தவறான தமிழ்த்தாய் வாழ்த்து (கட்டுரைகள்) என்ற நூலின் மதிப்புரை.
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
தமிழும் தமிழோடியைந்த வைணவமும் வளர்ந்த ஊர்
மென்னடை அன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூர்.
“என்பு இழை கோப்பது போல் பனிவாடை ஈர்க்கிறது
என் பிழையே நினைத்தருளி அருளாத திருமாலார்க்கு”
என நைந்து நைந்து பேரருள் பெருமானை பாடிப்பரவி, தான் உய்ந்த வைணவர்கள் பலர் வலம் வந்த பெருமை உடைத்த இவ்வூர், வைணவத்தால் தமிழ் வளர்த்த திருஊர் ஆகும்.
இந்த ஊரைச்சேர்ந்த திரு. எஸ். ரமேஷ், இயற்கையிலேயே பன்முகம் கொண்டவர் ஆவார். அதில் ஒரு முகமேஇக்கட்டுரையாளர் முகம்.
இழையோடும் நகைச்சுவை நடை இவரது பலம். இந்நூல் முழுவதும் இவரின் நுண்மாண் நுழைபுலம் வெளியாகும் களமாகும். பதின்மூன்றுகட்டுரைகளையுடைய தொகுப்பு இது. ஒவ்வொன்றும் ஒரு சுவை.
மகாபாரதப்போரில் பங்கேற்ற பாண்டிய மன்னர்கள் என்ற கட்டுரையில், பாரதம் முழுவதும் ஒரே வகை என நிறுவுகிறார். சனாதன தர்மத்தையும், தமிழ் தர்மத்தையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பின்னிப் பிணைந்ததாக காட்டுகிறார்.
எங்க அக்கிரகாரத்துக்கு கர்த்தர் வந்திருந்தார் என்ற கட்டுரையில் , பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றைச்சொல்லுகிறார். அதிலுள்ள வடமொழியின் ஆதிக்கத்தை வழிநெடுக சுட்டுகிறார்.
மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட காலத்தில் இருந்த மொழி நடை அப்படியே தற்கால வைணவ வழிபாட்டிலும் இருப்பதைக்கண்டு வியக்கிறார். நம்மையும் வியக்க வைக்கிறார்.
பாசுரங்களிலும், தேவாரங்களிலும் தேனாய் இனித்த தமிழ் நடை, காலப்போக்கில் மணிப்பிரவாள நடையாய் மாறி, மீண்டும் இன்று பலரின் முயற்சியால் தன்னடைக்கு திரும்பியுள்ளது.
ஆட்சியாளர்களும், அறிஞர்களும் மாறுந்தோறும் தமிழ், தன் மொழி நடையை மாற்றிக்கொள்கிறது. இது புதிய ஆய்வுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. இதை இந்தக்கட்டுரையில் இவர் சொல்லாமல் நம்மை சிந்திக்க வைக்கிறார்.
ராமனின் நிறம் என்ன? என்ற கட்டுரை சுவாரஸ்யமானது. இராமனும், கிருஷ்ணனும், கருப்பு என ஆதாரத்தோடு நிறுவிக் காட்டுகிறார். அந்த நாராயணனே கருப்பு நிறம் தான்.
நம்மாழ்வார் பாடுவாரே, பாடிப்பரவுவாரே ,
“கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால்வரை” என.
இதில் சூட்சுமம் என்னவெனில், திருமால் கருப்பு. சிவன் சிவப்பு. (“செம்மேனி எம்மான்”). இனி, இதை வாசகர்களின் கற்பனைக்கு விட்டு வைப்போம்.
உபதேசிகளும், உபாத்தியாயர்களும் என்ற கட்டுரை, ஆசிரியரின் பள்ளிப்பருவ நிகழ்வுகளைக்காட்டி , பிற்காலத்தில் கிறித்தவர்கள், கிறித்தவத்திற்கு ஆள் சேர்க்கும் வித்தையை நகைச்சுவையோடு எழுதியுள்ளார். இப்படியெல்லாமா செய்வார்கள் என வியக்க வைக்கிறார்.
கால்டுவெல் ஐயர் : ஒரு மொழியியல் அறிஞனின் வகுப்புவாத முகம் என்ற கட்டுரையில், கால்டுவெல் ஐயர், நம்மிடையே திராவிட ஆரிய பிரிவினையை விதைத்த வரலாற்றைக்கூறுகிறார்.
அதன் மூலம், அவர் தனதுகிறித்தவ சமயத்தை நிறுவன சமயமாக்க அடித்தளமிட்டதை சுட்டுகிறார். நம்மிடையே இருந்த ஏற்ற தாழ்வுகள்அவருக்கு உதவியது.
ஆனாலும் கூட, தமிழ் வடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது அல்ல. அது தனித்து இயங்கக் கூடியது என்ற உண்மையை பிற்காலத்தில் நிறுவிய பெருமை கால்டுவெல்லையே சாரும்.
அவர் எந்தநோக்கத்தில் செய்தாலும், அதன் பிரதி விளைவு இது என்பதை ஆசிரியர் மறைமுகமாகக்காட்டுகிறார்.
அதேசமயத்தில், தனி மனித வழிபாட்டை வளர்த்தெடுத்த திராவிட இயக்கங்கள் கால்டுவெல்லையும் தெய்வமாக்கிய கொடுமையை தனக்கே உரித்தான பாணியில் கூறுகிறார்.
எழுதினேன். வெளியிட்டேன் என்ற கட்டுரையில் ஆசிரியர் தனது எழுத்துலக பருவம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான பரிணாம வளர்ச்சியை விவரிக்கிறார்.
அரசு நூலகத்துறையும், பதிப்பாளர்களும், பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படும் பரிதாப நிலையையும், அதன் ஏமாற்றுத்தனங்களையும் துணிச்சலாகக் கூறுகிறார்.
எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு பெட்டி தூக்கும் இந்நாளில், தனது மனதில் பட்டதையும், தனது அனுபவங்களையும், பொதுவான எழுத்தாளர்களின் நிலைமையையும் உள்ளதை உள்ளவாறே வெளிப்படுத்தும் இவரது நேர்மையை உள்ளபடியே பாராட்ட தோன்றுகிறது. கவி பாரதியின் நெஞ்சுரம் இவரிடம் உள்ளது.
சிலம்பின் காலம், பதினொன்றாம் நூற்றாண்டா? என்ற கட்டுரை சிலப்பதிகாரத்தின் காலத்தை ஆய்ந்து பிற்காலத்தியதே என தரவுகளுடன் தீர்மானிக்கிறார்.
தவறான தமிழ்த்தாய் வாழ்த்து என்ற கட்டுரை இன்றைய தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்றை விவரிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தில் இத்தனை பிரச்சனைகளா என்று திகைக்க வைக்கிறார். தனது தரப்பில், புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை பரிந்துரைக்கிறார். காலம் தீர்ப்புச்சொல்லட்டும்.
பள்ளிக்கூட திவசங்கள் என்ற கட்டுரையில், ஆசிரியரின் வேலை நாள் பரிதாபங்கள் பளிச்சிடுகிறது. பாலைவனச்சோலையாக அந்தக்கட்டுரையில் வரும் ரெய்ச்சல் என்ற பாத்திரத்தை இவர் வர்ணிக்கும் விதம் நாக்கை சொட்டை போட வைக்கிறது. இலக்கியத்தில் தோய்ந்தவர்கள் இதனை நன்கு அனுபவிக்க முடியும்.
டி. கே. சிதம்பரநாத முதலியார், கம்பரிடம் வைத்திருந்த குழைந்த அன்பையும், அவரின் காப்பியத்தில் வைத்திருந்த இரசிகத்தன்மையையும் ஆசிரியர் திரு. எஸ்.இரமேஷ், ஆங்கிலேய இலக்கியங்களிலும் குறிப்பாக ஷேக்ஸ்பியரிடமும் வைத்திருக்கின்றார்.
ஷேக்ஸ்பியரின் இரசிகமணி இவராவார். இரசிகமணி டி. கே. சி.யின் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூராகும். என்னவோ தெரியவில்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் இரசிகமணிகளை வளர்த்து எடுக்கிறது. இங்கு உதித்த நமது தாய் ஆண்டாளும் அரங்கனின் ரசிகை தானே!
ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் இன்னொரு மால்குடியில் ஆசிரியர் தனது ஊரை எந்த அளவுக்கு இரசித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. ஆர். கே. நாராயண் எழுதிய மால்குடி என்ற ஊரை தனது ஊரோடு பொருத்தி, ரசித்து,பெருமை கொள்கிறார்.
இராமாயணம் எத்தனை இராமாயணமடி என்ற கட்டுரையில், இராமாயணங்களின் வகைகளைத் தொட்டுக் காட்டியுள்ளார்.
குறிப்பாக , சமண ராமாயணத்தில் இராவணனின் பத்து முகங்களுக்கு நமது அறிவுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய விடை இருக்கிறது.
சமணர்களின் வாழ்வியல் நெறி அவர்கள் படைத்த இராமாயணத்திலும் தெரிகிறது. அகலிகையை பற்றிய அளவுகோல்கள் அவரவர் சார்ந்த பண்பாட்டு நெறிகளுக்கு தக்கபடி மாறுவதை அழகாக சொல்லுகிறார்.
சாயபு கடை பேனா என்ற கட்டுரை, பேனாவால் எழுதலாம் என்பதை மாற்றி,பேனாவை பற்றி எழுதியுள்ளது இவரது திறமைக்குச் சான்று.
உணர்ச்சிகளை கையாளும் விதம், உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் உணர்ச்சி கொண்டு,பிறரின் உணர்வுகளை தூண்டுவது தனிக்கலையாகும். அதை இக்கட்டுரையில் ஆசிரியர் பேனா வாயிலாக சொல்லியுள்ளார்.
மொத்தத்தில், தவறான தமிழ்த்தாய் வாழ்த்து என்ற இத்தொகுப்பு ஒரு பல்சுவை விருந்தாகும். இதனை அனுபவிக்கத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்ஆவர்.
– சூரங்குடி அ. இன்பக்கூத்தன்
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க் புத்தக நிறுவனத்தின் வெளியீடு
முகவரி
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்,
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்,
33 தெற்கு ரத வீதி,
ஸ்ரீவில்லிபுத்தூர்– அ.கு. 626125
விருதுநகர் மாவட்டம்
தமிழ் நாடு, இந்தியா
கைபேசி : 9080551905
மின்னஞ்சல்: shakespearesdesk@yahoo.com
S Ramesh
Shakespeare’s Desk
No. 33 South Car Street
Srivilliputtur – PIN : 626 125
Virudhunagar District
Tamil Nadu
India
Mobile : 9080551905
Email: shakespearesdesk@yahoo.com
சிறந்த நூலாகத்தான் தெரிகிறது .