சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி

சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கு ஏற்ப செயல்படுங்கள். இதனை சிறுகதை மூலம் அறிந்து செயல்படுங்கள்.

செல்வந்தர் ஒருவருக்கு பேரழகியான மகள் ஒருத்தி இருந்தாள். இளைஞர்கள் பலர் அவளை திருமணம் முடிக்க போட்டி இட்டனர். செல்வந்தர் தன் மகளை உலக அறிவு உள்ள ஒருவனுக்கு மணம் முடிக்க எண்ணினார்.

எனவே செல்வந்தர் போட்டி ஒன்றினை அறிவிக்க முடிவு செய்தார். அதாவது, செல்வந்தர் கேட்கும் இரண்டு கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவருக்கே தனது மகள் என்பதே அப்போட்டியாகும்.

 

இனிமையான பொருள்

போட்டி அறிவித்த மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் செல்வந்தர் வீட்டில் கூடினர். செல்வந்தர் போட்டியாளர்களைப் பார்த்து “உலகிலேயே இனிமையான பொருளை கொண்டு வாருங்கள்” என்று சொன்னார்.

மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டு வந்தான்; இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.

வரிசையில் கடைசியாக ஏழை ஒருவனும் நின்று கொண்டிருந்தான். அவனை எல்லோரும் ‘நீயுமா?’ என்று ஏளனமாகப் பார்த்தன‌ர். ஏழையின் முறை வந்ததும் “நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தர் கேட்டார்.

ஏழை தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
செல்வந்தர் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர் ஏழையிடம் “இதனை எதற்காக கொண்டு வந்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு ஏழை “நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?.  மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால்தான் அதன்குறியீடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன்” என்றான்.

“நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்.” என்றான் அந்த ஏழை.

அவனின் பதிலைக் கேட்ட செல்வந்தர் “இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்” என்று சொன்னார்.

 

கசப்பான பொருள்

பின் செல்வந்தர் “உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்” என்று தனது அடுத்த கேள்வியை கேட்டார்.

மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான்; இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான்.

கடைசியாக ஏழை வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.

செல்வந்தர் “என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்டார்.

அதற்கு ஏழை “தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்” என்று பொறுமையாகக் கூறினான்.

ஏழையின் அறிவைக் கண்டு வியந்த செல்வந்தர் தன் மகளை அவனுக்கே திருமணம் முடித்துக் கொடுத்தார்.

 

நாக்கு ஒரு அற்புதமான‌ பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான். எனவே  சொர்க்கம் மற்றும் நரகத்திற்கான காரணியான நாக்கினைக் கொண்டு எப்பொழுதும் இனிமையான சொற்களைப் பேசி வாழ்வை சொர்க்கம் ஆக்குவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.