சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை

குருவிகள் தூங்கிக் கொண்டிருந்தன.

வாக்டெய்லுக்கோ தூக்கம் வரவில்லை. பயண அனுபவங்களையும், வழியில் பார்த்தவைகளையும் புத்தகத்தில் குறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அதன் மனம் மாறியது. அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்கலாம் என அதற்கு தோன்றியது.

அதனால் தனது நண்பர்களையும் ’இடங்களை சுற்றிப் பார்க்க’ அழைத்து வாக்டெய்ல்.

அதன் நண்பர்களும் அதற்கு இசைந்தன. அதனையடுத்து தங்களது பெற்றோர்களிடம் அவை அனுமதி கோரின.

மாலை நேரமே அங்கிருந்து புறப்பட இருப்பதால் விரைவில் சென்றுவரும்படி பெற்றோர்கள் அவற்றை அறிவுறித்தன.

சரி என்று சொல்லி வாக்டெய்லும் அதன் நண்பர்களும் அங்கிருந்து பறந்து மரங்களை ஒட்டி இருந்த சாலைப் பகுதிக்கு வந்தன.

 

கடற்கரை பகுதியில் உணராத வெப்பத்தை, அந்த நெடுஞ்சாலை பகுதியில் குருவிகள் உணர்ந்தன. எனினும் அவற்றிற்கு அவ்விடத்தின் அமைப்பு முற்றிலும் புதியதாக இருந்ததால் அங்கு இருப்பவைகளை ஆச்சரியமுடன் பார்த்தன.

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சிட்டாய் பறந்துக் கொண்டிருந்தன. அதை குருவிகள் திகைப்புடன் பார்த்தன.

பின்னர் அவ்வழியே மெதுவாக அவை நடந்து சென்று கொண்டிருக்க, சாலையின் ஓரத்தில் துணிப்பை போன்றதொரு பொருள் ஆங்காங்கே சிதறி இருந்ததை அவை கண்டன.

அது என்னவென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அருகில் சென்று அதனை கொத்தி கொத்திப் பார்த்தன.

ஒரு பக்கத்தில் பஞ்சு போன்ற இழைகள் மிகுதியாக இருந்தன. செவ்வக வடிவில் இருந்த அந்த துணிப் பொருளை திருப்பி திருப்பி பார்த்தன. அது என்ன வென்று அவற்றிற்கு தெரியவில்லை.

“இது என்னதுப்பா?” என்று ஒரு குருவி கேட்டது

“தெரியலையே… ஏதோ புதுசா இருக்கு” என்று மற்றொரு குருவி பதில் சொன்னது.

ஒன்றும் புரியாததால் அங்கிருந்து அவை முன்னோக்கி நடந்தன.

எதிரே ஓரிரு மனிதர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். குருவிகளுக்கு சற்றே பயம் தொற்றிக் கொண்டது.

உடனே பறந்து அருகில் இருந்த மரத்தின் மீது அமர்ந்தபடி அவ்வழியாய் நடந்து சென்ற மனிதர்களை பார்த்துக் கொண்டிருந்தன.

திடீரென, “நண்பர்களே, நாம சாலையில ஒரு பொருள் பார்த்துமே… அது மாதிரி இல்லே” என்று ஒரு மனிதனின் முகத்தில் அணிந்திருந்த முகக்க‌வசத்தை சுட்டிக்காட்டி வாக்டெய்ல் கேட்டது.

அப்பொழுது தான் மற்ற குருவிகளுக்கும் ஞாபகம் வந்தது. “ஆமாம் வாக்டெய்ல்… நீ சரியா சொன்ன…. அங்க நடந்து போனவரோட முகத்துல அணிந்திருக்கிற பொருள் தான் அது” என்று மற்றொரு குருவியும் கூறியது.

ஆம், சாலையோரத்தில் விரவிக் கிடந்த அந்தப் பொருள், முகக்கவசம் தான். அதனை மற்ற குருவிகளும் உறுதி செய்துக் கொண்டன.

எனினும், எதனால் மனிதர்கள் அணிந்திருந்த முகக்கவசம் சாலையில் இருக்கிறது என்று புரியாமால் குருவிகள் குழம்பி நின்றன.

அப்பொழுது நேரம் கடந்துச் சென்றுக் கொண்டிருப்பது, வாக்டெய்லின் நினைவுக்கு வந்தது.

உடனே, “நேரம் ஆயிடுச்சு…. கிளம்புலாமா?” என அது கேட்டது. அதன் நண்பர்களும் “ஆமாம்…. நேரம் ஆயிடுச்சு நாம சொர்க்க வனம் போகணுமில்லே” என்று கூறின.

உடனே அவை அங்கிருந்து புறப்பட்டு குருவிக் கூட்டம் தங்கியிருந்த இடத்தை சென்றடைந்தன.

 

மாலை ஐந்து மணியிருக்கும். குருவிகளை அழைத்தது இருன்டினிடே. உடனே எல்லா குருவிகளும் ஒன்றுக் கூடின. அவை அமைதியுடன் நின்றன.

“நண்பர்களே, உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு. காரணம், நம்ம சொந்த நாட்டில இருந்து இவ்வளவு தூரம் வெற்றிகரமா பயணித்து வந்திருப்பது தான்.

இது உங்களோட ஒற்றுமையினாலும் மனஉறுதியினாலும் தான் சாத்தியமாச்சு. சிறப்பு நண்பர்களே… உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியது இருன்டினிடே.

“நன்றி ஐயா… ஆனா இதெல்லாம் உங்களோட வழிகாட்டுதலினாலும், அன்பினாலும் தான் நடந்திருக்கு. இத எல்லோரும் ஒத்துகிட்டு தான் ஆகணும்” என்று மூத்த குருவிகள் கூறின.

“நல்லது நண்பர்களே. உங்களோட அன்பான வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன். அடுத்து இன்னொரு முக்கியமான செய்தி. இங்க கொஞ்சம் வெப்பம் கூடுதலா இருக்கும்.

இந்த சூழ்நிலையில வாழ நாம பழகிக்கணும். சில நண்பர்கள் இப்பதான் முதல் முறையா இங்க வர்றீங்க. அவங்களுக்கு ஏதாச்சும் உடல் உபாதை வந்துச்சுன்னா உடனே சொல்லுங்க.

அதற்கு உண்டான சிகிச்சைய எடுத்துக்கலாம். பயம் வேண்டாம் என்ன சரியா?” என்று சொன்னது இருன்டினிடே.

“சரி ஐயா” என்று குருவிகள் எல்லாம் ஒருமித்து பதில் கூறின.

“சிறப்பு நண்பர்களே. இன்னும் கொஞ்ச மணிநேர பயணம் தான் இருக்கு. இத நாம வெற்றிகரமா முடிச்சு சொர்க்க வனம் சென்றடையனும்” என்றது இருன்டினிடே.

“நிச்சயமா செய்து முடிப்போம் ஐயா… நல்ல முறையில சொர்க்க வனம் செல்வோம்” என்று எல்லா குருவிகளும் கூறின.

அதனை அடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்து குருவிக் கூட்டம் புறப்பட்டது.

 

இருன்டினிடே கூறியது போல வெப்பநிலை அதிகமாக இருப்பதை குருவிகள் உணர்ந்தன. மெல்ல சூரிய ஒளிக்கதிர்கள் மறைந்தன. வெளிச்சமும் மங்கியது. இரவு மலரத் தொடங்கியது.

குருவிகள் நிலப்பரப்பை கவனிக்க தொடங்கின. மனிதக் குடியிருப்புகள் நிறைந்திருந்தன. வெளிர் மஞ்சள் நிறத்தில் செயற்கை ஒளி விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

நேரம் செல்ல செல்ல குடியிருப்புகள் மறையத் துவங்கி, வயல்வெளிகள் தென்பட தொடங்கின.

அங்கு ஏறக்குறைய வெளிச்சமே இல்லை. வெப்பநிலை குறைந்திருப்பதை குருவிகள் உணர்ந்தன. அதனால் அவை மகிழ்ச்சியில் மூழ்கின.

இரவு ஒன்பது மணியிருக்கும். இருன்டினிடே சொன்ன அந்த சதுப்பு நிலம் இருந்த பகுதிக்குள் குருவிக் கூட்டம் நுழைந்தது. சதுப்பு நிலத்தை கண்டுக்கொண்டது இருன்டினிடே.

உடனே, “நண்பர்களே அங்க பாருங்க, அது தான் நான் சொன்ன சதுப்பு நிலம், அங்கதான் நாங்க வருடாவருடம் வந்து தங்குவோம்” என்று ஒருவித ஆனந்த மனநிலையில் இருன்டினிடே கூறியது.

கூட்டத்தில் இருந்த இளம் குருவிகள் “அப்படியா” என்று கூறி அந்தப் பகுதியை உற்று நோக்கின.

திட்டமிட்டபடி குருவிக் கூட்டம் சதுப்புநிலத்தில் தங்குவதாக இல்லை. எனினும் இருன்டினிடேவிற்கு ஒருவிதமான உணர்வு உள்ளத்தில் தோன்றியது.

அதன் எண்ணத்தை அடக்க முடியாமல், “நண்பர்களே, கொஞ்ச நேரம் அந்த சதுப்பு நிலத்துல தங்கிட்டு போலாமா?” என்று ’ஒரு குழந்தை கேட்பது போல்’ மீண்டும் ஆவலுடன் குருவிக் கூட்டத்தை பார்த்து கேட்டது இருன்டினிடே.

இருன்டினிடேவின் சொற்களில் உணர்வுகள் புதைந்திருந்தன. அது மூத்த குருவிகளை கலங்கச் செய்தது.

உடனே, “ஐயா, நாம சதுப்பு நிலத்துல தங்கிட்டே போகலாம்” என்று அவை கூறின.

“மிக்க நன்றி நண்பர்களே” என்று இருன்டினிடே கூறியது.

 

அடுத்து, சில மணித்துளிகளில் குருவிக் கூட்டம் அந்த சதுப்பு நிலத்தில் தரையிறங்கியது.

இருன்டினிடே, தான் வழக்கமாக தங்கும் இடம் சென்றது. அவ்விடத்தை கண்டு நெகிழ்ந்தது. அந்த மண்ணை தொட்டு வணங்கியது.

அந்த சதுப்பு நிலத்தை விரைவாக ஒரு சுற்று சுற்றி வந்தது. அங்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தனது கூட்டத்தினரிடம் நினைவு கூர்ந்தது.

அப்பொழுது நாரை, கொக்கு மற்றும் வாத்து நண்பர்களை சந்தித்தது இருன்டினிடே. அவை எல்லாம் இருன்டினிடேவை கண்டவுடன் மகிழ்ந்தன.

இளம் குருவிகளை தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது இருன்டினிடே. எல்லாம் இன்முகத்துடன் ஒன்றை ஒன்று வரவேற்றுக் கொண்டன.

பின்னர் அவ்விடம்விட்டு பிரிய மனமில்லாமல் “புறப்படலாமா?” என்று கேட்டது இருன்டினிடே.

தலைவர் இருன்டினிடேவின் ’உருக்கமான செயல்களை’ குருவிக் கூட்டம் இதுவரை கண்டதேயில்லை. ஏதோ பிறந்த இடத்தை விட்டு பிரிவது போன்றதொரு மனநிலை இருன்டினிடேவிடம் இருப்பதை மூத்த குருவிகள் கவனித்தன.

வேறு வழியின்றி, “ஐயா, நீங்க இந்த அளவு உணர்ச்சி வயப்பட்டு நாங்க பார்த்ததேயில்ல என்ன ஆச்சு?” என்று அதனிடம் சில குருவிகள் கேட்டன.

“ஒன்னுமில்ல நண்பர்களே. பல வருடங்களா இங்கவந்து தான் தங்கியிருந்தேன்… ஒருமுற இந்த இடத்தை பார்க்கணும்னு தோணுச்சு” என்று பெருமையாக கூறியது இருன்டினிடே.

அதன்பின்னர் குருவிகள் ஒன்றும் சொல்லவில்லை.

 

ஒரு மணிநேரம் சென்றிருக்கும். குருவிக் கூட்டம் அங்கிருந்து புறப்பட்டது.

அடுத்து ஐந்து மணிநேரமாக குருவிக் கூட்டத்தின் பயணம் தொடர்ந்தது. சொர்க்க வனம் நெருங்கி கொண்டிருப்பதை எண்ணி அவை மகிழ்ச்சியில் மூழ்கின. அதனால் அவற்றின் வேகம் கூடியது.

அப்பொழுது அதிகாலை மூன்று மணியிருக்கும். எங்கும் ஒளியில்லை. அந்தப் பகுதியில் பனிப்பொழிவு தொடங்கியிருந்தது. வெப்பநிலையும் கணிசமாக குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

அங்கு மரங்களும் செடிகளும் அதிகமாக இருப்பதை இருன்டினிடே அறிந்து கொண்டது.

சில மணித்துளிகளில் பனிப்பொழிவு வெகுவாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அருகில் இருக்கும் குருவிகளையே காணமுடியவில்லை. அந்த அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

உடனே, எல்லோரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படி எச்சரிக்கை சமிக்ஞையினை இருன்டினிடே தந்த வண்ணம் இருந்தது.

எல்லா பெற்றோர்களும் தத்தம் பிள்ளைகள் உடன் இருப்பதை உறுதி செய்வதற்காக அவற்றை அழைத்துக் கொண்டே இருந்தன.

அதன்படி வாக்டெய்லையும் அதன் பெற்றோர் சீரான கால இடைவெளியில் அழைத்துக் கொண்டே இருந்தன.

வாக்டெய்லும் தொடர்ந்து தன் பெற்றோருக்கு பதில் தந்து கொண்டிருந்தது.

அவ்வாறு ஒரு முறை பதில் தந்த அடுத்தக் கணம், அதற்கு வயிற்றில் சுருக்கென கடும் வலி உண்டாயிற்று. வாய் திறந்து குரல் கூட எழுப்ப முடியவில்லை.

சில நொடிகளில், வாக்டெய்ல் தனது சுயநினைவை இழந்துவிட்டது.

அப்படியே கீழ்நோக்கி வேகமாக சென்று ஒரு பெரிய ஆலமரக் கிளையில் தொப்பென விழுந்தது வாக்டெய்ல்.

அதன் முதுகில் இருந்த பை மரக்கிளையில் மாட்டிக் கொண்டது. அதனால் மரக்கிளையில் சிக்கிக் கொண்டது வாக்டெய்ல்.

அதன் சிறகுகள் அசையவில்லை. கண்களின் இமைகள் மூடிக்கொண்டன. தலை தொங்கியது.

அதன் நிலை அறியாது ஸ்வாலோ கூருவிக் கூட்டம் வேகமாக பயணித்து வெகுதூரம் சென்று விட்டது.

’வாக்டெய்ல் கூட்டத்தோடு பயணிக்கும்’ என்ற நம்பிக்கையில் அதன் தாய் தந்தை குருவிகளும் பறந்துக் கொண்டிருந்தன.

வாக்டெய்லோ மரக்கிளையில் உணர்வின்றி கிடந்தது.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 12 ‍- கடற்பயணம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.