டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி?

டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி என்பது ஒரு நாடோடிக் கதை.

டிசம்பர் மாதத்தில் வைலட், இளம்சிவப்பு, வெள்ளை, வெள்ளையில் வைலட் நிறவரிகள் என பலவண்ணங்களில் பூக்கள் பூக்கின்றன.

இப்பூக்கள் பெண்கள் பலராலும் விரும்பி தலையில் சூடிக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்பூக்கள் மணத்தினைக் கொண்டிருப்பதில்லை.

டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி என்பதனைத் தெரிந்து கொள்ள  இக்கதையைப் படியுங்கள்.

முன்னொரு காலத்தில் ஹெலன் என்ற ஏழை சிறுமி ஒருத்தி தன்னுடைய தந்தை, மாற்றாந்தாய் மற்றும் அவளுடைய பிள்ளைகளுடன் மலைக்கிராமத்தில் வசித்து வந்தாள்.

ஹெலன் மிகவும் அன்பானவள். அணில் ஒன்று அவளுக்கு நல்ல தோழியாக இருந்தது.

சிறிது காலத்தில் தந்தை மறையவே, மாற்றாந்தாய் ஹெலனை மிகவும் கொடுமைப்படுத்தினாள். ஹெலனை வீட்டை விட்டு விரட்டத் திட்டமிட்டாள்.

குளிர் நிறைந்த டிசம்பர் மாதத்தில் ஒருநாள் மாற்றாந்தாய் ஹெலனிடம் “ஹெலன், நீ காட்டிற்குள் சென்று உன் தங்கைக்காக பூக்களைப் பறித்துக் கொண்டு வா” என்று கூறினாள்.

“அம்மா, இப்போதோ பனிகாலம், மிகவும் குளிராக இருக்கிறது. காட்டிற்குள் இப்போது பூக்கள் ஏதும் இருக்காது. நான் காட்டிற்குள் சென்றாலும் பூக்களைக் கொண்டு வரஇயலாது” என்றாள்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ இப்போதே காட்டிற்குள் சென்று பூக்களைக் கொண்டு வா. அப்போதுதான் நீ இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியும். ” என்று கூறினாள்.

ஹெலனும் செய்வதறியாது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த அணில் “ஹெலன், நீ கவலைப்படாதே. நாம் இருவரும் இப்போதே காட்டிற்குள் செல்லுவோம். அங்கே மாதங்களின் கடவுளர்களை சந்தித்து நமக்கு உதவி செய்யுமாறு கேட்போம்” என்றது.

“மாதங்களின் கடவுளர்களா?. அவர்கள் யார்? அவர்கள் நமக்கு எப்படி உதவுவார்கள்?”  என்று கேட்டாள்.

அதற்கு அணில் “ஹெலன், மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் கடவுளர் ஒவ்வொருவர் உண்டு. எந்த மாதமோ அதற்குரிய கடவுள் அரசராக இருப்பார். மற்றவர்கள் அவர்களின் குடிமக்களாகச் செயல்படுவர்.

ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உதாரணமாக ஏப்ரல் மாதக் கடவுளே, வசந்தத்தின் அதிபதி. அவரே பூக்களைப் பூக்கச் செய்வார்.

அக்டோபர் மாதக் கடவுள் இடியையும் மின்னலையும் உருவாக்கி நமக்கு மழையைத் தருவார் என்று என்னுடைய மூதாதையர்கள் கூறிச் சென்றுள்ளனர்.”

“அப்படியா?, கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது. சரி அவர்கள் எங்கே இருப்பார்கள்? அவர்களை நாம் எப்படி சந்திப்பது?'” என்று ஹெலன் கேட்டாள்.

“அவர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பூமியில் உள்ள இம்மலையடிவாரக் காட்டிற்கு வருவர். காட்டின் மத்திக்குச் சென்றால் நாம் அவர்களைச் சந்திக்கலாம்.

அவர்கள் நல்லவர்களின் கண்களுக்கு புலப்படுவர் என்று பாட்டி சொல்லுவார். இன்றைக்கு பௌர்ணமியாதலால் நாம் அவர்களை சென்று சந்திக்க முடியுமா என்று பார்ப்போம்” என்று கூறியது அணில்.

அணிலும், ஹெலனும் காட்டிற்குள் சென்றனர். காட்டின் மையப்பகுதியை அடைந்தனர்.

டிசம்பர் பூக்கள்

அங்கே ஒருவர் தலையில் கிரீடத்துடன் அரியணையில் கையில் கோலுடன் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் பதினோரு பேர் தனித்தனியே ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் உலக மக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ஹெலனைப் பற்றியும் அவளுக்கு நிகழும் கொடுமைகள் பற்றியும் பேசினர்.

அவர்களின் பேச்சைக் கவனித்த ஹெலனும் அணிலும் அவர்களின் முன்னால் போய் நின்றனர்.

அவ்விருவரையும் பார்த்ததும் மாதங்களின் கடவுளர்கள்  “நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று ஒருமித்த குரலில் கேட்டனர்.

அணில் அவர்களை வணங்கி தன்னுடைய முன்னோர்களின் கூற்றுப்படி, மாதங்களின் கடவுளர்களைச் சந்திக்க, தான்தான் ஹெலனை அங்கு அழைத்து வந்ததாகக் கூறியது.

ஹெலனும் “பூக்களைக் கொண்டு வந்தால்தான் வீட்டிற்குள் வரமுடியும் என்று அம்மா கூறிவிட்டார். இங்கோ முழுவதும் பனி மூடியுள்ளது. பூக்களுக்கு நான் என்ன செய்வேன்?. நீங்கள் எனக்கு உதவி செய்வீர்களா?” என்று கேட்டாள்.

அரியணையில் அமர்ந்திருந்த டிசம்பர்மாதக் கடவுள் “குழந்தாய், என்னால் பனிக்கட்டிகளை மட்டுமே உருவாக்க முடியும். பூக்களை உருவாக்க முடியாது.

வசந்தகாலக் கடவுளான ஏப்ரல் மாதக் கடவுள் சம்மதித்தால் என்னுடைய அரியணையில் ஏறி பூக்களை உருவாக்கலாம். நீ அவரின் அனுமதியைக் கேள்.” என்றார்.

ஹெலனும் ஏப்ரல்மாதக் கடவுளிடம் வேண்டவே அவரும் “ஹெலன் உன்னுடைய கஷ்டத்தைப் போக்க நான் அரியணையில் அமர்ந்து என்னுடைய கோலினால் அழகான பூக்களை உருவாக்குகிறேன்.

ஆனால் வசந்தகால பூக்களுக்கு மட்டுமே என்னால் மணத்தினை அளிக்க இயலும். பருவம் மாறி பூக்கும் இப்பூக்களுக்கு மணத்தினை அளிக்க இயலாது.” என்று கூறினார்.

ஹெலனும் “சரி” என்று ஒப்புக்கொண்டாள்.

ஏப்ரல்மாதக் கடவுளும் அரியணையில் அமர்ந்து மந்திரக் கோலை அசைத்து காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அழகான மணமற்ற பூக்களை உருவாக்கினார்.

டிசம்பர்மாதக் கடவுளின் பெருந்தன்மையால் கிடைத்ததால் இப்பூக்கள் டிசம்பர் பூக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஹெலனும் அதனைப் பறித்துக் கொண்டு அணிலுடன் வீடு திரும்பினாள்.

ஹெலனின் மாற்றாந்தாய் “பனிகாலத்தில் எப்படி இவளுக்கு கிடைத்தன?” என்று ஆச்சர்யப்பட்டாள். ஹெலன் நடந்தவைகளைக் கூறினாள்.

பூக்களின் அழகில் மயங்கிய மாற்றாந்தாய் ஹெலனை அவளுடன் சேர்த்துக் கொண்டாள்.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதை டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி? என்ற இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.