தயிர் சாதம் பெரும்பாலோனோருக்குப் பிடித்த அருமையான உணவாகும்.
இது உடனடி உணவாகவும், குழந்தைகளுக்கு மதிய வேளை உணவாகவும், வெளியூர் பயணங்களுக்கு கொண்டு செல்லும் உணவாகவும் பயன்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கண்ணனுக்கு இது தயார் செய்யப்பட்டு படைக்கப்படுகிறது.
இது தனியாகவோ, ஏனைய கலவை சாதங்களான புளியோதரை சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் ஆகியவற்றுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது.
இனி எளிய வகையில் சுவையான தயிர் சாதம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
புளிக்காத தயிர் – ¾ கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
மிளகு – 1 ஸ்பூன்
கடுகு – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி – சிறிதளவு
தயிர் சாதம் செய்முறை
அரிசியை குழைய வேக வைத்து சாதமாக வடித்துக் கொள்ளவும்.
சாதத்தை சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அலசி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
தயிரில் தேவையான உப்பு, பெருங்காயப் பொடியை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும்.
அதனுடன் உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, மிளகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும் அடுப்பை அணைத்து அதில் உப்பு, பெருங்காயம் சேர்த்த தயிரை சேர்க்கவும்.
மசித்த சாதத்துடன் தாளித்த தயிரை சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.
சுவையான தயிர் சாதம் தயார்.
இதனுடன் மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் வைத்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மல்லி இலையை பொடியாக நறுக்கி தயிர் சாதத்துடன் சேர்க்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை ஆகியவற்றை, தயிர் சாதத்தை பரிமாறும் சமயத்தில் அதனுடன் சேர்த்து கிளறி பரிமாறலாம்.