டாப் 10 மடகாஸ்கர் பறவைகள்

டாப் 10 மடகாஸ்கர் பறவைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மடகாஸ்கர் தீவானது பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பிரிந்தது ஆகும்.

எனவே அதில் உள்ள உயிரினங்கள் தனித்துவம் கொண்டு விளங்குகின்றன. இங்கு சுமார் 308 வகையான பறவையினங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றுள் 44 சதவீதம் பறவைகள் உலகின் வேறு எங்கும் காணப்படுவதில்லை. இனி டாப் 10 மடகாஸ்கர் பறவைகள் பற்றிப் பார்ப்போம்.

 

நீல குயில் (Blue Coua)

நீல குயில்
நீல குயில்

 

நீல குயில் மடகாஸ்கரை தாயகமாகக் கொண்டது. மடகாஸ்கரின் அழகு ராணியான இது குயில் குடும்பத்தைச் சார்ந்த பறவைகளில் பெரியது.

இதனுடைய உடல் முழுவதும் பளபளக்கும் அடர்நீலவண்ண இறக்கைகளால் போர்த்தப்பட்டுள்ளது. கண்ணினைச் சுற்றிலும் முடிகளற்ற இளம்நீல சதைப்பகுதியானது இதற்கு அழகு சேர்க்கிறது.

இப்பறவையானது மற்ற குயிலினத்தைப் போல் அல்லாமல், மரக்கிளைகளில் கூடுகட்டி, வெள்ளைநிறத்தில் ஒரே ஒரு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

இது பழங்கள், பூச்சிகள், சிறிய ஊர்வன ஆகியவற்றை உணவாகக் கொள்ளும்.

 

தேன்சிட்டு

தேன்சிட்டு
தேன்சிட்டு

 

மிகவும் சுறுசுறுப்பான தேன்சிட்டு (Common Sunbird Asity) மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டது. குறுகிய வாலினை உடைய இப்பறவை, நீண்ட வளைந்த அலகினையும், வண்ணமயமான முகத்தினையும் கொண்டுள்ளது.

இது பூவின் மகரந்தம், பழங்கள் ஆகியவற்றோடு சிறுபூச்சிகளையும் உண்ணுகிறது. 9-10 செமீ நீளமும், 7 கிராம் எடையையும் கொண்டுள்ள இப்பறவை, 29 மிமீ நீளமுள்ள வளைந்த அலகினைக் கொண்டுள்ளது.

இப்பறவையின் கண்ணினைச் சுற்றிலும் காணப்படும் சதைப்பகுதி, மேற்புறத்தில் வெளிர் நீலநிறத்திலும், அடிப்புறத்தில் அடர்நீலநிறத்திலும் இருக்கிறது.

இது பூக்களில் இருந்து மகரந்தத்தைச் சேகரிக்க தன்னுடைய நீளமான நாக்கினைப் பயன்படுத்துகிறது.

 

மடகாஸ்கர் அரிவாள் மூக்கன் (Madagascan Ibis)

மடகாஸ்கர் அரிவாள் மூக்கன்
மடகாஸ்கர் அரிவாள் மூக்கன்

 

மடகாஸ்கரை தாயகமாகக் கொண்ட மடகாஸ்கர் அரிவாள் மூக்கன், இங்குள்ள பறவைகளில் மிகவும் பெரியது. இது காடுகளிலும் 2000மீ உயரமுள்ள மலைப்பகுதிகளிலும் வாழ்கிறது.

இது பழுப்பு சிவப்பு நிற இறகுகள் மற்றும் சிறகுகளைக் கொண்டுள்ளது. இது நீண்ட சிவப்புநிற கால்களையும், வெள்ளை இறக்கைகளையும், தலையின் பின்புறம் அடர்த்தியான நீண்ட முடிகளையும் கொண்டுள்ளது.

இப்பறவையின் கண்ணினைச் சுற்றிலும் சிவப்புநிற சதைப்பகுதி காணப்படுகிறது. இதனுடைய தலையில் உள்ள நீண்ட முடியானது பார்ப்பதற்கு கிரீடம் போல் இருக்கிறது.

இது நத்தைகள், சிறுபூச்சிகள், சிறுமீன்கள், இருவாழ்விகள், லார்வாக்கள் ஆகியவற்றை உண்ணுகிறது.

 

மடகாஸ்கன் பிக்மி மீன்கொத்தி (Madagascan Pygmy King fisher)

மடகாஸ்கன் பிக்மி மீன்கொத்தி
மடகாஸ்கன் பிக்மி மீன்கொத்தி

 

மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்ட மடகாஸ்கன் பிக்மி மீன்கொத்தி 13செமீ நீளமும், 20கிராம் எடையையும் கொண்ட மிகச்சிறிய பறவை ஆகும்.

இதனுடைய இறகுகள் ஆரஞ்சு – சிவப்பு வண்ணத்திலும், வயிறு மற்றும் கழுத்தின் சிலபகுதிகள் வெள்ளை நிறத்திலும், இரண்டாம்நிலை சிறகுகுள் கருப்புவண்ணத்திலும் இருக்கிறது.

இது தவளைகள், பூச்சிகள், சிறிய ஊர்வன ஆகியவற்றை உணவாக்குகிறது.

மடகாஸ்கரின் மழைக்காடுகள், இலையுதிர் காடுகள், புல்வெளிகள், 1500மீ உயரமுள்ள பகுதிகள் என மடகாஸ்கர் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.

இது மரத்தில் அமர்ந்து கொண்டு, இரையைக் கண்காணித்து பிடித்து உண்ணுகிறது. இது ஆற்றங்கரையில் நீண்ட குகை போன்று மண்ணினால் ஆன கூட்டினை அமைக்கிறது.

 

மடகாஸ்கன் ஃபோடி (Madagascan Fody)

மடகாஸ்கன் ஃபோடி
மடகாஸ்கன் ஃபோடி

 

மடகாஸ்கன் ஃபோடி சிவப்பு ஃபோடி எனவும் அழைக்கப்படுகிறது. தூக்கணாங்குருவி இனத்தைச் சார்ந்த இது மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டுள்ளது.

இனப்பெருக்க காலத்தில் இப்பறவையின் ஆணானது, அடர் சிவப்பு நிற இறகுகளையும், கண்ணைச் சுற்றிலும் கருப்புநிற வளையங்களையும் கொண்டு கண்ணைக் கவரும்.

இவ்வின பெண் மற்றும் இனப்பெருக்க பருவத்தில் இல்லாத ஆண் பறவைகள், சாதாரண சிட்டுக்குருவிகளைப் போன்று இருக்கிறது.

புல்வெளிகள், வயல்வெளிகளில் இப்பறவை காணப்படுகிறது. இது நெல்மணிகள், பூச்சிகள், மகரந்தங்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது.

 

மடகாஸ்கர் போச்சார்ட் (Madagascar Pochard)

மடகாஸ்கர் போச்சார்ட்
மடகாஸ்கர் போச்சார்ட்

 

மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்ட மடகாஸ்கர் போச்சார்ட், சிறிய அடர்பழுப்பு நிறப்பறவை. இது உலகின் அரிதான வாத்து ஆகும்.

இது நீர்நிலையின் சில அடி ஆழத்திற்கு மூழ்கிச் சென்று தனக்குத் தேவையான உணவினை உண்ணுகிறது. இவ்வாத்தின் குஞ்சுகள் பிறந்து 14நாட்கள் கழித்து நீருக்குள் மூழ்கி இரையைத் தேடுகின்றன.

அதுவரையிலும் நீரின் மேற்பரப்பில் உள்ள உணவினை உண்ணுகிறது.

ஒரே நாளில் 38 சதவீத நேரத்தை இது உணவு தேடுதலில் கழிக்கிறது. 24 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீருக்குள் மூழ்கி இது உணவினை தேடுகிறது.

இது தண்ணீரில் உள்ள சிறுபூச்சிகள், லார்வாக்கள், சிறுநீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றை உணவாக்குகிறது.

 

ரூஃபஸ் ஹெட்டட் கிரவுண்ட் ரோலர் (Rufous Headed Ground Roller)

ரூஃபஸ் ஹெட்டட் கிரவுண்ட் ரோலர்
ரூஃபஸ் ஹெட்டட் கிரவுண்ட் ரோலர்

 

தரையில் வாழும் பறவையான ரூஃபஸ் ஹெட்டட் கிரவுண்ட் ரோலர் மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டது. இது 800-2000மீ உயரத்தில் உள்ள ஈரப்பதமான மழைக்காடுகளில் காணப்படுகிறது.

இது மரங்கள் அடர்ந்த ஈரப்பதமான வாழிடத்தை விரும்புகிறது. இது தேனீ, குளவி, வண்ணத்துப்பூச்சிகள், லார்வாக்கள், சிறுபூச்சிகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது.

இப்பறவை கத்தும்போது அதனுடைய வாலானாது ஆடிக் கொண்டே இருக்கும். தரையில் சுறுசுறுப்பாக இயங்கும் இது, அரிதாகவே பறக்கும்.

 

மடகாஸ்கன் மீன்பிடி கழுகு (Madgascan Fish Eagle)

மடகாஸ்கன் மீன்பிடி கழுகு
மடகாஸ்கன் மீன்பிடி கழுகு

 

மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்ட மடகாஸ்கன் மீன்பிடி கழுகு, இங்கு காணப்படும் வேட்டையாடும் பறவைகளில் பெரியது. இது தீவுகள், ஆற்று கழிமுகங்கள், சதுப்புநிலக்காடுகள், நன்னீர் நிலைகள், ஆறுகள் ஆகிய இடங்களில் வசிக்கிறது.

இது மீனையே பிரத்தியோக உணவாகக் கொள்கிறது. மரங்களில் அமர்ந்து தண்ணீரைக் கவனித்து, வெளியே வரும் மீன்களைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மரங்களில் அமர்ந்து மீனை உண்ணுகிறது.

உள்நாட்டில் வசிக்கும் மீனவர்கள் இதனைப் போட்டியாகக் கருதுவதால், இது அதிகளவு வேட்டையாடப்பட்டு அருகிவரும் இனங்களில் ஒன்றாகி உள்ளது.

 

மெல்லரின் வாத்து (Mellers Duck)

மெல்லரின் வாத்து
மெல்லரின் வாத்து

 

மெல்லரின் வாத்து கிழக்கு மடகாஸ்கரை தாயகமாகக் கொண்டது. தூவரவியல் அறிஞரான சார்லஸ் ஜோம்ஸ் மெல்லர் என்பவரின் பெயரால் இது மெல்லரின் வாத்து என்று அழைக்கப்படுகிறது.

இதனுடைய உடலானது அடர் பழுப்பு நிறத்திலும், இறக்கைகளின் பின்பக்கம் ஆலிவ் பச்சை வண்ணத்தில் இறகுகுள் வெள்ளைநிறக் கோடுகளால் அடையாளப்படுத்தப்படும்.

இதனுடைய கால்கள் மற்றும் பாதங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். இது நீரின் மேற்பரப்பில் உள்ள உணவினை உண்ணுகிறது.

 

மடகாஸ்கர் லவ் பேர்ட் (Madagascar Love Bird)

மடகாஸ்கர் லவ் பேர்ட்
மடகாஸ்கர் லவ் பேர்ட்

 

மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்ட மடகாஸ்கர் லவ் பேர்ட் ஆப்பிரிக்கண்டத்தில் காணப்படும் ஒரே லவ் பேர்ட் இனமாகும்.

லவ் பேர்ட் இனங்களில் மிகவும் சிறியதான இது பச்சை வண்ணத்தில் இருக்கும்.

இப்பறவையில் ஆணின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதி வெளிர் சாம்பல் வண்ணத்திலும், உடலின் மற்ற பகுதிகள் பச்சை வண்ணத்திலும் இருக்கிறது.

இப்பறவையின் பெண்ணானது உடல் முழுவதும் பச்சை வண்ணத்தைக் கொண்டிருக்கும். இது சிறுபழங்கள், சிறுபுற்களின் விதைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது.

 

மடகாஸ்கர் டாப் 10 பறவைகள் பற்றி அறிந்து கொண்டீர்களா? மடகாஸ்கர் பறவைகள் பலவண்ணங்களில் கண்ணை கவரும் விதமாக உள்ளன.

இங்குள்ள பறவைகள் அளவில் சிறியதாகவும், தனித்துவமான பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளன.

இயற்கையைப் புரிந்து கொள்வோம்!

இயற்கையைப் பாதுகாப்போம்!

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.