பயணம் துவங்கி ஆறாவது நாள்.
மாலை நேரத்தில் அந்த மரத்திலிருந்து புறப்பட்ட குருவிக் கூட்டம் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது.
குருவிகள் எல்லாம் உற்சாகமாய் இருந்தன.
ஒரு குருவி பாடல்களை பாடியது. அப்பாடல்கள் நீதியினை போதிக்கும் வகையில் இருந்தன. இனிமையான குரலில், நற்கருத்துகளையும் கேட்டு குருவிகள் எல்லாம் மகிழ்ந்தன.
அதை தொடர்ந்து, ஒரு குருவி சைபீரிய நாரை (Siberian Crane), பெரும் பூநாரை (Greater Flamingo), அமூர் வல்லூறு (amur falcon), சோளக்குருவி (Rosy Starling), பெரும் வெள்ளைக் கூழைக்கடா (Great White Pelican) முதலிய பறவைகளைப் போன்றே குரல் ஒலிகளை எழுப்பியது.
அவற்றைக் கேட்டு குருவிகள் ஆச்சரியம் அடைந்தன. அக்குருவியின் ஒப்புப் போலிப் பண்பை (mimicry) எல்லா குருவிகளும் வெகுவாய் பாராட்டின.
ஒரு குருவி தனக்கு தெரிந்த விடுகதைகளை கேட்டுக் கொண்டே வந்தது. அதற்கான விடைகளை பிற குருவிகள் சரியாக சொல்ல முற்பட்டன.
மற்ற குருவிகளால் விடை செல்ல முடியாத விடுகதைகளுக்கு, அக்குருவியே நயம்பட பதில்களை கூறியது. குருவிகள் அவற்றை கவனமுடன் கேட்டன.
ஒரு குருவி சட்டென விரைந்து கூட்டத்தின் முன்சென்று வால் ஆட்டி அந்தரத்திலேயே நடனமாடியது; அடுத்து மேலிருந்து கீழாக குட்டிகரணம் போட்டது; சிறகை அசைக்காமல் பறந்தது; தலைகீழாக பறந்து காட்டியது. அக்குருவியின் சாகசங்களைக் கண்டு எல்லா குருவிகளும் ஆச்சரியத்தில் திகைத்தன.
அந்த அமைதியான இரவு வேளையில் குருவிகளின் ஒலி ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
இருன்டினிடேவும் குருவிகளின் மகிழ்ச்சியில் அவ்வப்பொழுது பங்கு எடுத்துக் கொண்டது. அதேசமயத்தில் நிலபரப்பு மற்றும் நட்சத்திர அமைப்புகளையும் உற்று கவனித்து வந்தது.
அப்பொழுது மணி இரவு பதினொன்று இருக்கும்.
இரவு வானத்தில் அந்த அதிசய வைக்கும் நிகழ்வு தோன்றியது.
ஆம்… ஆரோரா (aurora borealis) எனப்படும் துருவ ஒளிக் காட்சி வானத்தில் தோன்றியது. உடனே, “நண்பர்களே, அங்க பாருங்க ஆரோரா” என்றது இருன்டினிடே.
உடனே ஒட்டுமொத்த குருவிகளும் ஆரோராவை பார்த்தன.
பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் அந்த துருவ ஒளிக் காட்சி தெரிந்தது. அந்த ஆரோராவில் ஒளியின் உருவம் வில், பட்டி, கதிர் மற்றும் கற்றை போன்று இருந்தது.
குருவிக் கூட்டம் அதைக் கண்டு மகிழ்ந்தது, பிரமித்தது. வடதுருவ ஒளிக் காட்சியின் அழகில் மெய் மறந்தன எல்லா குருவிகளும்.
சில நிமிடங்களில் வட துருவ ஒளிக் காட்சியினை கடந்து போனது பறவைக் கூட்டம்.
வாக்டெய்லுக்கோ ஒரு சந்தேகம். உடனே, அருகில் இருந்த தனது தந்தையை பார்த்தது வாக்டெய்ல். குட்டியின் எண்ணத்தை புரிந்துக் கொண்டது தந்தை குருவி.
“வாக்டெய்ல், ஆரோரா எப்படி இருந்துச்சு”
“ரொப்ம நல்லா இருந்துச்சிப்பா”
“உம்ம்….”
“அப்பா. ஆரோரா எப்படி தோன்றுது?”
“அதுவா…. சொல்றேன் கேட்டுக்கோ… சூரியனிலிருந்து நிறைய துகள்கள் இந்த பிரபஞ்ச வெளியில வீசப்படுது. அதெல்லாம் வேகமாக நகர்ந்து பூமியோட காந்தப்புலத்தினுள் நுழையும்.
அப்போ, துருவப் பகுதிகளால் அந்த துகள்கள் இழுக்கப்படுது. இங்க வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களோட இந்த துகள்கள் மோதி ஆற்றலை ஒளி வடிவில உமிழும். அதுதான் அழகான ஆரோராவா காட்சி தருது.”
“அப்படியா… ஆச்சரியமா இருக்கு….”
“உம்ம்… இன்னொரு செய்தி…”
“சொல்லுங்கப்பா…”
“இந்த ஆரோரா நம்ம வடதுருவப் பகுதி மற்றும் தென்துருவப் பகுதியில மட்டும் தான் தெளிவா தெரியும். பூமியோட பிறபகுதியில தெரிவதில்ல”
“அப்ப சொர்க்க வனத்துல ஆரோரா தெரியாதா?”
“தெரிவதற்கு வாய்ப்பில்ல. ஏன்னா அது தென் துருவப் பகுதியில இல்லையே”
“சரிப்பா, எனக்கு இப்ப இன்னொரு சந்தேகமும் வருது.”
“என்னது வாக்டெய்ல்?”
“ஏன் பச்சை சிவப்புன்னு வெவ்வேரு நிறத்துல ஆரோரா தேன்றுது”
“ஆஆம்ம்… அதுக்கு காரணம் வளிமண்டலத்துல இருக்கும் வாயுக்களின் கலவை மற்றும் ஒளிச் சிதறல் தோன்றும் உயரம் தான்.
குறிப்பா சொல்லனும்ன்னா ஆக்சிஜனுடன் சூரியத் துகள்கள் மோதி, சிவப்பு அல்லது மஞ்சள்-பச்சை நிற ஒளியை உமிழும்.
நைட்ரஜனுடன் துகள்கள் மோதிச்சுன்னா ஊதா நிற ஒளியை உமிழும்.”
“சரிப்பா…. இப்ப புரியுது..”
அதன் பிறகு கூட்டதில் அமைதி நிலவியது.
அதிகாலை மூன்று மணி இருக்கும்.
நிலஅமைப்பு மாறியிருப்பதை இருன்டினிடே கண்டது.
நிலத்தில் பனிப்படலம் இல்லை. மாறாக அடர்ந்த தாவரங்கள் இருந்தன. உயர்ந்த மலைகள் தூரத்தில் தென்பட்டன. காலநிலையிலும் சற்று வித்தியாசம் தெரிந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக அதன் தாயகத்தின் மண்வாசனை அக்காற்றில் இல்லாதிருப்பதை அதன் உள்ளுணர்வு சுட்டிக்காட்டியது.
உடனே, “நண்பர்களே, நமது தாயகத்தை கடந்துவிட்டோம். இப்போது மனிதர்கள் வாழும் நாட்டிற்குள் நுழைந்திருக்கிறோம்” என்று அறிவித்தது இருன்டினிடே.
தாயகம் தாண்டிப் பயணம் என்பதால் அக்கணம் ஒரு இனம் புரியாத அமைதி குருவிக் கூட்டத்தை தொற்றியது. எல்லா குருவிகளும் நிலப்பரப்பை பார்த்தன.
நிலப்பரப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. காலநிலையிலும் மாற்றம் இருந்ததை அப்பொழுது எல்லா குருவிகளும் உணர்ந்தன. வாக்டெய்லுக்கோ அவ்விடம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
ஆச்சரியத்துடன் பயணத்தை தொடர்ந்தன, எல்லா குருவிகளும்.
காலையும் மலர்ந்தது. சூரியக் கதிர்கள் பளிச்சிட்டன. குருவிகளால் நிலப்பரப்பை தெளிவாக காண முடிந்தது. அப்பொழுது இருபெரும் மலைகளின் மத்தியில் குருவிக் கூட்டம் பறந்துக்கொண்டிருந்தது.
மலைகளில் பனி படர்ந்திருந்ததேயன்றி, வடதுருவப் பகுதியில் இருப்பது போன்று முற்றிலும் பனி மலைகளாக அவை இல்லை.
திடீரென ஒரு சத்தம், தூரத்தில் இருந்து வந்தது. அந்த சத்தம் மெல்ல மெல்ல குருவிக் கூட்டத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
கூட்டத்தில் சலசலப்பு… “என்ன சத்தம்?” என குருவிகள் எல்லாம் ஒன்றை ஒன்றுக் கேட்டுக் கொண்டன.
எதிரே தூரத்திலிருந்து ஒரு விமானம் வந்துக் கொண்டிருப்பதை இருன்டினிடே கண்டுக் கொண்டது. அது நான்கு நபர்கள் அமர்ந்து பயணிக்க கூடிய சிறுவிமானம் தான்.
உடனே, “யாரும் பயப்படாதீங்க, அது சிறு விமானம் தான்” என்றது இருன்டினிடே.
கூட்டத்தில் நிலவிய சலசலப்பு நீங்கியது. அந்த விமானம் வரும் பாதையிலிருந்து விலகிச் சென்றது குருவிக் கூட்டம். அடுத்த சில நிமிடங்களில், எதிர் திசையிலிருந்து வந்துக் கொண்டிருந்த விமானம் குருவிக் கூட்டத்தை கடந்து சென்றது.
“அது என்னதுப்பா?” என்றது வாக்டெய்ல்.
“அது ஒரு சிறிய விமானம். மனிதர்களால உருவாக்கப்பட்டது” என்றது தந்தைக் குருவி.
“அப்படியா…” எனக் கேட்டுக் கொண்டது வாக்டெய்ல்.
மேலும் இரண்டு மணி நேரம் கடந்தது. சூரியக் கதிர்களின் வெப்பத்தை குருவிகள் நன்கு உணர்ந்தன.
இருன்டினிடேவோ, அன்று தங்குவதற்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தது.
தாயகம் தாண்டிப் பயணம் என்றால் ஒவ்வொரு பயணத்திலும் தாயகத்தை தாண்டியவுடன் அந்த பள்ளத்தாக்கில் ஓடும் ஆற்றங்கரையில் தான் குருவிக் கூட்டம் தங்கும்.
அந்த ஆற்றங்கரையும் வந்தது. தாமதமின்றி தரையிறங்குவதற்கான சமிக்ஞையை தந்தது இருன்டினிடே. அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆற்றங்கரையை வந்தடைந்தது குருவிக் கூட்டம்.
(பயணம் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?
சொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்