திரவ வாயு – வளியின் குரல் 4

திரவ வாயு

சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க இரண்ட இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.

என்னவென்று அறிய முற்பட்டபோது தான், அவர்கள் வாய்வழிச் சண்டை செய்கின்றனர் என்பது தெரிய வந்தது.

வருத்தமாக இருந்தது. ′அறிவுள்ள மனிதர்கள் எதற்காக இப்படி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்?′ என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.

அங்கு என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. சில நிமிடங்களுக்கு சண்டை தொடர்ந்தது. ஒருவரை ஒருவர் வசை பாடினர்.

நல்லவேளை, அப்பொழுது சில மனிதர்கள் அவ்வழியே வந்தனர். அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு தான் நானும் நிம்மதி அடைந்தேன்.

எதற்காக இதை உங்களிடம் சொல்கிறேன்?

சண்டை செய்தவர்கள் சொன்ன பெரும்பாலான வார்தைகள் எனக்கு புரியவில்லை.

ஆனால் ஒரு சொற்றொடர் மட்டும் என் நினைவில் இருக்கிறது. அது, ″நான் யார் தெரியுமா? என்னோட இன்னொரு முகத்த காமிச்சா…! அப்புறம் அவ்வளவு தான்!″ என்பது தான்.

உங்களுக்கு இருக்கும் ஒரு முகத்தை என்னால் பார்க்க முடிகிறது.

அந்த நபர் சொன்னபடி மற்றோரு முகம் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதனால் நன்மை இருக்காதோ? எனக்கு தெரியாது.

ஆனால் ஒன்றை உங்களிடம் சொல்ல வேண்டும். எனக்கும் இன்னொரு முகம் இருக்கிறது. என்ன நம்ப முடியவில்லையா?

உண்மையாக தான் சொல்கிறேன். ″எப்படி?″ என உங்களில் சிலர் கேட்கலாம் சொல்கிறேன்.

என்னை வாயுவாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள், சரியாக சொல்ல வேண்டுமெனில் உணர்கிறீர்கள் அல்லவா?

ஆனால் நான் திரவமாகவும் இருப்பேன். இதைத் தான் எனக்கும் மற்றொரு முகம் இருக்கிறது என்றேன்.

இம்ம்… இன்னும் தெளிவாக சொல்கிறேன்.

வெப்பநிலை மற்றும் அழுத்தம் ஆகியனவற்றை மாற்றுவதன் மூலம் வாயுவைத் திரவமாக்க முடியும்.

திரவ நிலையில் இருக்கும் வாயுவைத் ″திரவ வாயு″ என்று அழைக்கலாம் தானே?

நிச்சயம் திரவ வாயுவை உங்களால் பார்க்க முடியும்.

ஆமாம், நீங்கள் ஏதேனும் திரவ வாயுவைப் பார்த்திருக்கிறீர்களா? உடனே பதில் சொல்ல வேண்டியதில்லை. சற்று யோசித்துக் கூடச் சொல்லுங்களேன்.

″எங்களுக்குத் தெரியாதா?″ என சிலர் நினைப்பதை என்னால் உணர முடிகிறது. இருக்கட்டும். நான் சொல்கிறேன்.

திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ பெட்ரோலிய வாயு மற்றும் திரவ இயற்கை வாயு முதலியன திரவமாக்கப்பட்ட வாயுக்களுக்கான சிறந்த உதாரணங்கள் ஆகும்.

வாயு எப்படித் திரவமாக மாறுகிறது?

சரி வெப்பம் மற்றும் அழுத்தத்தால் வாயு எப்படித் திரவமாக மாறுகிறது? பதிலையும் நானே சொல்கிறேன்.

வெப்பநிலையைக் குறைப்பதால் வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறைகிறது,

அதேசமயத்தில் வாயுவின் மீதான அழுத்தத்தை உயர்த்தும் போது, அந்த மூலக்கூறுகளுக்கு இடையிலான தூரம் கணிசமாக குறைகிறது.

இதனால் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக வருவதுடன், அவற்றிற்கிடையே ஈர்ப்பும் ஏற்படுகிறது. இதன் விளைவாக வாயு திரவ நிலைக்கு வருகிறது.

ஆனால், எல்லா வாயுக்களும் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவமாக்கப்படுவதில்லை.

ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தம் தேவைப்படுகிறது.

அதனை முறையே மாறுநிலை வெப்பநிலை மற்றும் மாறுநிலை அழுத்தம் என்று அழைக்கின்றனர்.

ஆங்கிலத்தில் critical temperature-என்றும் critical pressure-எனவும் அழைக்கின்றனர்.

மாறுநிலை வெப்பநிலை என்பது ஒரு வாயு, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழ் இருக்கும் போது மட்டுமே, அதனை அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது, திரவநிலைக்கு வரும்.

உதாரணத்திற்கு கார்பன்டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொள்ளலாம்.

இதன் மாறுநிலை வெப்பநிலை 31 °C. அதாவது, வெப்பநிலை 31 °C-க்கு கீழ் இருக்கும் போது மட்டுமே, போதிய அழுத்தத்தை கொடுக்கும் போது வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு கார்பன்டை ஆக்சைடு மாறும்.

ஒருவேளை, 31 °C அல்லது அதுற்கும் மேல் வெப்பநிலை இருக்குமாயின், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கார்பன்டை ஆக்சைடு வாயுவை திரவநிலைக்கு மாற்ற முடியாது.

மாறுநிலை அழுத்தம் என்பது ஒரு வாயுவை அதன் மாறுநிலை வெப்பநிலையில் திரவமாக்குவதற்குத் தேவையான அழுத்தம் ஆகும்.

எடுத்துக்காட்டாக, கார்பன்டை ஆக்சைடு வாயுவின் மாறுநிலை அழுத்தம் 73 வளிமண்டலங்கள் ஆகும்.

அதாவது, கார்பன்டை ஆக்சைடு வாயு அதன் மாறுநிலை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் பயன்பாட்டால் திரவமாக்க முடியும்.

வாயுக்களுக்கு இடையே இருக்கும் மாறுநிலை வெப்பநிலை வேறுபாடுகளால், சில வாயுக்களை மற்றவற்றை விட திரவமாக்குவது எளிதாக இருக்கிறது.

அதாவது, சில வாயுக்கள் எளிதில் திரவமாகும். பொதுவாக இவற்றின் மாறுநிலை வெப்பநிலை அதிகமாக இருக்கும். உதாரணம் அம்மோனியா வாயு.

சரி, எல்லா வாயுக்களையும் திரவமாக்க இயலுமா?

இதற்குப் பதில் ″முடியும்″ என்பதே.

திரவ வாயு நன்மைகள்

நாங்கள் வாயு நிலையிலிருந்து திரவநிலைக்கு மாறுவதால் உங்களுக்கு என்ன நன்மை?

பல நன்மைகள் இருக்கின்றன. ஆமாம், பல திரவ வாயுக்கள் வெவ்வேறு வழிகளில் உங்களுக்கு பயன்படுகின்றன.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், உணவுப் பாதுகாப்பு, தீயணைப்பான், முதலியனவற்றில் திரவ கார்பன்டை ஆக்சைடு பயன்படுகிறது.

திரவ நைட்ரஜன் ஆற்றல் சேமிப்பு ஊடகமாகவும், குளிரூட்டியாகவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

LPG எனப்படும் திரவ பெட்ரோலிய வாயு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் இந்த தகவல் தெரியும் தானே?

அதேபோல, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் வணிக ரீதியாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

ராக்கெட் இயந்திரங்களில் திரவ ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.

இத்தோடு, திரவ வாயுக்களை கொள்கலனில் சேமித்து வைப்பதற்கும், தொலைதூரம் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கிறது.

மேலும் மீக்குளிர்வியல் (cryogenics) ஆராய்ச்சியில் திரவ வாயுக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஒன்றை மட்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது திரவ வாயு.

என்னோட இந்த மற்றொரு முகத்தால் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்ய ஆசைப்படுறேன்.

அதேபோல நீங்களும் நன்மைகளை மட்டும் செய்வீங்களா?
நல்லதே செய்வீங்கன்னு நம்புறேன்.

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.