தளர்வற்ற முத்தங்கள்

தளர்வற்ற முத்தங்கள்

காதலிப்பதே குற்றம் என்பதால்

முத்தங்கள் அந்த காலத்தில் கொலை பாதகம்.

கரம் பிடித்த பின்

மொத்தமாய் முத்தங்கள்.

காதலா காமமா ?

கருவுற்றதும் அவள் பெரும் வயிற்றை தடவி

நான் கொடுத்த முத்தம்

அவளுக்கா குழந்தைக்கா?

பிரசவித்து மயங்கி ரத்த வாசனையுடன் கிடந்த

அவளின் நெற்றியில் நான் இட்ட முத்தம்

கண்டிப்பாக அவளுக்கு தான்.

செவிலியர்கள் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

பிள்ளைகளுக்கு கொடுத்த முத்தங்கள்

பேரன்பின் உச்சம்…

கொஞ்சம் கொஞ்சமாய்

முத்தங்கள் குறைந்து போயின…

இப்போதெல்லாம்

முககவசம் அணிந்து

முத்தங்களுக்கும் முழு அடைப்பு.

சிலர் முத்தங்களை

காற்றில் அனுப்புகிறார்கள்.

நான் தற்காலிகமாக சேவைகளை

நிறுத்தி வைத்துள்ளேன்.

முனைவர் க. வீரமணி
சென்னை
9080420849