டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அவர் ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கி நாட்டின் மிகப் பெரிய பதவினான ஜனாதிபதியாக உயர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர்.
ராதாகிருஷ்ணன் சிறந்த தத்துவஞானி. இந்தியாவின் கல்வித் திட்டத்திற்கு வித்திட்டவர். இந்திய தத்துவத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்றவர்.
சாகித்ய அகடாமி, பென் அனைத்திந்திய மையம் போன்ற உயர்நிறுவனங்களை நடத்தியச் சென்ற பெருமை அவரைச் சாரும்.
133 டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். ஐந்து முறை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராவும் பணியாற்றியவர்.
இந்தியாவில் ஒப்பீட்டு மதம் மற்றும் தத்துவம் பயின்ற கல்வியாளர். இந்திய தத்துவத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்றவர். இந்திய மற்றும் மேற்கத்திய கலாச்சார இடைவெளிக்கு பாலமாக இருந்தவர்.
மேற்கத்திய விசமர்சனங்களுக்கு எதிராக இந்து மதத்தைப் பாதுகாத்தவர். சமகால இந்து சமய அடையாள உருவாக்கத்திற்கு இவரின் பங்களிப்பு இன்றியமையாதது.
இந்து மதம் என்ற புரிதலை வடிவமைப்பதில் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளில் செல்வாக்கு பெற்றிருந்தார். வீரத்திருமகன், பாரத ரத்னா உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.
பிறப்பு மற்றும் இளமைப்பருவம்
இவர் 05.09.1888-ல் திருத்தணிக்கு அருகில் உள்ள சர்வபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் வீராசாமி, சீதம்மா ஆவார். இவரது தந்தை ஒரு புரோகிதர் ஆவார்.
இவரது தந்தை இவரை புரோகிதராக உருவாக்க விரும்பினார். ஆனால் இவர் பள்ளி சென்று கல்வி கற்பதில் ஆர்வமானார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை திருத்தணியில் பயின்றார். பின் திருப்பதியிலுள்ள லூத்தரன் மிஷன் உயர்நிலைப்பள்ளியிலும் வாலாஜா பேட்டையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
ஏழைக்குடும்பத்தைச் சார்ந்தவராதலால் தனது கல்வியை உதவித் தொகை மூலமே பயின்றார். வேலூரிலுள்ள வர்கீஸ் கல்லுரியில் சேர்ந்தார். பின் மெட்ராஸ் கிருஸ்டியன் கல்லூரியில் பயின்று எம்.ஏ தத்துவவியல் பட்டத்தைப் பெற்றார்.
இவர் தன் ஏழ்மையின் காரணமாக தன் தூரத்து உறவினர் படித்த தத்துவவியல் புத்தங்கள் கிடைத்தைக் கொண்டு தத்துவவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.
இவர் தனது முதுநிலைக் கல்வியின் போது வேதாந்த நெறிமுறைகள் என்னும் தலைப்பில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். இதுவே இந்து மதம் மற்றும் தத்துவம் பற்றி அறிய அடிப்படையாக அமைந்தது.
திருமண வாழ்க்கை
இவர் தனது பதினாறாவது வயதில் சிவகாமு என்பவரை மணந்து கொண்டார். இவருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி 1956-ல் மறைந்தார்.
ஆசிரியப்பணி
1909–ல் மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். இங்கு அவர் இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் தத்துவங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
1918-ல் மைசூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அப்போது தத்துவம் சார்ந்த கட்டுரைகளை பிரசித்தி பெற்ற பத்திரிக்கைகளில் எழுதினார்.
1921-ல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1923-ல் ‘இந்திய தத்துவம்’ என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இப்புத்தகம் பராம்பரிய தத்துவ இலக்கியத்தின் சிறந்த படைப்பாகும்.
1926 ஜீனில் நடைபெற்ற பிரிட்டிஷ் பேரரசின் பல்கலைக்கழக மாநாட்டில் கொல்கத்தா பல்கலைகழகத்தின் சார்பில் பங்கேற்றார்.
1926-ல் செப்டம்பர் மாதம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தத்துவக் கல்லூரி மாநாட்டில் கொல்கத்தா பல்கலைகழகத்தின் சார்பில் பங்கேற்றார்.
1929-ல் ஆக்ஸ்போர்டு ஹாரிஸ் மான்செஸ்டர் கல்லூரியில் வாழ்வியல் கொள்கைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய உரைகள் ‘வாழ்வின் கருத்துவாதம்’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது.
1929-ல் ஹாரிஸ் கல்லூரியின் முதல்வரானார். அங்கு அவர் தம் மாணவர்களுக்கு மதங்களின் ஒப்பீடு பற்றிக் கற்பித்தார்.
1931-ல் கல்விக்கான அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் இந்திய விடுதலைக்குப்பின் சர் பட்டத்தைத் தவிர்த்து டாக்டர் பட்டத்தைப் பயன்படுத்தினார்.
பல வெளிநாட்டு பல்கலைகழகத்தில் சொற்பொழிவாற்றும் போது இந்திய விடுதலை குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தத்துவங்களை தரமான கல்வி வாசகங்களுடன் மொழி பெயர்த்தால் அது மேற்கத்திய தத்துவங்களை மிஞ்சிவிடும் என்று எடுத்துரைத்தார். இதனால் இந்திய தத்துவத்தை உலக வரைபடத்தில் வைத்த பெருமை இவரைச் சாரும்.
பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவராக
1931 முதல் 1936 வரை ஆந்திரப் பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றினார். 1939-ல் பெனாரஸ் இந்து மதப்பல்கலையின் துணைவேந்தரானார்.
1946-ல் யுனஸ்கோவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்கு பின் 1948-ல் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவருடைய குழுவின் பரிந்துரைகள் இந்திய கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், இந்தியக் கல்வியின் தேவையைப் பூர்த்தி செய்யவும் பெரிதும் உதவியன.
பொறுப்பான தலைவராக
1949-1952 வரை சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக பணியாற்றினார். 1952-1962 வரை முதல் இந்திய குடியரசுத் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.
1954-ல் இவருக்கு இந்திய உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1962-ல் இந்திய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இவருடைய ஜனாதிபதி பதவியின் போதுதான் இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போரிட்டது. ஜனாதிபதியாக அவருடைய செயல்கள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. 1967-ல் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆசிரியர் தினம்
இவர் ஜனாதிபதியாக பணியாற்றிய போது இவருடைய மாணவர்கள் இவருடைய பிறந்த தினத்தை கொண்டாட விரும்பம் தெரிவித்தனர். அப்போது தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுமாறு விருப்பம் தெரிவித்தார்.
1962 செப்டம்பர் 5 முதல் ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் இவரைப் போற்றும் விதமாக நன்றாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இவ்விருது டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
அன்றைய தினம் மாணவர்கள் தங்களுக்கு எழுத்தறிவித்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
சாகித்திய அகாடாமி, பென் அனைத்திந்திய மையம் போன்ற உயர்நிறுவனங்களை வழிநடத்தினார். 1968-ல் சாகித்திய அகாடாமி ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 17.04.1975-ல் சென்னையில் தனது 86வது வயதில் காலமானார்.
ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கி பல்கலைக்கழகத் துணைவேந்தராகி பின் அயல்நாட்டு தூதுவராக பொறுப்பேற்று துணைகுடியரசுத்தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் பணியாற்றி எல்லோரும் முன்னேற வேண்டும் என்பதற்கு பாடுபட்ட டாக்டர் ராதாகிருஷ்ணனைப் போற்றுவோம்.
– வ.முனீஸ்வரன்
முயற்சியும் ,உழைப்பும் இருந்தால் வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்று வாழ்ந்து காட்டிய மாமனிதருக்கு தலை வணங்குவோம்.