நீ வாழ பிறரைக் கெடுக்காதே
என்று சொல்லி வளர்க்காமல்
நீ வாழ்ந்து பிறருக்கு கொடுத்துதவு
என்று சொல்லி வளர்ப்போம்..
கதிரில் கலந்திருக்கும் சிறு பதிரைப்
பார்த்து மனம் பதராமல்
நிறைகதிரில் சிறு பதிருள்ளதென்று
மனப்பக்குவப் படுவோம்…
வெள்ளைத்தாளில் விழுந்த சிறுகருமையைப் பற்றியே
சிறுமையாய் பேசும் வழக்கத்தை ஒழித்து
கருமையை விடுத்த பெரும்
வெண்மையை பெருமையாய் பேசுவோம்…
கல் இடித்துவிட்டதே என்று சொல்லியே
பழக்கப்பட்ட நாம்
கல்லில் இடித்துவிட்டேன் என்று
இனியாவது சொல்லிப் பழக்குவோம்…
மழலைப் பருவத்திலேயே பேசக்
கற்றுக் கொடுக்கும் நாம்
விடலைப் பருவமானாலும் எப்படி பேசவேண்டும்
என்று கற்றுக்கொடுப்பதில்லை…
பிறப்பு தலைகீழாய் இருப்பது சிறப்பு தான் ~ ஆனால்
வளர்ப்பு பிறப்பின் முரணாயிருப்பதே சிறப்பு…
நாம் போதிக்காமலேயே நம்மால் மகவை
பாதிக்கும் பல விடயங்கள் இங்கே தலைகீழ் விகிதங்களே..
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!