உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
மஞ்சள்மணம் கமகமக்கும் எங்கும் – புது
மாவிலையில் தோரணமும் தொங்கும் – எவர்
நெஞ்சை அள்ளும் நெய்யின் வாசம்
நேர்த்தியாக வீசும் வீசும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
செங்கரும்பு நாவினிக்கும் நேரம் – ஒன்று
சேர்ந்த சொந்தம் கதை கதையாய் கூறும் – ஊதும்
சங்கொலியோ விண்ணை முட்டும்
சந்தோசம் கையைத் தட்டும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
பண்பாட்டை பறைசாற்றும் குன்றாய் – அது
பகைமை ஓட்டி புதுமை காட்டும் நன்றாய் – நல்
தென்னாட்டு திருநாளாம்
தேசம் போற்றும் பெருநாளாம்
பொங்கல் – தைப் – பொங்கல்!
பரிசம் போட நல்லதொரு மாதம் – தை
பக்கம் வந்து மங்களத்தை ஓதும் – பெரும்
விரிசல் கண்ட உறவை கூட
விருந்து உண்ண வைத்து விடும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
சல்லிக்கட்டில் காளை எல்லாம் துள்ளும் – நல்ல
சங்க தமிழ் வீரம் அதைச் சொல்லும் – எழில்
புள்ளி மயில் போல பெண்கள்
புன்முறுவல் பூத்து வரும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
தமிழர்களின் மாண்புதனை சொல்லும் – தமிழ்
தலை நிமிர்ந்து உலகை அது வெல்லும் – அந்தத்
தமிழர்களின் தொன்மை தன்னை
மென்மையாக மொழிந்து விடும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
தை வந்தால் வழி வந்தே தீரும் – இந்த
தாரணையே உன் புகழைப் பாடும் – இங்கே
மெய் ஓங்கி நடமிட்டால்
பொய் மறைய செய்திடுமே
பொங்கல் – தைப் – பொங்கல்!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250