தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும் என்ற இக்கதை இன்றைய சூழ்நிலைக்கு தவளையின் அவசியம் பற்றிக் கூறுகிறது.

மரகத வயல் என்னும் தன்னுடைய சொந்த ஊருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் முத்து, இரத்தினம் ஆகியோருடன் பெற்றோரைப் பார்க்க காரில் சென்றான் மாறன்.

சாலையின் இருமருங்கிலும் பச்சைநிற வயல்வெளிகளுடன் மரகத வயல் என்ற பெயருக்கு ஏற்றாற்போல அவ்வூர் மிகவும் இரம்மியமாக இருந்தது.

வீட்டிற்குச் சென்றதும் அப்பா மாணிக்கமும், அம்மா வைரமும் மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை வரவேற்றனர்.

அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரான விரால் மீன் குழம்பு வாசனையும் அவர்களை கைகூப்பாமல் வரவேற்றது.

“எல்லாரும் போய் கை,கால் கழுவிட்டு வாங்க. சாப்பாடு போடுறேன்.” என்றார் வைரம்.

“சரி, பாட்டி எங்களுக்கு ரொம்ப பசிக்குது” என்றபடி குழந்தைகள் இருவரும் கிணற்றடிக்கு ஓடினர்.

கைகால் கழுவிக் கொண்டிருந்த போது வாழைமரத்துக்கு அருகில் ‘க்ராக், க்ராக்’ என்ற சப்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையில் தவளை ஒன்று தத்தி தத்தி போய்க் கொண்டிருந்தது.

‘ஏய், தவளை, கார்டூன்ல பார்த்திருக்கேன். இப்ப நேர்ல பாக்குறேன்’ என்றபடி குழந்தைகள் இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.

‘பாட்டி, பாட்டி, நானும், தம்பியும் இப்ப தவளைய நேர்ல பார்த்தோம்’ என்றான் முத்து ஆச்சர்யத்துடன்.

அதனைக் கேட்டதும் வைரம் “என்ன மாறா, இவங்க இதுக்குமுன்ன‌ தவளைய நேர்ல பார்த்தது இல்லையா?” என்றபடி சாப்பாட்டினை பரிமாறினார்.

“ஐ.. மீன் குழம்பா எனக்கு பிடிக்கும்” என்றபடி தட்டினை இழுத்தான் இரத்தினம்.

“குட்டிகளா, அத்தையும், உங்கப்பாவும் ஒன்னாவது இரண்டாவது படிக்கும்போது மீனுன்னு தவளைக் குஞ்சுகள பிடிச்சிட்டு வந்தாங்க தெரியுமா” என்றார் வைரம்.

“என்னப்பா சொல்றாங்க பாட்டி, தவளக்குஞ்சு என்ன மீன் மாதிரியா இருக்கும்?” என்றான் இரத்தினம்.

“ஆமாம்டா, பாட்டி சொன்ன மாதிரி நானும் அத்தையும் மழைகாலத்துல பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புறப்ப, வழியில இருந்த சின்ன குட்டையில நிறைய மீன் குஞ்சுக நீந்துறத பார்த்தோம்.

உடனே டிபன் பாக்ஸ்ல அதுகள பிடிச்சுட்டு வந்து பாட்டிட்ட ‘நாங்க மீன் பிடிச்சிட்டு வந்துருக்கோமுன்னு’ பெருமையா காட்டுனோம்.

பாட்டிதான் ‘அது தவளைக் குஞ்சுங்க. பிரட்டவளைன்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க.”‘ என்றான் மாறன்.

“மீன்மாதிரி இருக்கிற தவளைக் குஞ்சுங்க எப்படி தவளையா மாறும்?” என்று கேட்டான் முத்து.

“அதுவா, தவளை முட்டையில இருந்து வெளில வர்ற குஞ்சுக மீன் மாதிரி உடல் வாகுடன் இருக்கும். அதுக செவ்வுள்கள் மூலம் சுவாசிக்கும். இந்நிலைய உள்ள குஞ்சுக தண்ணீல மட்டும் இருக்கும்.

மீன் மாதிரி உள்ள தவளைக்குஞ்சு
மீன் மாதிரி உள்ள தவளைக்குஞ்சு

பத்து நாள் கழிச்ச குஞ்சுகளுக்கு சின்ன முன்னங்காலும் நீளமான வாலும் இருக்கும். 

 இரண்டாம் நிலையில் உள்ள தவளையின் லார்வா
இரண்டாம் நிலையில் உள்ள தவளையின் லார்வா

இளந்தவளையா வளர்ந்த பிறகு அதுகளுக்கு சின்ன வால் மட்டும் இருக்கும். தண்ணீலயும், நிலத்துலயும் இருக்கும். இது இந்நிலையில நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.

சின்ன வாலுடன் உள்ள தவளை
சின்ன வாலுடன் உள்ள தவளை
தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

வளர்ந்த தவளை நீளமான பின்னங்கால்களுடன் வால் இல்லாமல் இருக்கும்.” என்றார் முத்துவின் அம்மா பவளம்.

தவளையின் வாழ்க்கைச் சுழற்சி
தவளையின் வாழ்க்கைச் சுழற்சி

“அது மட்டுமில்ல தவளைங்க சகதி நிறைந்த இடத்தல இருக்கும்போது தன்னுடைய தோல் மூலம் சுவாசிக்கும் தெரியுமா?.

இப்பயெல்லாம் காற்று மாசுபாட்டால தவளைங்க ரொம்பவே கஷ்டபடுதுங்க.

ஒரு இடத்துல இருக்கிற தவளையோட தோல் நிறத்தை வைச்சு சுற்றுசூழல் எவ்வளவு பாதிப்படைச்சிருக்குன்னு சொல்லலாம்.

நிறைய தவளைக இருக்குற இடம் சுற்றுசூழல் நல்லா இருக்கற இடம்னு ஆய்வு முடிவுகள் சொல்லுது.” என்றான் மாறன்.

“அப்படியா, இது எனக்கு தெரியாதே” என்றாள் பவளம்.

தவளையின் முக்கியத்துவம்

“தவளைங்க தண்ணீல இருக்கிற கொசுக்களின் லார்வாக்களையும், முட்டைகளையும் தனக்கு உணவாக்கும். இன்னைக்கு தவளைங்க நிறைய குறைஞ்சு போச்சு. கொசுக்கள் அதிகமாக பெருகிருச்சு.

கொசுக்களை ஒழிக்க கொசு மருந்துகளைப் பயன்படுத்தி உடல்நலத்தையும், சுற்றுசூழலையும் கெடுத்துக்கிறோம்.

முந்தியெல்லாம் இங்க எல்லாரும் வீட்டுக்கு வெளியில முத்தத்துலயும், திண்ணைலயும் தூங்குவோம். அப்பயெல்லாம் கொசு கடிக்காது.

ஏன்னா தவளைங்க கொசுக்களைக் கட்டுப்படுத்துச்சு.

கிராமங்களிலும் இப்ப தவளைங்க குறைஞ்சதுனால கொசுக்கடி இருக்கு. நான் போனவாட்டி ஊருக்கு வந்தப்ப திண்ணைல படுக்க முடியாதளவுக்கு கொசுத் தொல்லை.” என்றான் மாறன்.

“பேரப்பிள்ளைங்களா, வயல்களிலும் பயிருக்கு கெடுதல் செய்யும் பூச்சிகளையும் தவளைங்க சாப்பிட்டு பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்தும்.

இன்னைக்கு தவளைகள் போதிய அளவுக்கு இல்லாததால பயிர்களுக்கு பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தி உணவுப்பொருளையும் நச்சா மாத்திக்கிட்டு இருக்காங்க”

“இன்னும் சொல்றேன் கேளுங்க, தவளைங்கள பாம்பு, பருந்து உள்ளிட்டவைகள் உணவாக்கிக்கும். தவளைங்க குறைஞ்சதுனால இவைகளுக்கும் உணவு பற்றாக்குறை உண்டாயிருச்சு.

தவளைகளின் எண்ணிக்கை குறைச்சதுனால தவளைகளின் உணவுகளான கொசுக்கள், பூச்சிகள் பெருகிருச்சு. தவளைகள உணவாக்கிற உயிரினங்களுக்கும் பிரச்சினை உண்டாயிருச்சு”  என்றார் மாணிக்கம்.

“அதாவது உணவு சங்கிலியில (Food Chain) பாதிப்பு உண்டாயிருச்சு. இதனால சுற்றுசூழல் உயிர்சமநிலையும் பாதிக்கப்படும் தெரியுமா?” என்றான் மாறன்.

தவளைப் பாதுகாப்பு

“சரிப்பா, கொசுக்களையும், பூச்சி இனங்களையும் இயற்கையா கட்டுப்படுத்த நாம தவளைய வளர்க்கலாமா?” என்றான் முத்து.

“தவள குஞ்சுகள குளம், குட்டை, நீர் நிறைந்த வயல்வெளிகள்ல விட்டு வளர்க்கலாம். இதுக்கு மீன்வளத்துறை உதவிய நாடலாம்.

நம்மால முடிஞ்ச அளவுக்கு காற்ற மாசுபடுத்தாம பாத்துக்கணும். அப்பதான் தவளைங்க ஆரோக்கியமா இருக்கும்.

விவசாயத்துக்கு நாம பயன்படுத்துற பூச்சிகொல்லி மருந்துகள் நீர்மாசுபாட்டையும், நிலமாசுபாட்டையும் உண்டாக்கி தவளைகளின் வாழ்வை பாதிக்குது.  அதனால நீர்மாசுபாட்டையும், நிலமாசுபாட்டையும் நம்மால முடிஞ்ச அளவுக்கு கட்டுப்படுத்தணும்.

நகர்புறங்கள்ல எல்லா இடத்தையும் கான்கிரீட்டால அடைச்சுக் கட்டாம கொஞ்சம் மண் இருக்குறமாதிரி விட்டு கட்டணும்.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுலையும் தவளைங்க இருக்கணும்னா நாம வேகமாக அதுகள பாதுகாக்கனும்.

அதனால சுற்றுசூழலையும் நாம காப்பாத்தலாம். தவளைகளின் ஆரோக்கியமே நம்முடைய ஆரோக்கியம்.” என்றார் மாணிக்கம்.

‘சரி தாத்தா, தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும் நமக்கு முக்கியம். அதனால கண்டிப்பா நாம தவளைகள பாதுகாப்போம்.

அதுக்கான செயல்பாட்ல இப்பவே இறங்குவோம் வாங்க’ என்றபடி வயல்வெளிக்கு தங்களுடைய தாத்தாவுடன் குழந்தைகள் புறப்பட்டனர்.

வ.முனீஸ்வரன்