மக்களவைத் தேர்தலுக்கு
நாளுந்தான் குறிச்சாச்சு
தமிழ்நாட்டில் தேர்தல் நாள்
ஏப்ரல் -19 என்றாச்சு!
தேர்தல் களம் தமிழகத்தில்
உச்சக் கொதிநிலை ஆயாச்சு
குதிரை பேரக் கோடிகளில்
கூட்டணிகள் அமஞ்சாச்சு
கொள்கையோ லட்சியமோ
எதுவொன்றும் கிடையாது!
ஓட்டளிக்க நம்மையெல்லாம்
கூவிக்கூவி அழைக்கிறாங்க
கும்பிடுகள் போட்டுப் போட்டு
பொய்களை அள்ளி வீசுறாங்க!
நூறுநூறு வாக்குறுதி
கூசாமல் கொடுக்குறாங்க
கூடிநிற்கும் மக்களையே
வாய்பிளக்க வைக்கிறாங்க!
‘நீட்’ பிரச்சனையை
நீர்த்துப் போக விட்டாச்சு
‘தண்ணீர்’ப் பிரச்சனைக்கு
தண்ணிதான் காட்டியாச்சு
‘விவசாயப்’ பிரர்சனைதான்
மண்மூடிப் போயாச்சு
நிறைவேற்றா வாக்குறுதி
நிலுவையில் பல நிக்கயிலே
இன்னுமென்ன வாக்குறுதி?
இளிச்சவாயி மக்களென்றா?
தினமொரு நாடகம்தான்
மேடைதோறும் நடக்குது பார்
கடைகளிலே பொன்னாடை
ஏகத்துக்கும் விற்குது பார்
பதவிக்கும் பணத்துக்கும்
ஆலாய்த்தான் பறக்குறாங்க
பத்துத் தலைமுறைக்குச்
சொத்தைத்தான் சேக்குறாங்க!
டாஸ்மாக் கடைகள் தோறும்
கூடிக்குடிக்கும் குடிமகன்கள்
கஞ்சா என்றும் ட்ரக்ஸென்றும்
சீரழியும் மாணவர்கள்
கேட்க இங்கே நாதியில்லை
போதைப் பொருள்தனை
ஒழித்திடவே யாருமில்லையே
அதுதரும் பலகோடிப்
பணமுமிங்கே பலபேரின்
கைமாறிப் போகுதம்மா
ஆலவட்டம் போடுதம்மா
பேயாட்டம் ஆடுதம்மா
சேருமிடம் சேருதம்மா
போதைப்பொருள்
வணிகம்தான்
அமோகமாய் நடக்குதம்மா
லஞ்சம்தான் நாட்டினிலே
பஞ்சமின்றி ஆனதம்மா
கொள்ளைதான் கட்சிகளின்
கொள்கையாகிப் போனதம்மா!
அரசியல் கோஷ்டியெல்லாம்
எதிரெதிர் மேடைகளில்
நாகூசும் வார்த்தைகளால்
நாரடித்துக்கொள்ளுறாங்க
மக்களை நம்பவைக்க
நாடகங்கள் போடுறாங்க
மேடைவிட்டு இறங்கிவிட்டால்
முகமூடி அகற்றிவிட்டு
பங்காளி அங்காளி போல்
கட்டியணைத்துக் கொள்ளுறாங்க
கர்மவீரர் சொன்னது போல்
கட்சிகள் பலவுமிங்கே (ஒரே)
குட்டையில் ஊறும் மட்டைகளே!
தேர்தல் நெருங்கி விட்டால்
தேடிவரும் இனாம் பல
பிரியாணிக்கும்
குவார்ட்டருக்கும்
கொலுசுக்கும் சேலைக்கும்
சில ஆயிரம் பணத்துக்கும்
பல்லிளிக்கும் வாக்காளர்
தன் மதிப்புமிகு வாக்குதனை
குள்ளநரிக் கூட்டத்துக்கு
சின்னம் பார்த்து அளித்து விட்டு
விரலில் வைக்கும்
மையோடும்
காதில் சுற்றும் பூவோடும்
விலைவாசி உயர்வோடும்
வறுமையின் உறவோடும்
அடுத்த ஐந்தாண்டு
இன்னல்கள் பலவோடு
இல்லறம்தான் நடத்திவிட்டு
அடுத்த தேர்தலுக்கும்
கொள்ளையடித்த கும்பல்கள்
ஏமாற்ற வரும் போது
மீண்டும் ஏமாறக்
காத்திருக்கும் வாக்காளர்!
மீள வழியில்லை
மீட்பவர் யாருமில்லை
மேலும் சொல்லச் சொல்ல
வார்த்தைகள் கூராகும்
வெறுப்பு உச்சம் தொடும்
போதுமென்று முடிக்கின்றேன்!
எந்த ஒரு கட்சியிலும்
நானில்லை! நானில்லை!!

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்