தப்பு

தப்பு – சிறுகதை

நோக்கெல்லாம் அந்த நவ்வாப் பாட்டிய பத்தி  இது வரைக்கும் நான் சொன்னதில்லைல. இப்ப சொல்றேன் கேளுங்கோ.

நான், ராமு, கிச்சா- நாங்க மூணு பேரும் தான் எப்பவும் ஒண்ணா இருப்போம். அவா ரெண்டு பேரும் எங்க அக்ரஹாரத்தில தான் இருக்கா.

நாங்க மூணு பேரும் ஸ்கூல்ல கூட ஒரே க்ளாஸ் தான்னா பாத்துக்கோங்களேன். ஸ்கூலுக்கு போறச்சே ஒண்ணா தான் போவோம். திரும்ப ஆத்துக்கு வர்றச்சேயும் ஒண்ணா தான் வருவோம்.

அப்டி நாங்க ஸ்கூல்ல படிக்கிரச்சே எப்படா ஜூலை, ஆகஸ்ட் வரும்னு காத்துண்டு இருப்போம். அப்ப தானே நாங்க அந்த நவ்வாப் பாட்டிய பார்க்க முடியும்.

மத்த மாசத்துலலாம் அவள ஸ்கூல் கிட்ட பார்க்க முடியாது. கிச்சா தான் சொல்லுவான், மத்த நாளெல்லாம் அவ, அவா தெருவில விளக்குமாறு விப்பான்னு.

நீ பாத்துருக்கியாடா கிச்சான்னு கேட்டதுக்கு கூட அவன் அன்னைக்கு ஏதோ சொன்னானே, ” இல்லடா, அவா தெருல இருந்து நம்ம ஸ்கூலுக்கு வருவாளே ஆயா….. அவ பேசிட்ருந்தாடா” அப்டின்னு.

அதானே….. அவா தெருக்கெல்லாம் போனா அவன் தோப்பனார் அவன தடிய வச்சு பிச்சுட மாட்டார்.

அவன் தோப்பனார விடுங்கோ, விஷயம் தெரிஞ்சா அவனோட பாட்டி அவ்ளோதான்…… ஆச்சாரம் பத்தி பெரிய பிரசங்கமே பண்ணிடுவா.

அவாளுக்கு எங்க அக்ரஹாரத்தில திண்ண மாமின்னு பேரு. திண்ணைல உக்காந்துண்டு அவா பண்ற பிரச்சாரம் இருக்கே…… பெருமாளே அவளுக்கு எல்லாம் எழுதிக் கொடுத்தது போல பேசுவா.

அவள விடுங்கோ…. நான் என்ன சொல்லின்டு இருந்தேன்?; ஆஆஆ………ன், ஞாபகம் வந்துடுத்து. அந்த நவ்வாப் பாட்டி! அவ பாக்குறதுக்கு எப்டி இருப்பா தெரியுமோ?

நோக்கெப்டி தெரிய போறது? அவள தான் நீங்கள்லாம் பார்த்ததில்லையே…. நான் சொல்றேன்….

அவ பாக்க நன்னா கருப்பா இருப்பா….. வயசாயிட்த்தோனோ அவளுக்கு….. அதனால தோல் எல்லாம் சுருக்கமா இருக்கும்….

நடக்குறச்சே அவளுக்கு கூன் விழுந்தது நன்னா தெரியும்…. அவளுக்கு இருக்க கொஞ்ச முடிய வச்சு ஒரு தினுசா கொண்ட போட்டுண்டு இருப்பா…

அவ ரெண்டே புடவைய தான் மாத்தி மாத்தி கட்டிண்டு வருவா….. ரெண்டும் பழைய கந்தலாட்டம்னா இருக்கு, எப்டி இதையே மாத்தி மாத்தி கட்ரான்னு ராமுவும் நானும் கூட பேசிட்ருந்தோம்.

அன்னைக்கு ….. அவ கிட்ட ரெண்டு கூட இருக்கும்…. ஒன்ன இடுப்புல வச்சிண்டு, இன்னோன்ன கைலே தூக்கிண்டு வருவா….. கூட நெறய பழம் வச்சுருப்பா……….

அது மட்டுமா….. கூடவே ரெண்டு உழக்கும் வச்சிருப்பா….. ஒன்னு சின்னதாவும் இன்னொன்னு பெருசாவும் இருக்கும்….. 1 ரூபாய்க்கு கேட்டா சின்ன உழக்கு, 5 ரூபாய்க்கு கேட்டா பெரிய உழக்கு.

இதையும் கேளுங்கோ…..

அவா தெருலாம் தாண்டி ஒரு காடு இருக்குன்னும், அந்த காட்ல தான் போய் அவ இந்த பழம்லாம் கொண்டு வர்றான்னும் கூட சொல்லின்டுருப்பா.

எங்க மூணு பேருக்கும் அவ கிட்ட நவ்வாப்பழம் வாங்கி சாப்டமும்னு ஆச. கிச்சா வீட்ட பத்தி தான் முன்னாடியே சொன்னேனே…..

எங்க ரெண்டு பேர் ஆத்துல இருக்கவா மட்டும் விட்ருவாளா…. அக்ரஹாரத்துல பிரளயமே உண்டாக்கிடுவா…. ஆனா ஆச எங்கள விடல; பாத்துகோங்கோ….

அப்டி தான் ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு வெளில வர்றச்சே கிச்சா எங்க ரெண்டு பேரையும் பாத்து, “இன்னைக்கு அந்த நவ்வாப் பாட்டிட்ட பழம் வாங்குறோம்டா”ன்னு சொன்னான்.

“எப்டி டா காசில்லாம வாங்குவ”ன்னு நான் கேட்க, ராமு உடனே,

“நோக்கு தெரியாதா, நம்ம கிச்சா, கேட்காத அவ காதுக்கு காயத்ரி மந்திரம் சொல்லிக் குடுக்கப் போறான். அதுக்கு குரு தட்சணையா அவ நமக்கு பழம் தரப்போறா”ன்னு சொல்லிட்டு அவன் சிரிக்க, எனக்கும் குபீர்ன்னு சிரிப்பு வந்துடுத்து.

“டேய் மண்டுகளா, காலைல இருந்து உங்க கிட்ட ஒன்னு சொல்றேன், சொல்றேன்னு சொன்னேனோ இல்லையோ, இங்க பாருங்க” அப்டின்னு சொல்லிட்டு பாக்கெட்ல இருந்து 5 ரூபாய எடுத்து கைல வச்சுண்டு எங்கள பாத்தான்.

ராமு உடனே “ஏதடா காசு?” ன்னு கேக்க, அவன், ‘ஸ்ரீரங்கத்துல இருக்க அத்திம்பேர், நேத்து எங்க ஆத்துக்கு வந்துருந்தா, அவா நேக்கு தந்தா’ன்னு சொல்ல நேக்கும் ராமுக்கும் அப்ப தான் விஷயமே புரிஞ்சது.

கைல காசு மட்டும் இருந்தா போருமா, தைரியம் வேணாமா?.நாங்க அவ கிட்ட பழம் வாங்கி சாபட்றத அக்ரஹாரத்தில இருக்க யாராச்சும் ஒருத்தர் பாத்துட்டாலும் எங்க கதி அதோ கதிதான்.

மூணு பேர்ல யாரு போய் வாங்குறதுன்னு வாக்குவாதம் பண்ணிண்டே இருந்தோம்.

“இப்டியே பேசிட்ருந்தா நாழி ஆயிடும், அதோட கூடையும் காலி ஆயிடும்”ன்னு நான் சொன்னதும், கிச்சா “வாங்கடா மூணு பேரும் ஒண்ணா போய் வாங்கலாம். இதுல தப்பு என்ன இருக்கு?”ன்னு சொன்னான்.

ராமு ஒத்துக்கவே மாட்டெனுட்டான். அவனுக்கு சமாதானம் சொல்லி அழச்சுண்டு போறதுகுள்ளே பிராணன் போயிடுத்து எங்க ரெண்டு பேருக்கும்.

ஒரு வழியா நாங்க மூணு பேரும் ஒண்ணா அவ கிட்ட போய் கிச்சாவோட அஞ்சு ரூபாய நீட்ட, அவ எங்கள ஏற இறங்க பார்த்தா பாருங்கோ…..

எங்க மூணு பேருக்கும் ஒரு நிமிஷம் வேர்த்து கொட்டிட்த்து. என்ன நெனச்சாலோ …… அது அந்த பகவானுக்கு தான் வெளிச்சம்.

செத்த நேரம் அப்படியே பாத்துண்டே இருந்தவ, டக்குன்னு பெரிய உழக்குல அளந்து கொடுத்தா. ரெண்டு பழம் அதிகமாவே போட்டு கொடுத்தா.

” ஆத்துக்கு போறதுகுள்ள சாப்ட்ரணும்ன்னு” கிச்சா எச்சரிச்சான்.

“டேய் பழம்லாம் நன்னா பெருசா ருசியா இருக்குல்ல”ன்னு ராமு சிரிச்சுண்டே சொன்னான்.

நேக்கு தெனமும் சாப்டனும்னு ஆசையே வந்துடுத்து. நன்னா சாப்ட்டு வாயெல்லாம் தொடச்சுண்டு எதுவும் தெரியாத மாதிரி ஆத்துக்கு மூணு பேரும் போனோம்.

நான் ஆத்துகுள்ள நுழையுரச்சே என் தோப்பனார், ” டேய் ரங்கா”ன்னு என்ன கூப்ட, நேக்கு புரிஞ்சுடுத்து.

அன்னைக்கு நைட் அழுதுண்டே தான் தூங்குனேன்.

அவா கிட்ட திருடலே, அடுத்தவாள மிரட்டி பிடிங்கி எதுவும் சாப்டலே, கிச்சா காசுலே வாங்கினத நாங்க மூணு பேரும் சாப்ட்டோம், அதுவும் அவனா கொடுத்தது தான். இதுலே என்ன தப்பு?

சொல்லுங்கோ…..

ஞாழல், புதுக்கோட்டை

 

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை குழந்தையின் கேள்வி மூலம் தப்பு சிறுகதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.