சேவலுக்கு நிறம் வந்தது எப்படி? என்பது சின்ன கற்பனைக் கதை. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
முன்னொரு காலத்தில் எல்லா விலங்குகளும், பறவைகளும் நிறமற்று வெள்ளை நிறமாகவே இருந்தன.
நிறமற்ற விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.
எல்லோரும் சேர்ந்து கடவுளிடம் சென்று, தங்களுக்கு நிறத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள முடிவு செய்தன.
அதன்படி விலங்குகளும் பறவைகளும் ஒன்றுகூடி, கடவுளை பிரார்த்தித்தன. கடவுளும் அவர்கள் முன் தோன்றினார்.
“என் அருமைக் குழந்தைகளே, நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி என்னை அழைத்ததன் காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு கழுகு கடவுளிடம் “இறைவா, நாங்கள் எல்லோரும் நிறமற்று வெள்ளையாக இருப்பதால், எங்களுக்குள் யாரையும் எளிதாக அடையாளம் காண இயலவில்லை. எனவே எங்களுக்கு பொருத்தமான நிறங்களை வழங்க வேண்டி, நாங்கள் உங்களை அழைத்தோம்.” என்றது.
அதனைக் கேட்டதும் இறைவன் “சரி, என்னிடம் நிறக்குப்பிகள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான நிறங்களை நீங்களே தேர்வு செய்யுங்கள்.
நிறக்குப்பிகளை ஒருமுறை பயன்படுத்தி மூடிவிட்டால், பிறகு திறக்க இயலாது. எனவே ஒருவர் பின் ஒருவராக வந்து, விருப்பமான நிறங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.” என்றார்.
கடவுள் முதலில் காட்டு ராஜாவான சிங்கத்தை அழைத்தார். சிங்கம் தனக்கு மஞ்சள் நிறத்தைத் தேர்வு செய்தது.
அடுத்து வந்த புலி ஆரஞ்சு நிறத்தையும், அதில் கருப்பு நிறத்தில் கோடுகளையும் தேர்ந்தெடுத்தது.
யானை தனக்கு அடர் சாம்பல் நிறத்தை எடுத்துக் கொண்டது.
கிளி பறந்து வந்து தனக்கு பச்சை நிறம் பெற்றுக் கொண்டது.
கொக்கு தனக்கு வெள்ளை நிறமே போதும் என்றது.
கழுகு அடர்பழுப்பு நிறத்தை ஏற்றுக் கொண்டது.
மரங்கொத்தி மரத்தின் நிறத்தை வாங்கியது.
இவ்வாறாக எல்லா விலங்குகளும் பறவைகளும் நிறங்களைப் பெற்றுக் கொண்டன.
கடவுள் எல்லோரையும் பார்த்து “என் அருமைச் செல்வங்களே, எல்லோரும் நிறங்களை பெற்றுக் கொண்டீர்களா?. இன்னும் யாரேனும் இருக்குறீர்களா?. நான் நிறக்குப்பிகளை மூடிவிடலாமா?” என்று கேட்டார்.
எல்லோரும் “நாங்கள் நிறங்களைப் பெற்றுவிட்டோம். நீங்கள் நிறக்குப்பிகளை மூடிவிடலாம்” என்று ஒருமித்த குரலில் கூறினர்.
கடவுளும் நிறக்குப்பிகளை மூடினார்.
அப்போது சேவல் எங்கிருந்தோ அவசரமாக ஓடிவந்தது. எல்லோரும் நிறங்களைப் பெற்று மின்னுவதைப் பார்த்தது.
உடனே கடவுளிடம் “எனக்கு ஏதேனும் ஒரு நிறத்தினை தாருங்கள்” என்றது.
கடவுள் “நான் நிறக்குப்பிகளை மூடிவிட்டேன். இனிமேல் நிறங்களைப் பெறமுடியாது.” என்றார்.
அதனைக் கேட்டதும் சேவல் தேம்பிதேம்பி அழுதது.
உடனே கடவுள் “என் அருமைக் குழந்தைகளே, நீங்கள் எல்லோரும் உங்களுடைய வண்ணத்தில் சிறிதளவை சேவலுக்கு கொடுங்கள்” என்றார்.
உடனே எல்லோரும் தங்களின் வண்ணங்களில் சிறிதளவை சேவலுக்குக் கொடுத்தனர்.
கடவுள் “சேவலுக்கு நிறம் வந்தது எப்படி? என்பதைப் பார்த்தீர்களா. இனி சேவல் எல்லா நிறங்களிலும் காணப்படும்.” என்றார்.
கடவுள் கூறியபடி சேவல் எல்லா வண்ணங்களிலும் காணப்படுகிறது.
மறுமொழி இடவும்