தவப்புதல்வன் ஓர் அருமையான சிறுகதை.
காவிரிப் பாலம் தான் திருச்சியின் பீச்.
காவிரி கரை புரண்டு ஓடாவிட்டாலும், பாலச்சுவரைப் பிடித்துக் கொண்டு, மாலை நேர இதமான காற்றின் சுகத்தை அனுபவித்தவாறே மணிக்கணக்கில் காவிரியைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவது, மக்களின் பொழுது போக்கு அம்சமாகி விட்டது.
பல்வேறு சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள், செயல்கள் மூலம் ஏற்படும் ஒருவிதமான இறுக்கத்தை மாலை வேளையில் காவிரித் தாயின் திருவடிகளில் இறக்கி வைத்து விட்டுச் செல்வதில் மக்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி.
கைதடியை ஊன்றிக் கொண்டு தட்டுத் தடுமாறி காவிரிப் பாலத்தை வந்தடைந்த நரசிம்மன், பாலத்தின் ஓரமாக வந்து அமர்ந்து கொண்டார்.
சதாபிஷேகம் செய்து கொள்வதற்கான வயது. இந்த வயதிலும் வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் யாருடைய துணையுமின்றி தனியாக நடந்து வரும் அளவுக்கு தேக ஆரோக்கியம்.
அண்ணா சிலை அருகில் புதிதாக முளைத்திருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகை கொடுத்துக் கொண்டு மனைவியுடன் வசித்து வருபவர். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்.
ஒரே பையன். மும்பையில் புகழ் வாய்ந்த மல்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் கௌரவமான உத்தியோகம். கம்பெனி கொடுத்திருக்கும் கார், குடியிருப்பு வசதியுடன் இளம் மனைவி, இரு குழந்தைகளுடன் சொகுசு வாழ்க்கை.
நரசிம்மன் ஓய்வு பெற்ற ஆசிரியர். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
உடலை வருடிக் கொண்டு சென்ற இதமான காற்றில் மெய்மறந்து உட்கார்ந்திருந்த நரசிம்மன் மனதில் ஆயிரமாயிரம் எண்ண ஓட்டங்கள்.
தன்னுடைய முப்பதாவது வயதில் இருபது வயது கௌரியை கைபிடித்தும், ஐம்பதாவது வயதில்தான் ரகு பிறந்தான்.
தவமிருந்து பெற்ற பிள்ளை. கோயில் குளங்கள், பூஜை புனஸ்காரங்கள், யாகம் என்றெல்லாம் பார்த்த பின் வந்து பிறந்தவன்.
தன் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் அதிசயமாக வந்து அச்சத்தைப் போக்கியவன்.
ரகுவை நினைக்கும் போதே நரசிம்மன் உள்ளம் பெருமிதத்தால் விம்மியது. அவன் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே அவரிடம் அப்படியொரு நெருக்கம், ஒட்டுதல்.
அவர் இல்லை என்றால் கத்தி தீர்த்து விடுவான். பார்த்து பார்த்து சீராட்டி வளர்த்தார். அவனது மழலைப் பேச்சில் மனதைப் பறிகொடுத்து கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவனது மகிழ்ச்சியில் தன் சந்தோஷத்தைக் கண்டவர்.
வாரிசு இன்றி ஏக்கத்துடன் பரிதவிப்பவர்களுக்கு மத்தியில் தான் உண்மையிலேயே கொடுத்து வைத்திருப்பதை எண்ணும் போதே புல்லரித்தது அவருக்கு.
ஆசிரியரின் பிள்ளை மக்கு என விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ இந்த சமூகத்தில் சொல்லி வைத்திருப்பதை சுக்கு நூறாக உடைத்துக் காண்பித்தவர்.
பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு அனைத்திலும் ரகு அனாயசமாக முதல் வகுப்பில் தேறி, உறவினர், நண்பர்கள் மத்தியில் பாராட்டுதல்களைப் பெற்றபோது நெஞ்சை நிமிர்த்தி நடை போட்ட நாட்கள் நரசிம்மன் மனதில் வந்து போயின.
ஓய்வு பெற்ற பின் கிடைத்த கணிசமான தொகை அனைத்தையும் ரகுவின் கல்விக்காக கரைத்தது வீண் போகவில்லை.
தவப்புதல்வன் ரகுவுக்குப் பயன்படாமல், அவ்வளவு பணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?
கௌரவமான உத்தியோகம் அமைந்ததும் உறவிலேயே பெண்ணைப் பார்த்து தடபுடலாக திருமணம் செய்து வைத்து அனுப்பி வைப்பது என்பது எல்லோருக்கும் நடந்து விடுமா?
காதல், கீதலில் எல்லாம் சிக்கிக் கொள்ளாமல், குடும்ப கௌரவத்தைக் குலைக்காமல் தன் பெயரைக் காப்பாற்றியிருக்கும் மகனை நினைக்கையில் நரசிம்மனுக்கு உண்மையிலேயே ஆனந்தமாக இருந்தது.
ஒரு பேரன், ஒரு பேத்தி. பேரன், பேத்தியைப் பார்க்காமலேயே கண்மூடிப் போய்ச் சேரும் நிலை பலருக்கு ஏற்படும் இந்நாளில், தனக்கு கிடைத்திருக்கும் அப்பெரும் பாக்கியத்தை நினைத்து நரசிம்மன் மனம், புகளாங்கிதமடைந்தது.
இன்று காலை தவப்புதல்வன் ரகுவிடமிருந்து போன் வந்ததிலிருந்து முதல் மனம் ஒரு நினையிலேயே இல்லை.
சந்தோஷம், துக்கம் இரண்டையுமே பொறுமையாகத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இந்த பாழாய்ப் போன மனதிற்கு இருப்பதில்லை. ஒருவித பரபரப்பு, அலைபாயும் தன்மை.
தனக்கு சதாபிஷேகம் செய்து வைக்க அடுத்த வாரம் மனைவி, குழந்தைகளுடன் ரகு வரப்போவதை அறிந்ததிலிருந்து நாள் நகரமால், வினாடிகூட யுகமாகத் தோன்றுகிறது நரசிம்மனுக்கு.
“இந்த வயதான காலத்தில் வாடகை வீட்டில் இருந்து கொண்டு நாம் மட்டும் இங்கு தனியாக ஏன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். பேசாமல் ரகுவிடம் போய் இருந்திடலாம்” என கௌரி அடிக்கடி சொல்லுவாள்.
“நேரம், காலம் வரும் போது செல்லலாம்” என அவள் வாயை அடக்கிக் கொண்டிருந்தவருக்கு இப்போது அந்த நேரமும் காலமும் வந்து விட்டாற் போலிருந்தது.
என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும், முதுமையின் பிடி நாளுக்கு நாள் இறுகுவதை நரசிம்மனால் தெளிவாக உணர முடிந்தது.
திருமணமான புதிதில் மகனின் சுதந்திரப் போக்கிற்கு இடைஞ்சலில்லாமல் இருந்துவிட்ட திருப்தி அவருக்கு.
அடுத்த வாரம் சதாபிசேஷகம் முடிந்த கையோடு வீட்டைக் காலி செய்து ரகுவுடன் மும்பை சென்று கௌரியின் நீண்ட நாள் ஆசையையும் பூர்த்தி செய்து விட்டால் எடுத்த பிறவியின் பயனை அடைந்துவிட்ட திருப்தியும் ஏற்பட்டுவிடும்.
சிந்தனைகளிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை விடுவித்துக் கொண்ட நரசிம்மன் கைகளைத் தரையில் ஊன்றியவாறே மெதுவாக எழுந்தார்.
காவிரித் தாயைக் கைகூப்பித் தொழுது விட்டு கைத்தடி உதவியுடன் தட்டுத் தடுமாறி நடக்கலானார்.
விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்றைய நாள் வரை வாழ்க்கையில் ஒன்று மாற்றி ஒன்றாக ஏற்பட்ட எவ்வளவோ அனுபவங்கள், நிகழ்ச்சிகள், கஷ்ட-நஷ்டங்கள், பொறுப்புகள், கடமைகள் போன்ற தொடர் போராட்டங்களிலிருந்து மீண்டு வெளிப்பட்டு வந்திருப்பதை நினைத்தார்.
அது சாலையின் வலதுபுறம் செல்லும் சமயம், இடதுபுறம் சென்றால் எவ்வாறு சௌகரியமாக மாறுமோ, அது மாதிரி இருந்தது நரசிம்மனுக்கு.
ஒருமாத லீவில் ரகு வந்தான். விமரிசையாக சதாபிஷேகம் நடந்தேறியது. மும்பை கிளம்பிச் செல்வதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒருநாள் காலை வேளையில் தந்தையிடம் வந்தவன் “அப்பா, இந்த வயதான காலத்தில் அம்மாவுடன் வாடகை வீட்டில் இருந்து கொண்டு நீங்கள் கஷ்டப்படுவதை இனிமேலும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.” என்றான்.
நரசிம்மன் உள்ளம் துள்ள ஆரம்பித்தது. இந்த தருணத்தைத் தானே மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. தன் ஒரே மகன், தவப்புதல்வன் தன்னோடு அவர்களை அழைத்துச் செல்லும் நேரம் வந்து விட்டது.
உள்ளம் குதூகலிக்க, “உன் விருப்பப்படியே நடக்கும் ரகு. நாம் எப்போ கிளம்பணும் சொல்லு?” எனக் கேட்டார்.
“நாளைக்கு காலையிலே வீட்டைக் காலி பண்ணிக் கொடுத்துட்டுக் கிளம்பணும். நேராக கார்ல திருவண்ணாமலை போறோம். அங்கே முதியோர் இல்லத்துல உங்களைச் சேர்த்திட்டு, இரவே நாங்கள் மும்பை கிளம்பறோம்.
உங்க ரெண்டு பேரையும் எந்த குறையும் இல்லாமல் அவங்க நல்லாப் பார்த்துப்பாங்க. எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டுத்தான் இங்கு வந்தேன். ஷார்ப்பா காலையில் பத்துமணிக்கு கிளம்பறோம். சரியா?” என்றான் ரகு.
பிரமை பிடித்தது போல தவப்புதல்வன் ரகுவைப் பார்த்துக் கொண்டிருந்தார் நரசிம்மன்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998