சுவையான தாளித்த பழைய சாதம்

தாளித்த பழைய சாதம் செய்வது எப்படி?

தாளித்த பழைய சாதம் என்பது பழைய சாதத்தினை பயன்படுத்தி செய்யப்படும் உணவு ஆகும். வீட்டில் சாதம் மீந்து விட்டால் அதனை தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவது வழக்கம்.

பழைய சாதத்தினை எப்படி பயன்படுத்துவது என்று நம்மில் பலபேருக்கு அடிக்கடி சந்தேகம் வந்து கொண்டே இருக்கும்.

இனி உங்கள் வீட்டில் சோறு மீதமானால் கவலைப்படாமல் தாளித்த பழைய சாதத்தினை செய்து அசத்துங்கள்.

சுவையான தாளித்த பழைய சாதத்தினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பழைய சாதம் – ஐந்து கைபிடி அளவு

தயிர் – ஐந்து குழிக்கரண்டி அளவு

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 குழிக்கரண்டி அளவு

கடுகு – ¾ ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – 5 கீற்று

கொத்தமல்லி இலை – ½ கொத்து

இஞ்சி – ½ சுண்டு விரல் அளவு

பச்சை மிளகாய் – 3 எண்ணம் (பெரியது)

உப்பு – தேவையான அளவு

 

தாளித்த பழைய சாதம் செய்முறை

முதலில் பழைய சாதத்தினை நன்கு பிழிந்து கொள்ளவும்.

கறிவேப்பிலை, கொத்த மல்லி இலையை அலசி சிறு துண்டுகளாக வெட்டவும்.

இஞ்சியை தோல் நீக்கி சதுரத்துண்களாக வெட்டவும்.

பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும்.

குக்கரினை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் அதனுடன் உளுந்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து வதக்கவும்.

 

உளுந்தம் பருப்பு கலவையை வதக்கும்போது
உளுந்தம் பருப்பு கலவையை வதக்கும்போது

 

உளுந்தம் பருப்பு சிவந்ததும் அதனுடன் பழைய சாதத்தினைச் சேர்த்து நன்கு கிளறவும்.

 

பழைய சாதத்தினைச் சேர்த்ததும்
பழைய சாதத்தினைச் சேர்த்ததும்

 

அதனுடன் தயிர், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.

 

தயிர்,உப்பு சேர்த்ததும்
தயிர்,உப்பு சேர்த்ததும்

 

பின்னர் கொத்த மல்லி இலையை சேர்த்து கிளறி, குக்கரினை மூடி விசில் போட்டு அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

 

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்
கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

 

குக்கரை மூடும் முன்
குக்கரை மூடும் முன்

 

ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து சாதத்தினை ஒருசேரக் கிளறவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

சுவையான தாளித்த பழைய சாதம் தயார்.

 

சுவையான தாளித்த பழைய சாதம்
சுவையான தாளித்த பழைய சாதம்

 

இதனுடன் மாங்காய் ஊறுகாய், புதினா துவையல் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்த சாதம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.