தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்

தமிழ்ச்சுரங்கம் எனும் பெயருக்கேற்ப மாபெரும் அறிவுச் சுரங்கமாகவும், ஆற்றல் தரும் சுரங்கமாகவும், ஊற்றாய் ஊறும் சிந்தனைகளைத் தரும் சிந்தனைச் சுரங்கமாகவும், சேகரத்தின் முழுமையை உணர்த்தும் முழுமையின் சேகரமாகவும் அமைந்திருப்பதை தமிழ்ச்சுரங்கம்.காம் தளத்தைப் படிப்பவர் அனைவரும் உணரலாம்.

சுரங்கம் என்றால் தமிழெனும் மலையைத் தேடச் செல்லும் பாதுகாப்பான, அழகான சுரங்கம் இதுவாகும்.

வாருங்கள் தளத்தைக் குறித்துக் காண்போம்.

 

இத்தளத்தில் முதன்மையான ஒன்றாகக் கருதுவது இலக்கியங்கள் எனும் தலைப்பாகும்.

இத்தலைப்பின் கீழ், நம் தமிழ்மொழியின் ஆழமும், அகலமும் மிகப்பெரும் பாரம்பரியமும், தொன்மையும் மிக்கதான சங்க இலக்கியங்கள் எனும் உள்தலைப்பு உள்ளது.

அதனுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய தlலைப்புகளில் உள்ள அனைத்துப் பாடல்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.

இது ஒரு முக்கியமான தொகுப்பாகும். அனைத்துப் பாடல்களையும் ஒருங்கே ஒரு இடத்தில் கிடைப்பதற்கு வழி செய்தமை மிகப் பெரும் சிறப்பாகும். பல இலக்கியங்களுக்குப் பொருள் தந்திருப்பது அதைவிட சிறப்பாகும்.

காப்பிய இலக்கியங்கள் எனும் பெரும் பகுதியில் ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

சமய இலக்கியங்கள் எனும் பகுதியில் பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், சைவ சித்தாந்த நூல்கள் ஆகிய அனைத்தும் போடப்பட்டுள்ளன.

பக்தி இலக்கியங்களின் அனைத்துப் பாடல்களும் ஒரே இடத்தில் இங்கிருப்பது தேடுபவர்களுக்கு இதொரு சொர்க்கப் பகுதியாகும்.

 

தமிழ் உலகம் எனும் தலைப்பில் தமிழ், தமிழர் வரலாறு, தமிழக மாவட்டங்கள், தமிழ்ப் பெயர்கள், தமிழக சிறப்பு, அம்சங்கள், தமிழர் வாழும் நாடுகள், இலக்கிய நூல்களின் பட்டியல் எனும் தலைப்புகளில் தமிழகம் குறித்தான அனைத்து விதமான செய்திகளும் தரவுகளும் தொகுத்து இங்கு தரப்பட்டுள்ளன.

இத்தளத்தின் அளப்பரிய பெருமையினை இப்பகுதி வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தமிழகம் சார்ந்த செய்திகளைத் தேடுவோர் இப்பகுதியில், அனைத்துச் செய்திகளையும் தெரிந்து கொள்ளும் விதமாக இங்கு செய்திகள் போடப்பட்டுள்ளன.

 

அறிவியல் என்னும் தலைப்பில் வானவியல் பகுதி, கிரகங்களின் மற்றும் துணைக் கிரகங்களின் தன்மையினை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

ஒளியியல் எனும் தலைப்பின் கீழ் மாயப் படங்கள் மற்றும் 3d படங்கள் எனும் தலைப்புகளில் அறிவியல் சார்ந்த மாயப் பிம்பங்களைக் குறித்தான விளையாட்டுகளும் செய்திகளும் கணித அறிவும் போடப்பட்டுள்ளன.

பொது அறிவு எனும் தலைப்பின் கீழ், பொதுஅறிவுக் கட்டுரைகள், நீதிக் கதைகள், எனும் பகுதிக்குள் தெனாலி ராமன் கதைகள், முல்லாவின் கதைகள் போன்றவை மிகப்பெரிய அளவில் தொகுக்கப்பட்டு போடப்பட்டுள்ளன.

பொதுஅறிவுக் கட்டுரைகள் பல்வேறு பொதுப் போட்டிகளுக்குத் தயாராகும் அனைவருக்கும் மிகப் பயனுள்ள பகுதியாக இருக்கும்.

விளையாட்டுகள் எனும் சிறு தலைப்பில் மனதை அறியும் கருவி. சினிமாக் கட்டம் போன்ற விளையாட்டுக்கள் பதி விடப்பட்டுள்ளன.

 

ஆன்மீகம் எனும் பெரும் தலைப்பில் ஆன்மீக நூல்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை இந்துமதம் சார்பாகவும். திருவிவிலியம் பகுதியில் பழைய ஏற்பாடும் மற்றும் புதிய ஏற்பாடும் கிறிஸ்துவ மதத்தின் நூல்களாகவும் அங்கு சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்மீகக் கட்டுரைகள், தந்திர-குண்டலினி யோகம் போன்றவை குறித்த விளக்கங்கள், மந்திரங்கள் குறித்த கட்டுரைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆன்மீகத்தைத் தேடுபவர்களுக்கு இப்பகுதியானது, அதிகமான செய்திகளைத் தருபவையாக இருக்கின்றன.

ஜோதிடம் எனும் பகுதியில், வேத ஜோதிடம், ஆருடங்கள், எண் ஜோதிடம், மற்றும் ஜோதிட குறிப்புகள், ஜோதிடம் சார்பான கட்டுரைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவம் என்னும் பெரும் தலைப்பில் பொது மருத்துவம் என்பவற்றில் இயற்கை மருத்துவக் கட்டுரைகள், சித்த மருத்துவக் கட்டுரைகள், பிற மருத்துவக் கட்டுரைகள் எனப் பலவேறு கட்டுரைகள் மருத்துவம் குறித்தான செய்திகளைக் கூறுவனவாக இருக்கின்றன.

இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம்மிக்க சித்த வைத்திய முறைகளை அறிந்து கொள்ள முடியும். பொது மருத்துவம் குறித்த நிறைய கட்டுரைகள் இங்கு காணப்படுகின்றன.

பெண்கள் பகுதி என்னும் பெரும் தலைப்பில் பெண்கள் சார்பான மருத்துவக் கட்டுரைகள், அழகுக் கட்டுரைகள், சமையல் செய்கின்ற முறைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், கோலங்கள், மருதாணி போன்ற பெண்களுக்கு விருப்பமான செய்திகள் கட்டுரைகளாகப் பட விளக்கங்களாக இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

நகைச்சுவை எனும் தனிப் பகுதியும், அதில் சிரிப்புகள், கடி சிரிப்புகள், சர்தார்ஜி சிரிப்புகள், முட்டாள் சிரிப்புகள், ராமு-சோமு சிரிப்புகள், அமலா-விமலா சிரிப்புகள் ஆகியவை பதிவிடப்பட்டுள்ளன.

 

கலை உலகம் எனும் பெரும் தலைப்பில் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த பல கட்டுரைகள் உள்ளன.

தமிழகத்திரையரங்குகள் பட்டியலும், திரைப்படச் செய்திகள் குறித்த கட்டுரைகளும், திரைக்கதை மற்றும் வசனம் போன்ற செய்திகளும், தமிழிசை இசைக்கருவிகள் குறித்த கட்டுரைகளும், விளக்கங்களும் இப்பகுதியில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

திரைப்படம் குறித்தான செய்திகளைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சுரங்கமாகக் காணப்படுகிறது.

புதுக்கவிதைகள் எனும் பகுதியில் பல கவிஞர்களின் புதுக்கவிதைகள் அணி செய்கின்றன. அதேபோல், மரபுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் என இக்கால இலக்கியத்தின் தன்மைகள் தனித்தனி தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹைக்கூ பகுதியில் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளன. கட்டுரைகள் எனும் பகுதியில் பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன. நாட்டுப்புறப்பாடல்கள் எனும் பகுதியின் நாட்டுப்புற இலக்கிய பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கலைக்களஞ்சியம், வரைபடங்கள் போன்ற தலைப்புகள் தற்பொழுது தயார் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேடுபொறி எனும் தலைப்பின் கீழ் தமிழ்த்தேடல் மூலமாகத் தமிழ் சொற்கள் அனைத்திற்கும் பொருள் விளக்கம் தரும் பகுதி அமைந்திருக்கிறது.

அதேபோல் அகராதி என்னும் தலைப்பின் கீழ் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் பொருள் கூறும் பகுதியும் அமைந்திருக்கிறது.

இதன்மூலம் இளைஞர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ச் சொற்களையும் தமிழ்ச் சொற்களிலிருந்து தமிழ்ச் சொற்களையும் அறிந்து தெரிந்து தமிழ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு இப்பகுதிகள் உதவியாக இருக்கின்றன.

வானொலி பகுதியில் இணைய வானொலிச் சேவைகள் அளிக்கப்பட்டு உள்ளன.

 

தமிழ்ச்சுரங்கம் எனும் இத்தளம் தேடுபவர்களுக்குத் தேடுகிற பொருளையும், நாடுபவர்களுக்கு நாடுகிற அறிவுச் செல்வத்தையும் வழங்கும் தன்மையான தளமாகும்.

சுரங்கம் எனும் பெயருக்கு ஏற்பத் தமிழ்சுரங்கம் என்னும் இத்தளம் எல்லாவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிற ஆழமான அகலமான சிறப்புப் பொருந்திய தளமாக விளங்குகிறது.

இலக்கியங்கள், தமிழர் பண்பாடு,  தமிழர் சிறப்பு, பொது அறிவுச் சிந்தனைகள், ஆன்மீகம் குறித்தான விளக்கங்கள், ஜோதிடம், மருத்துவம், சமையல், நகைச்சுவை, திரைப்படம் என எல்லாத் தளங்களையும் தொடுகிறது.

அவற்றில் மிகுதியான தரவுகளையும், செய்திகளையும், கட்டுரைகளையும் தந்திருக்கிற ஒரு மாபெரும் இலக்கியச் சமூக விழிப்புணர்வு அறிவுத்தேடலான தளமாக தமிழ்சுரங்கம் எனும் இத்தளம் விளங்குகிறது.

 

தமிழ்ச்சுரங்கம் எனும் இத்தளத்தினைத் தனியொரு நபராக இருந்து உருவாக்கிய ஒருவர் திரு கே.ஆர்.சக்திவேல் ஆவார். அவரின் தமிழ்ப்பணி யாரும் செய்ய இயலா அரும்பணியாகும்.

கடும் உழைப்பால் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரைத் தமிழ் உலகம் என்றும் இதன் மூலம் மறவாது. அவரின் இணையதளம் குறித்து அவர் கூறுவதை இனி காணலாம்.

ஓர் இனத்தின் வளர்சியும், வாழ்வும் அந்த இனம் பேசுகின்ற மொழியைப் பொருத்தே அமைகிறது.

அதுபோல ஒரு மொழியின் வளர்சியானது அம்மொழியில் உருவாகும் இலக்கிய நூல்கள் மற்றும் அறிவியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயனுள்ள நூல்களைப் பொருத்தே அமையும்.

மேலும் ஒரு மொழி வளர்ச்சியடையும் போது அந்த இனமும் வளர்ச்சியடையும். ஒரு மொழியை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழியக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

தமிழ் இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தொன்மை ஆகியவை நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அடங்கியிருக்கிறது.

நம் தமிழினத்தை காலச்சூழலிலிருந்தும், அன்னியர் ஆத்திக்கத்திலிருந்தும் காப்பாற்ற கட்டாயம் நாம் ஒவ்வொருவரும் மொழி மற்றும் இன உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

நமது இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துவது ஒருபுறம் இருந்தாலும், நம் இனத்தின் இளைய தலைமுறையினருக்கு உணர்த்தி, அவர்களை பிற மொழியின் மேல் ஆர்வம் கொண்டு நம் மொழியை உதாசினப்படுத்துவதையும், தேவையற்ற இடங்களில் கூட, குறிப்பாக சொல்ல வேன்டுமானால் வீட்டில் கூட பிற மொழியைப் பயன் பயன்படுத்தும் அவலத்தையும் தடுக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது.

நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்ச்சுரங்கம்.காம் இணையதளம்.

மிகமுக்கியமான தமிழ் இணையதளங்களின் பட்டியலில், முன்னிலையில் உள்ள தளம் இதுவாகும். அதைப் பார்வையிட www.tamilsurangam.in ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

 

 

One Reply to “தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்”

Comments are closed.