்டுக் கேட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டார் ரத்தினவேல்.

“பம்பாய்லேந்து எம்ஃப்ரண்டு வாங்கிட்டு வந்து கொடுத்தது”

நாகராஜ் கொடுத்ததை பம்பாய் ஃப்ரெண்டு என்றெல்லாம் அளந்து விட்டான் ஃப்ராடு தனசேகர்.

“மாமா நீங்க மோட்டார் இருக்குற ரூமுல ஒக்காருங்க. நா வேலய பாத்துக்குறேன்.”

“வேண்டா சேகரு. நீங்க ஏன்?”

“என்ன மாமா இது? இன்னுமா என்னய வேத்தாளா நெனைக்குறீங்க!”

“அதில்ல, நல்ல உத்தியோகத்துல இருக்குற நீங்க போய்”

“அட போங்க மாமா. நம்ம வீட்டு வேலய நாம பாக்காம, யாரு மாமா பாக்குறது?”

குளிர்ந்து போனார் ரத்தினவேல்.

கடந்த ஒருமாதத்திற்கு மேலாகவே விதை நெல்லு ஊற வைக்க, ஊற வெச்ச நெல்ல வயல்ல தூவ, நாத்துப் பறிக்க, நடவு நட, தண்ணி பாச்ச, உரம் வைக்க, மருந்து தெளிக்க என்று ஒவ்வொரு கட்டத்திற்கும் வந்து விடுவான் தனசேகர்.

இதோ இன்று அறுப்பு. வந்து நின்றுவிட்ட தனசேகரைப் பார்த்து நெகிழ்ந்து போனார் ரத்தினவேல்.

‘எவ்வளவு நல்லபையன் இவன். நல்ல உத்தியோகம், கைநிறைய சம்பளம், வீடு வாசல், காருன்னு வசதிக்கும் கொறச்சலில்ல. பேசாம மாப்ளயாக்கிக் கிட்டாதான் என்ன? இதுபோல ஒருபையன எங்க போய்த் தேடினாலும் கெடைப்பானா? சந்தேகம்தான்!’ என்று நினைக்குமளவுக்கு ஆகிவிட்டார் ரத்தினவேல்.

பாவம் குடிப்பழக்கத்தைத் தவிர வேறு எந்த நல்ல ஒன்றுக்கும் தனசேகர் சொந்தக்காரனில்லை. அவன் ஒரு சரியான ஃபிராடு என்பதை அவர் எப்படி அறிவார்?

தனசேகர் நல்லவன்போல் நடிப்பது, நாகராஜு தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள. ரத்தினவேல் குடும்பதை நம்ப வைக்கவும் இந்துவை மணந்து நாகராஜின் திட்டப்படி கொடுமைப்படுத்தி ரத்தினவேலை பழி தீர்க்கவும் தானே!

இப்போதெல்லாம் தனசேகர் ரத்தினவேலுக்கு வலது கரம் போல் ஆகிவிட்டான்.

தன்னை ரத்தினவேல் முழுவதுமாய் நம்பும்படி நடந்து கொண்டான். நாகராஜின்
இயக்கத்தில் நன்றாகவே ரத்தினவேல் குடும்பத்தில் இந்துவைத் தவிர, மற்றவர்களை இவன் நல்லவன் என நினைக்கும் அளவுக்குச் சிறப்பாகவே நடித்து வெற்றியும் பெற்றான்.

‘நல்லவனாய் நடித்து வெற்றி பெற்றாகி விட்டது.இனி நாகராஜின் திட்டப்படி வில்லத்தனத்தைக் காட்ட வேண்டியதுதான்’ என தீர்மானித்தான் தனசேகர்.

“சேகர்!” அழைத்தார் ரத்தினவேல்.

“என்ன மாமா?”

“என்னமா வெயிலடிக்குது, காந்துது இல்ல”

“ஆமா மாமா! கொளுத்துது மாமா வெயிலு”

“நாக்கு வரண்டு போயிடுத்து”

“மாமா, ஜில்லுனு சோடா கலர் குடிக்கிறீங்களா?”

“ஜில்லுனு சோடா கலரா! அதேது இங்க? டவுனுக்கில்ல போகனும்”

“இல்ல மாமா, நானே வெச்சிருக்கேன். தோளில் மாட்டியிருந்த பையின் ஜிப்பைத் திறந்து பவண்டோ பாட்டிலைத் வெளியிலெடுத்துத் திறந்து ரத்தினவேலிடம் நீட்டினான் தனசேகர்.

காலை எட்டு மணிக்கு மேல் நாகராஜின் வீட்டிலிருந்து கிளம்பும்போதுதான் ஃபிரிட்ஜ்ஜிலிருந்து எடுக்கப்பட்ட பாட்டிலென்பதால் ஓரளவு ஜில்லிப்புடனே இருந்தது பவண்டோ.

“அடடே!” கண்கள் விரிய ஆர்வத்துடன் பாட்டிலை வாங்கிக் கொண்டார் ரத்தினவேல்.

அடுத்தடுத்து வயலில், தென்னந்தோப்புகளில், கரும்புத் தோட்டத்தில் என வேலை நடக்கும் போதெல்லாம் இவன் பவண்டோ, லவ்வோ, கோலி சோடா எனக் கொண்டு வருவதும், ஆர்வத்துடன் ரத்தினவேல் வாங்கிக் குடிப்பதும் வாடிக்கையாயிற்று.

அன்றும் அப்படித்தான், மதியம் ஒருமணியோடு வயலில் வேலை முடிந்து ஆட்கள் போயாகிவிட்டது. வெயில் கொளுத்தி எடுத்தது. அனல் காற்று வீசியது.

“உஸ்.. உஸ்..”ஸென்று சொல்லியபடி துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அந்தத் துண்டாலேயே முகத்தில் விசிறிக் கொண்டார் ரத்தினவேல்.

அவர் பார்வை அவரை அறியாமலேயே தனசேகரின் தோளில் தொங்கும் பை மீது ஆசையோடு படிந்தது. ரத்தினவேலின் பார்வையில் படிந்திருந்த ஆசை தனசேகரைத் தனக்குள் சிரித்துக் கொள்ள வைத்தது.

“ரொம்பதா வெய்யிலு கொளுத்துது இல்லியா மாமா? ரொம்ப வேர்க்குது, தலையே சூடாயிட்டு மாமா. அடேங்கப்பா! என்னா வெய்யிலு, என்னா வெய்யிலு இங்கிட்டு நிக்கக்கூட முடியல. வாங்க மாமா மோட்டார் ரூமுல ஒக்காந்து ஜில்லுனு சோடா கலர் குடிப்போம். இன்னிக்கு ஸ்பெஷலா, வெளிநாட்டுலேந்து வந்திருந்த என் ஃபிரண்டு வாங்கிகிட்டு வந்த கலர குடிப்போம் மாமா. அருமையா இருக்கும்” சொல்லிக் கொண்டே தண்ணி மோட்டார் இருக்கும் ரூமை நோக்கி நடந்தவனை, பலியாடெனப் பின் தொடர்ந்தார் ரத்தினவேல்.

ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த லேபிள் ஒடப்பட்டிருந்த இரண்டு மூன்று
பாட்டில்களை பையிலிருந்து எடுத்து வெளியே வைத்தான். அதில் பவண்டோவுடன் கொஞ்சமாய் சீமைச்சரக்கும் கலந்து வைக்கப்பட்டிருந்தது.

“இந்தாங்க மாமா, ஸ்பெஷல் சோடா கலர் மாமா .குடிச்சிப் பாருங்க மாமா”

ஆசையுடன் வாங்கி ஒருவாய் அருந்தினார் ரத்தினவேல். வித்தியாசமாய் பழவாசனை யோடு இருந்தது.

“எப்பிடி மாமா இருக்கு? புடிச்சிருக்கா மாமா!”

“நல்லாத்தான் இருக்கு. வித்தியாசமான ருசீல இருக்கு. போத கீத வராதே..”

“அட! என்ன மாமா? நாம் போயி அதெல்லாம் குடிப்பேனா? ஒங்குளுக்குதா தருவேனா?”

“அதானே!”

அடுத்த ஒருவாரத்திற்குள் மொத்தமாய் தனசேகரின் வலையில் வீழ்ந்தார் ரத்தினவேல்.

“மாமா, வயலுக்கு வைக்கப் போதுமான உரம் கெடைக்கலன்னு சொன்னீங்கள்ள?”

“ஆமாம் சேகர் .ஒரத் தட்டுப்பாடு ரொம்ப மோசமா இருக்கு. போதுமான அளவு கெடைக்க மாட்டேங்குது.”

“எனக்கு நாலஞ்சு ஒரக்கட ஓனருங்களத் தெரியும் மாமா. நான் ட்ரைப் பண்ணிப் பாக்குறேன். நாளைக்கு வர்றரச்சே அந்தந்த கடைக்கு உரம் தேவைன்னு எழுதிக் கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தீங்கனா கட்டாயமா குடுப்பாங்க. நா வாங்கித் தரேன் மாமா” என்றான்.

நாளை முதல் விதி தன்னை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கக் காத்திருக்கிறது என்பது தெரியாமல் தனசேகரின் யோசனைக்குச் சம்மதம் தெரிவித்தார் ரத்தினவேல்.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.